இந்து டாக்கீஸ்

விடைபெறும் 2019: சேர நாட்டுச் சித்திரங்கள் 2019

செய்திப்பிரிவு

டோடோ

ஒரு நல்ல திரைப்படம் என்பது மொழிகளைக் கடந்தது. மொழி மாற்றம் என்ற அவசியம் இன்றி தமிழ் ரசிகர்களால் கொண்டாடப்படுபவை மலையாளப் படங்கள். அங்கும் மசாலாப் படங்களுக்குப் பஞ்சமில்லை. ஆனால், புதிய திறமைகள், நல்ல கதை சொல்லும் முறைகள், நமக்குப் பரிச்சயமில்லாத முகங்கள், நிலப்பரப்புகள், பிராந்தியப் பிரச்சினைகள், நம்பிக்கைகள் என நம் மண்ணோடு ஒத்துப்போகும் அம்சங்களைக் கொண்ட மலையாளப் படங்கள் நமக்கு நெருக்கமாகிவிடுவதில் ஆச்சரியம் ஏதுமில்லை.

தவிர, மலையாளத் திரையுலகம் பெரு நட்சத்திரங்களிடம் மட்டும் சிறைப்பட்டுவிடாமல், அரசியல், உளவியல், குடும்பம், சமூகம், நகைச்சுவை, அறிவியல் புனைவு என வெவ்வேறு தளங்களில் ஆரோக்கியமாகப் பயணித்து வருகிறது. அவ்வகையில் கடந்து சென்ற 2019-ல் மின்னிய மலையாளப் படங்களை மிகச் சுருக்கமாகப் பார்ப்போம்.

கும்பளங்கி நைட்ஸ்

ஒரு திரைப்படத்துக்கு நாயகன், நாயகி போன்ற பழகிப்போன விஷயங்களைக் கட்டுடைத்தது ‘கும்பளங்கி நைட்ஸ்’. தன்னுடைய முதல் திரைப்படம் என்பதால், தானே கதை எழுதுவேன் என்று அடம் பிடிக்காமல் இன்னொருவரின் கதையை இயக்கி ஆச்சரியப்படுத்தியிருந்தார் மது சி.நாராயணன். ஒரு பூச்சரம் தொடுப்பதுபோல நிதானமாக ஆனால் ஆழமாகக் கதாபாத்திரங்களையும் சம்பவங்களையும் நிறுவும் தேசிய விருது பெற்ற திரைக்கதை எழுத்தாளர் ஷ்யாம் புஷ்கரனின் திரைக்கதை, வெவ் வேறு சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்களின் சிறந்த கலை உழைப்பால் தனித்து நின்றது. ஷவுபின் ஷாகிர், பஹத் ஃபாசிலின் பங்களிப்பு குறிப்பிடப் படவேண்டியது. கற்றாழைச் செடியில் பூத்த பூ போல ரசிகர்களைக் கவர்ந்தது இப்படம்.

ஜுன்

சாதாரண குடும்பப் பின்னணியைக் கொண்ட ஒரு பதின்ம வயதுப் பெண்ணின் ஆசைகள், கனவுகள், தனிப்பட்ட குணங்கள், கோபங்கள், குடும்ப அமைப்பு, வருத்தங்கள், சந்தோஷங்கள் என அனைத்தையும் ஒரு சேரச் சொல்லிய திறமையான திரைக்கதை. இந்த உணர்வுகள் அனைத்தையும் நடிப்பில் கச்சிதமாக வெளிப்படுத்தினார் ரஜிஷா விஜயன். ஒரு பெண்ணின் பார்வையில் நடக்கும் சம்பவங்களைத் திரைக்கதை ஆக்கிய லிபின் வர்கீஸ், அஹமத் கபீர் (படத்தின் இயக்குநர்), ஜீவன் பேபி மாத்யூ ஆகிய மூன்று ஆண்களும் பாராட்டப்பட வேண்டியவர்கள். ‘ஜூன்’ - பெண்ணென்னும் நதியின் பயணம்.

லூசிஃபர்

தன்னுடைய 36 வயதில் 100 படங்களைக் கடந்த முன்னணி நாயக நடிகர் பிருத்விராஜ். மோகன்லாலின் தீவிர ரசிகர். நடிகர், திரைக்கதையாசிரியர் முரளி கோபியின் அழுத்தமான எழுத்தில், மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், விவேக் ஓபராய், மஞ்சு வாரியரை வைத்து முதல் முறையாக இயக்கிப் பெரும் வசூல் வெற்றிப் படமாக இதைக் கொடுத்தார். அரசியல், நிழலுலக திரில்லர் படமான ‘லூசிஃபர்’ ஒரு நிழல் நாயகனைத் தழல் வீரம் தெறிக்கச் சத்திரியத்தனதுடன் முன்னிறுத்தி பிரமிக்க வைத்தது.

உயரே

பெண் பைலட் ஆகத் துடிக்கும் பல்லவியின் வாழ்வில் எதிர்பாராத அமில வீச்சுத் தாக்குதல். முகத்துடன் பொசுங்கிய அவளது கனவு என்னவாகிறது என்பதே கதை. இதன் சிறந்த திரைக்கதை (பாபி மற்றும் சஞ்சய்), அறிமுக இயக்குநர் மனு அசோகனின் ஆளுமை, பல்லவியாக நடித்த பார்வதியின் கதாபாத்திர உருமாற்றம் எனப் பல பரிமாணங்களில் மிளிர்ந்தது. அமிலத்தில் பொசுங்காத கனவாக உறுதியுடன் நின்றது ‘உயரே’.

இஷ்க்

ஓர் இரவில், தனிமையில், பிறந்தநாள் கொண்டாட்டத்தின் தொடக்கத்தில் இருக்கும் காதலர்கள், காவலர்கள் என அறியப்படும் இருவரிடம் சிக்குவதும் அதன் விளைவுகளும் கதை. ரத்தீஷ் ரவியின் எழுத்தில் அறிமுக இயக்குநர் அனுராஜ் மனோகரின் இயக்கத்தில் ஷான் நிகம், ஆன் ஷீத்தல், ஷைன் டாம் சாக்கோவின் அட்டகாசமான நடிப்பில் வெளிவந்த படம். கலாச்சார காவலையும் அது தனி மனித வாழ்வில் நிகழ்த்தும் அத்துமீறலையும் ஒரு நேர்த்தியான அமானுஷ்ய படத்துக்கு எந்த விதத்திலும் குறைவில்லாத வகையில் பார்வையாளர்களை யதார்த்தமாகப் பயமுறுத்தியது. ஒரு சமகால சமூகப் பிரச்னையைப் பற்றி இதற்கு முன்னர் இந்த மாதிரி ஓர் அக்கறையான படம் வந்ததில்லை.

வைரஸ்

பெரும் எதிர்பார்ப்புடன் கிட்டத்தட்ட எல்லா மலையாள நட்சத்திரங் களும் பங்களித்த இந்தத் திரைப்படத்தை முஷின் பராரி ஷர்ஃபு, சுஹாஸ் எழுத, பிரபல இயக்குநர் ஆஷிக் அபு இயக்கியிருந்தார். 2018-ல் கேரளாவை உலுக்கியெடுத்த நிஃபா வைரஸ் காய்ச்சலையும் அதை ஒடுக்கிய சுகாதாரத்துறை, தனி நபர்களின் உழைப்பையும் ஒரு உச்சபட்ச மெடிக்கல் த்ரில்லரின் அனுபவத்தோடு சொல்லி நடுங்கவும் வைத்து நம்பிக்கையும் கொடுத்தது ‘வைரஸ்’. சம காலத்தின் முக்கிய நிகழ்வை ஒரு ஆவணப்படம் போலல்லாமல் ஒரு கொலையாளியைக் கண்டுபிடிக்கும் அதே சுவாரசியத்துடன் சொன்ன விதம், இதுவல்லவோ திரைமொழி எனக் கூற வைத்தது.

தண்ணீர் மத்தன் தினங்கள்

பரண் மேல் கிடக்கும் பழைய டிரங்குப் பெட்டியை இறக்கி வைத்துத் திறந்து பார்க்கும்போது கிளர்ந்தெழும் நினைவுகளைப் போல், சின்ன சந்தோஷத் தருணங்களைப் படுசுவாரசியமாகப் பதிவு செய்திருந்தது பதின்ம வயதின் காதலைப் பேசியது ‘தண்ணீர் மத்தன் தினங்கள்’. புத்தகத்தில் வைக்கப்பட்ட மயிலிறகை ஓர் நீண்ட இடைவெளிக்குப் பின் ஸ்பரிசிக்கும் உணர்வைத் தந்த படம்.

ஜல்லிக்கெட்டு

மலையாளத்தில் எந்த இலக்கணங்களுக்குள்ளும் அடங்காத கலகக்கார படைப்பாளி லிஜோ ஜோஸ் பெல்லிசெரி. ‘அங்கமாலி டயரிஸ், ‘ஈ.மா.யோ’ படங்களை இயக்கியவரின் படைப்பு. ஒரு சின்ன மலைக்கிராமத்தில், கொல்லப்படுவதற்குச் சற்று முன், தப்பியோடும் எருமையினால் ஏற்படும் விளைவுகளும் குழப்பங்களும் தான் ‘ஜல்லிக்கெட்டு’. மனிதர்களாகிய நம் சமூகக் கூட்ட மனோபாவமும் வன்முறையும், வேட்டையாடும் ஆதிப் பழக்கமும் மிக நுட்பமாகப் பதிவு செய்யப்பட்ட படமிது. 95 நிமிடங்களில் அசாதாரணமான திரையனுபவம்.

ஆன்ட்ராய்ட் குஞ்சப்பன் வெர்ஷன் 5.25

அறிமுக இயக்குநர் ரத்தீஷ் பாலகிருஷ்ணனின் வெகு அழகான இயக்கத்தில், எளிமையான ஆனால் வலிமையான அறிவியல் புனைகதை தான் இந்த ‘ஆன்ட்ராய்ட் குஞ்சப்பன்’. வெளிநாட்டுக்கு வேலைக்கு போகும் மகன், ஒரு சின்ன கிராமத்தில், தனியே வாழும் முன்கோபமுள்ள தந்தைக்கு உதவியாக ஒரு இயந்திர மனிதனை வைக்க, அதனால் ஏற்படும் மாற்றங்கள்தாம் கதை. அதிகபட்சமாகச் சிரிக்கவும், அதே சமயம் முதுமையில் தனிமையின் வெக்கையை இந்தப் படம் வெகு அழகாகச் சித்தரித்திருக்கிறது. சுராஜ் வெஞ்ஜரமூடு எனும் 43 வயது நடிகர் 70 வயது அப்பாவாக நடிப்பில் வெளுத்திருந்தது படத்தை மேலும் மெருகூட்டியது.

ஹெலன்

தன் தந்தையோடு தனியே வாழும் ஹெலன், தன் காதல் பிரச்சினையோடு ஒரு நாள் தான் வேலை பார்க்கும் உணவகத்தின் குளிர்பதன அறையில் சிக்கிக்கொண்டு, உயிர் பிழைக்கப் போராடும் கதை. வெளிப்பார்வைக்கு உயிர் பிழைக்கும் போராட்டமாகத் தெரிந்தாலும், ஒரு சஸ்பென்ஸ் சினிமாவுக்கான அத்தனை அம்சங்களோடு பதைபதைக்கவும் வைத்தாள் இந்த தப்பிப் பிழைத்த தாரகை. அன்னா பென்னின் முதிர்ச்சியான நடிப்பில் மதுக்குட்டி சேவியரின் இயக்கத்தில் ‘ஹெலன்’ உண்மைக்கு வெகு அருகில் நிற்கும் உண்மை சம்பவத்திலிருந்து பிறந்தவள்.

SCROLL FOR NEXT