‘அடவி’ மக்களின் போராட்டம்!
அடவி எனப்படும் காட்டையும், மலைகளையும் ஆதிமுதல் அங்கே வாழும் மக்களே காத்து வந்திருக்கிறார்கள். அவர்களை வெளியேற்றி விட்டு, அவற்றின் வளங்களை அடைய நினைக்கும் சமவெளி மனிதர்களின் பேராசையை உண்மைச் சம்பவங்களின் தொகுப்பாகக் காட்ட இருக்கிறதாம் ‘அடவி’ திரைப்படம். ‘நந்தா’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது வளரும் நாயகன் ஆகியிருக்கும் வினோத் கிஷன் நாயகனாகவும் அம்மு அபிராமி நாயகியாகவும் நடிக்கிறார்கள். ‘ஆழ்வார்’, ‘திருடா திருடி’, ‘கண்ணோடு காண்பதெல்லாம்’, ‘கிங்’ ஆகிய படங்களின் ஒளிப்பதிவாளர் ரமேஷ் ஜி இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்து இயக்கியிருக்கிறார். மூணாறு பகுதியில் மொத்தப் படத்தையும் எடுத்திருக்கிறார்களாம்.
சென்னைக்கு வெளியே ‘பச்சை விளக்கு’
இந்திய சாலைப் பாதுகாப்பு பற்றி ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றிருக்கும் மாறன் எழுதி, இயக்கி, நடித்திருக்கும் படம் ‘பச்சை விளக்கு’. “சாலை விதிகளை மதிக்கும் போக்கு படித்தவர் தொடங்கி பாமரர் வரை யாரிடமும் இல்லை. சாலை விபத்துக்களால் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கையில் இந்திய அளவில் தமிழகம் முதலிடத்திலும் உத்திர பிரதேசம் இரண்டாம் இடத்திலும் இருக்கின்றன. இதைப் பற்றிச் செய்த ஆய்வையும் 4 கோடி திறன்பேசிகளைப் பயன்படுத்தும் தமிழ்நாட்டில், பெண்கள், ஆண்கள் ஆகிய இருவருமே அதைப் பாதுகாப்பாக கையாளாதக் காரணத்தால் ஏற்படும் சிக்கல்களையும் ஒருபுள்ளியில் இணைக்கும் பொழுதுபோக்குப் படமாக ‘பச்சை விளக்’கை இயக்கியிருந்தேன்.
பாரதிராஜா தொடங்கி பிரபலங்கள் பலரும் படத்தைப் பார்த்துப் பாராட்டினார்கள். இன்று திரையரங்க வெளியீடு பெரும் சவாலாக இருக்கும் நிலையில், கடந்த ஜனவரி மூன்றாம் தேதி சென்னை, செங்கல்பட்டில் மட்டும் ‘பச்சை விளக்கு’ வெளியானது. தமிழகத்தின் மற்ற மாவட்டங்களிலும் விரைவில் படத்தை வெளியிட இருக்கிறோம். வெற்றி, தோல்வி என்பதைத் தாண்டி, விழிப்புணர்வு ஏற்படுத்த இந்தப் படம் மக்கள் மத்தியில் சென்று சேரவேண்டும்” என்கிறார் படத்தின் இயக்குநர் மாறன்.
விரசம் அல்ல விழிப்புணர்வு!
பாலிவுட்டின் வளரும் கதாநாயகர்களில் ஒருவரான ஆயுஷ்மான் குரானா அறிமுகமான இந்திப் படம் ‘விக்கி டோனர்’. சில ஆண்டுகளுக்கு முன் வெளியாகி தேசிய விருதுகளை அள்ளியது. ரத்ததானம், உடல் உறுப்பு தானம் போலவே விந்து தானமும் பார்க்கப்பட வேண்டும்; அதை விரசமான கண்ணோட்டத்துடன் பார்க்க வேண்டிய அவசியமில்லை என்ற விழிப்புணர்வு தந்த அந்தப் படத்தை தமிழுக்கு ஏற்ப மறு ஆக்கம் செய்திருக்கிறார்கள். தொடர்ந்து நகைச்சுவை காதல் படங்களில் நடித்துவரும் ஹரிஷ் கல்யாண் இதில் நாயகனாக நடித்திருக்கிறார். அவருக்கு ஜோடியாக ‘தடம்’ படத்தில் தோன்றிய தன்யா ஹோப் நடித்துள்ளார். பிரபல தெலுங்கு இயக்குநர் கிருஷிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய கிருஷ்ணா மாரிமுத்து இதை எழுதி இயக்கியிருக்கிறார்.
மூன்றாம் படத்தில் ஏற்றம்!
‘எட்டு தோட்டாக்கள்’, ‘சர்வம் தாளமயம்’ படங்களின் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் அபர்ணா பாலமுரளி. இவருக்கு மூன்றாம் படத்திலேயே முன்னணி நாயகனான சூர்யாவுடன் ஜோடி சேரும் வாய்ப்பு அமைந்துவிட்டதில் குஷியாக வலம் வருகிறார். சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்து முடித்திருக்கும் ‘சூரரைப் போற்று’ படத்தில் இவர்தான் நாயகி. பொம்மி, சுந்தரி என இரட்டைப் பரிமாணங் களில் வருவதாகப் பெருமையுடன் குறிப்பிடு கிறார்.
ஜல்லிக்கட்டுக் காளையாக சூர்யா!
காளைகளைத் துன்புறுத்துகிறார்கள் என்று கூறியே ஜல்லிக்கட்டுக்குத் தடை விதிக்கப்பட்டது. அந்தத் தடை மக்கள் எழுச்சியின் மூலம் தகர்ந்துபோனது தமிழக வரலாறு. ஜல்லிக்கட்டுக் காளைகளுக்கும் அவற்றை வளர்ப்பவர்கள், அடக்க நினைக்கும் வீரர்கள் ஆகிய இரு தரப்பினருக்கும் இடையிலான உறவு என்பது நேசம் வழிந்தோடும் பாரம்பரியம் கொண்டது. இதை அறுபது ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த எழுத்தாளர் சி.சு.செல்லப்பாவின் ‘வாடிவாசல்’ என்ற நாவல் ஓர் ஆவணம்போல் எடுத்துக்காட்டுகிறது. இந்தக் குறுநாவலைத் தழுவியே வெற்றிமாறன் தனது அடுத்த படத்தை இயக்குகிறார்.
எஸ்.தாணு தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ‘வாடிவாசல்’ என்ற நாவலின் தலைப்பையே சூட்டியிருக்கிறார்கள். தந்தையின் உயிரை, ஜல்லிக்கட்டுக் களத்தில் பறித்துவிடுகிறது ஒரு ஜமீன்தாரின் காளை. யாராலும் அடக்க முடியாத அந்தக் காளையை நாயகன் எப்படி அடக்குகிறான் என்பதுதான் கதை. ஜல்லிக்கட்டு காளையை அடக்கும் வீரனாக சூர்யா நடிக்க இருக்கிறார்.