க.நாகப்பன்
தலித் திரைப்படங்களை அடிப்படையாக வைத்து ஜமாலன் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே தலித் சினிமா. ஆனால், அவர் தலித் திரைப்படங்கள் குறித்து மட்டும் பதிவு செய்யவில்லை. தலித் என்கிற சொல்லின் வரலாறு, தலித் அரசியல், தலித் சினிமாவுக்கான வரையறை, தலித் தரப்பை தவறாகச் சித்தரித்த படங்கள், தலித் சினிமாவின் போதாமை ஆகியவற்றையும் கச்சிதமாகக் கூறியுள்ளார்.
தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி, மராத்தி, பெங்கால், குஜராத்தி உள்ளிட்ட மொழிகளில் வெளிவந்த 12 தலித் திரைப்படங்கள் குறித்து கதைச்சுருக்கம், திரைப்பட விவரங்கள், விருதுகள், திறனாய்வு என்று நான்கு வகையான வடிவங்களில் தலித் சினிமாவை அணுகியிருக்கும் விதம் தேர்ந்த ஆய்வாளருக்கான அடையாளத்தைக் கொடுக்கிறது. தலித் சினிமாவின் அழகியல், அரசியல், அறவியலைப் பேசும் ஜமாலன் இது மாற்று சினிமா மட்டுமல்ல, மாற்றத்துக்கான சினிமா என்பதையும் அப்படங்களின் வழியாக நிறுவுகிறார்.
‘அட்டகத்தி’, ‘மெட்ராஸ்’,‘கபாலி’,‘காலா’ஆகிய நான்கு படங்களின் வழியாக தலித் அரசியலைப் பேசிய பா.இரஞ்சித்தின் திரைப்படங்கள் குறித்த ஆய்வை நுட்பமாகப் பதிவுசெய்துள்ளார். வாத - விவாதங்களைத் தாண்டி தலித் சினிமாவைப் பொறுத்தவரையில் பா.இரஞ்சித்தின் இடம் முக்கியமானது என்பதையும் ஆதாரபூர்வமாக விவரிக்கிறார்.
தலித் சார்ந்த திரைப்படங்கள் என்று பார்த்தால் தமிழில்தான் ‘நந்தனார்’ கதை என்ற பெயரில் முதல் படம் வந்தது. தலித்துகள் எண்ணிக்கையில் அதிகம் உள்ள நான்காம் மாநிலம் தமிழகம். ஆனால், இங்குதான் தலித் சினிமாக்கள் அதிகம் வரவில்லை என்ற வரலாற்று முரணையும் சுட்டிக் காட்டுகிறார்.
‘பாரதி கண்ணம்மா’, ‘பேராண்மை’, ‘ஜீவா’, ‘மாவீரன் கிட்டு’, ‘உறியடி’, ‘பரியேறும் பெருமாள்’, ‘மனுசங்கடா’, ‘அசுரன்’ உள்ளிட்ட படங்களில் பேசப்பட்டிருக்கும் தலித் கதாபாத்திரச் சித்தரிப்பு, அரசியல் வாழ்நிலை குறித்தும் நூலாசிரியர் பதிவுசெய்திருக்கும் விதம் பாராட்டுக்குரியது. தலித் பிரச்சினைகளைக் கொண்டு செல்வதற்குச் சில வேளைகளில் வணிகரீதியான சமரசங்கள் தேவைதான் என்பதை ‘அசுரன்’ படத்தைச் சான்றாக வைத்துக் கூறியிருப்பது பொருத்தமாக உள்ளது.
மிகப் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்திய ‘ஃபன்றி’, ‘சாய்ராத்’ ஆகிய இரு மராட்டியப் படங்களையும் திறனாய்வு செய்திருப்பது நூலின் தனிச்சிறப்பு. சினிமாத் துறையைச் சார்ந்தவர்களும் மாணவர்களும் வெகுஜனமக்களும் பார்க்க வேண்டிய தலித் திரைப்படங்கள், ஒரு திரைப்படத்தை அணுகுவது எப்படி என்பது உள்ளிட்ட பார்வைகளையும், தலித் சினிமா குறித்த அறிமுகத்தையும் ஜமாலன் முன் வைக்கிறார். தலித் திரைப்படங்கள் குறித்து ஆய்வு செய்பவர்களுக்கு இந்நூல் பெரிதும் துணை புரியும்.