இந்து டாக்கீஸ்

ஹாலிவுட் ஜன்னல்: ஓர் ஒளிப்படம் காட்டும் வழி

செய்திப்பிரிவு

மறைந்த தாயின் மறைக்கப்பட்ட காதலில் இருந்து பாடம் கற்கும் மகளின் கதையைச் சொல்ல வருகிறது, ‘தி போட்டோகிராஃப்’ திரைப்படம்.

ஒளிப்படக்காரராக புகழ்பெற்ற பெண்மணியான அவர், திடீரென இறந்து போகிறார். தாயின் இழப்பு மகளை நிராதரவாக்குகிறது. அரவணைப்பு ஏதுமற்ற வளர்ப்பால் எளிதில் மனக்காயம் அடைவதும், முன்கோபம் கொள்பவராகவும் வளர்ந்து நிற்கிறாள். தனக்குள் மண்டிய கேள்விகளுக்கு விடை தேடியும் அவர் தவிக்கிறார்.

அந்தக் கேள்விகளுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில், மறைந்த தாய் பத்திரப்படுத்தி வைத்துச் சென்ற அரிய ஒளிப்படம் ஒன்று மகள் கையில் கிடைக்கிறது. அதன் பின்னணியை விசாரிக்கக் கிளம்பியதில் தாயின் இளம் பருவம், அப்போது அவர் சந்தித்த காதல் எனப் பலவற்றையும் அறிய நேரிடுகிறது. அதை நோக்கிய பயணத்தில் மகளின் வாழ்க்கைக்கு வழிகாட்டுவதான புதிய வெளிச்சம், தாயின் கடந்த காலத்திலிருந்து கிடைக்கிறது. அதன் பின்னணியையும், காலவெளியில் ஊடாடும் இருபெண்களின் காதலையும் பேசுகிறது ‘தி போட்டோகிராஃப்’ திரைப்படம்.

இசா ரே, லேகித் ஸ்டான்ஃபீல்ட், செல்ஷியா ப்ரீதி, கெல்வின் ஹாரிசன் உள்ளிட்டோர் நடித்திருக்கும் இந்தப் படத்தை, ஸ்டெல்லா மேகி எழுதி, இயக்கி உள்ளார். வில் பாகர் நிறுவனம் தயாரிப்பில் யுனிவர்சல் பிக்சர்ஸ் நிறுவனம் உலகமெங்கும் படத்தை விநியோகம் செய்கிறது.

இந்த வருடத்தின் காதலர் தினத்தை அலங்கரிக்கும் திரைப்படங்களின் வரிசையில், பெண்களின் பார்வையிலிருந்து காதலைப் போற்றிப் பாட வரும் ‘தி போட்டோகிராஃப்’ பிப்ரவரி 14 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

- சுமன்

SCROLL FOR NEXT