சுமன்
கணவன் - மனைவியைப் பிணைத்திருக்கும் இல்லற இழை மீது எந்த வடிவிலும் வேட்டு விழலாம். இதை நகைச்சுவை கலந்து சொல்ல வருகிறது ‘டௌன்ஹில்’ திரைப்படம்.
கணவன், மனைவி, இரு குழந்தைகள் அடங்கிய குடும்பம் அது. விடுமுறையைப் பனிச்சறுக்கு விளையாடிக் கழிப்பதற்காக ஆல்ப்ஸ் மலை பக்கம் செல்கிறது. அங்கே மலைச்சரிவு அருகே உணவகம் ஒன்றில் குடும்பத்தினருடன் வீற்றிருக்கையில், திடீர்ப் பனிச்சரிவு ஒன்று வெடிப்புடன் நிகழ்கிறது. அது செயற்கையாக விளைவிக்கப்பட்ட, கட்டுப்படுத்தப்பட்ட வெடிப்பு என்பதை அறியாத கணவன் தன்னைத் தற்காத்துக்கொள்ளப் பயந்து பதுங்குகிறான். இந்தச் சம்பவம் மனைவியின் மனத்தில் ஆழமான காயத்தை உண்டு பண்ணுகிறது.
காரணம், பனிச்சரிவின் வெடிப்பைக் கேட்டதும் மனைவி, குழந்தைகளைப் பாதுகாப்பதை மறந்துவிட்டு, தன்னையும் தனது செல்ஃபோனையும் பாய்ந்து பாதுகாத்த கணவனின் அல்ப சுயநலத்தால் இல்லறத்தில் விரிசல் விழுகிறது. மனைவி மனம் வெறுத்துப்போகிறார்.
‘எங்களைவிட செல்போன் முக்கியமா?’ எனக் குழந்தைகளும் விலகி நிற்கின்றனர். தவித்துப்போன தந்தை தன்னை நிரூபிக்கத் தலைகீழாக நின்று பார்க்கிறார். மலையேற்றம் சென்ற இடத்தில் ‘மலையேறிய’ மனைவி, குழந்தைகளிடம் மன்றாடித் தவிக்கிறார். கடைசியில் குடும்பம் ஒன்று சேர்ந்ததா, இல்லையா, கணவன் மனைவி உறவு மீண்டும் மலர்ந்ததா என்பதை நகைச்சுவை கலந்து விவரிக்கிறது ‘டௌன்ஹில்’
ஜூலியா லூயிஸ், வில் ஃபெரல், மிரன்டா ஓடோ உள்ளிட்டோர் நடித்திருக்கும் திரைப்படத்தை, நாட் ஃபாக்ஸன், ஜிம் ராஸ் ஆகியோர் இணைந்து இயக்கி உள்ளனர். காதலர் தினமான பிப்ரவரி 14 அன்று வெளியாகிறது.