ஒருவரைக் கொல்வதைக் காட்டிலும் கொடியது, அவரை முடக்குவது. வாழும்போதே, மற்றவர்களால் புறக்கணிக்கச் செய்வது இன்னும் கொடியது. அப்படிச் செய்ய, ஒருவருக்கு கிடைக்கும் சர்வ சாதாரண ஆயுதம்தான் அமில வீச்சு.
சின்ன நாடான இலங்கை முதல் வளர்ந்து முன்னேறிய சமூகம் என்று பார்க்கப்படும் இங்கிலாந்துவரை, உலகின் பல நாடுகளிலும் அமில வீச்சு என்னும் குற்றம் இன்றும் நடப்பதுதான் வேதனை. சந்தையில் மலிவான விலையில் சர்வ சாதாரணமாகக் கொடிய அமிலங்கள் கிடைப்பது, பாதிக்கப்படும் வெகு சிலர் மட்டுமே இதை வழக்காகப் பதிவது, வெந்நீர் வீசுவதற்கும் அமிலம் வீசுவதற்கும் இருக்கும் ஒரே மாதிரியான சட்ட நடைமுறைகள் என இந்தக் கொடூரக் குற்றம் நிகழக் காரணங்களாகக் கூறப்படுகின்றன.
இவ்வளவு சிக்கலான ஒரு பிரச்சினையைத் திரையில் சொல்லி விழிப்புணர்வு தந்த படங்கள் மிகக் குறைவு. ஆவணப்படங்கள் நீங்கலாக, தமிழில் வந்த ‘தெய்வ மகன்’, ‘பாவமன்னிப்பு’, ‘தென்றல் சுடும்’ , ‘வழக்கு எண் 18/9’, ‘மாநகரம்’, மலையாளத்தில் சென்ற ஆண்டு வெளிவந்த ‘உயரே’, இந்தியில் வந்த ‘பிக் பிரதர்’ போன்ற சில படங்கள் மட்டுமே இதைப் பதிவுசெய்திருக்கின்றன. ஒரு திரைப்படமாகப் பதிவது என்பதைத் தாண்டி, நாடு தழுவிய ஒரு விழிப்புணர்வையும் ஏற்படுத்தி, அமில வீச்சில் பாதிப்படைந்த ஒரு பெண்ணைப் பிரதான கதாபாத்திரமாக வைத்து வந்துள்ள படம் தான் ‘சப்பாக்’.
நிஜ வாழ்வில், கடந்த 2005-ம் ஆண்டு டெல்லியைச் சேர்ந்த லக்ஷ்மி அகர்வால் அமில வீச்சால் பாதிக்கப்பட்டபோது அவருக்கு வயது 15. உடல், மனம், பொருளாதாரம், சமூகம், பாதுகாப்பு என எல்லா விதங்களிலும் அவர் சிதைக்கப்பட்டார். அதேநேரம் தன் அகம் சிதையாமல் சில ஆண்டுகள் போராடி, அமிலத்தின் விற்பனையில் கட்டுப்பாடும், இந்திய சட்டத்தில் அமில வீச்சுக்குத் தனிப் பிரிவும் கொண்டு வரச் செய்தார். தொடர்ந்து அமில விற்பனைக்கு முழுத் தடை பெறப் போராடிவருகிறார். 2014-ம் ஆண்டு அமெரிக்க அதிபரின் மனைவியிடம் வீர மங்கைக்கான விருதும் 2019-ம் ஆண்டு இந்திய அரசின் விருதும் பெற்றவர். இவரின் வாழ்வில் எதிர்கொண்ட போராட்டங்களின் தொகுப்பே கதை.
படத்தைத் துணிந்து தயாரித்ததுடன், கிட்டத்தட்ட முக்கால்வாசி படத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணாக, கொந்தளிப்பான நடிப்பில் மிளிர்ந்திருக்கும் தீபிகா படுகோனின் பன்முகப் பங்களிப்பை விமர்சனத்துக்கு வெளியே நின்று பாராட்டலாம். இந்தியத் திரையில், நட்சத்திரங்கள் தங்கள் நிறத்தைக் கறுப்பாகக் காட்டி, மாற்றுத் திறனாளியாக, முதுமையான தோற்றத்தில் மட்டுமே வந்திருக்கிறார்கள். வெகு சிலரே, சிதைந்த முகத்தோடு, மோல்டாக உருவாக்கப்பட்ட மாஸ்க் அணிந்தும் நடித்திருக்கிறார்கள். இந்தப் படத்தில் அமிலம் வீசப்பட்டவுடன் தோலில் ஏற்படும் சிவப்பு மாற்றம் முதல், ஏழு அறுவை சிகிச்சைகள் வழியே பழைய நிலைக்கு முகத்தைக் கொண்டுவர முடியாத தவிப்புகள் வரை, வெவ்வேறு நிலைகளில் முதன்மைக் கதாபாத்திரத்தின் ஒப்பனை மாறும் ரசவாதத்தைத் தனது முகத்தில் ஏற்று, மணிக்கணக்கில் ஒப்பனைக்காக நேரம் செலவிட்டு மிகச் நேர்த்தியாகத் திரையில் கொண்டுவர உழைத்திருக்கிறார் தீபிகா.
படத்தின் முகமாக இருக்கும் இவருக்கு அடுத்து அதன் அகமாகச் செயல்பட்டிருக்கும் இயக்குநர் மற்றும் திரைக்கதை ஆசிரியர்களைக் குறிப்பிட வேண்டும். ‘தல்வார்’, ‘ராஸி’ ஆகிய வெற்றிப்படங்களை எடுத்த இயக்குநர் மேக்னா குல்சார், அவருடன் இணைந்து திரைக்கதை எழுதியிருக்கும் அத்திகா சோஹன் ஆகியோர், வெறும் ஆவணமாகத் தகவல்களால் நிரப்பாமல், சம்பவங்களை நல்லதொரு திரைமொழியில் சொல்லியிருக்கிறார்கள். மேலும், அமில வீச்சு தொடர்பாகச் சமூகத்தில் பதிய வேண்டிய விஷயங்களை அழுத்தமாகப் படத்தில் பதிந்திருக்கிறார்கள்.
உணர்வுகளைப் பூட்டியே வாழும் தன்னார்வத் தொண்டு நிறுவன நண்பர் அமோலாக வரும் விக்ராந்த் மாசே, வழக்கறிஞர் அர்ச்சனாவாக வரும் மதுர்ஜீத் சர்கி ஆகியோரின் நடிப்புப் பங்களிப்பு குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டியது.
இந்தியாவில் கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் சுமார் 1,500 அமில வீச்சுச் சம்பவங்கள் நடந்துள்ளன என்ற தகவலை நீங்கள் நம்ப முடியாமல் போகலாம். 2019 டிசம்பர் 7 அன்று கூட ஒரு அமில வீச்சு நடத்தைச் சொல்லி முடியும் இந்தப் படம், நாம் இது வரை பார்க்கத் தவறிய ஒரு சமூக அவலத்தை, உற்றுப் பார்க்கச் செய்திருப்பது, வசூல் நிலவரங்களைத் தாண்டிய இப்படத்தின் வெற்றி எனக் கொள்ளலாம்.