திருமண வாழ்வின் துயரமான தருணம் என்பது, மனமொத்துப் பிரிவதாகத்தான் இருக்கும். வெற்றிகரமான தம்பதி, விவகாரத் தினை நோக்கி நகரும் துடிப்பான நிமிடங்களைச் சொல்கிறது நெட்ஃபிளிக்ஸின் பிரத்யேக திரைப்படமான 'மேரேஜ் ஸ்டோரி'.
சார்லி, நிகோல் என்ற இளம் தம்பதியைச் சுற்றிக் கதை சுழல்கிறது. சார்லி மேடை நாடக இயக்குநர். அவரது மனைவி நிகோல் அதே நாடகக் குழுவில் நடிகையாக இருக்கிறார். எட்டு வயது மகனையும் உள்ளடக்கிய அவர்களின் இனிமையான வாழ்க்கை, எதிர்பாராத தருணமொன்றில் விரிசலிடுகிறது.
தம்பதியர் இடையிலான பிரச்சினைகளைப் பேசித் தீர்க்க, ஆலோசகரைச் சந்திக்கிறார்கள். மனம் விட்டுப் பேசுவதில் இடர்பாடு எழ, எழுதி வந்து படிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். நிகோல் அதனை மறுத்து வெளியேறுகிறாள். சார்லி அதன் பின்னணியை அறியாது போகிறான். அதிகரிக்கும் விரிசல் அடுத்தக் கட்டமாக விவாகரத்துக் கோரி நீதி மன்றத்தை நாடச் செய்கிறது.
தாங்கள் விரும்பாத விவாகரத்தை நோக்கி இருவரும் கைகோத்துப் பயணிக்கிறார்கள். வெளிவட்டத்தில் அவர்கள் எதிர்பார்த்தது நடக்கிறது. ஆனால் உள்ளுக்குள் வேறாக வெம்பித் தணிகிறார்கள். கசப்பான நிஜமொன்று, அவர்கள் இருவரும் எழுப்பிய ஆத்மார்த்த உறவின் மீதான இருளாகக் கவியும்போது கதை முடிகிறது.
மகிழ்வான இல்லற வாழ்வின் எதிர்பாரா விநாடியில் அனைத்தும் பொய்யென்று உணரப் படும்போது உண்டாகும் வேதனை, பிரிவது என முடிவெடுத்த பின்னரும் பரஸ்பரம் அடுத்தவரைப் பற்றி வெகுவாக விசனம் கொள்வது என ஒரே வீட்டில் உருளும் தனி உலகங்களாய் வரும் தொடக்கக் காட்சிகள் இறுக்க மானவை. இந்தப் புள்ளியில் ஒன்று சேர முயன்றும், தறிகெட்ட உறவு ஒட்ட மறுத்து உதைப்பதும், பிரச்சினையைத் தீர்ப்பதற்கான முனைப்புகள் அனைத்தும் சிக்கலை மேலும் அதிகரிக்கச் செய்வதுமாக அடுத்தகட்ட காட்சிகள் ஆழமாய் செல்கின்றன.
காட்சி மொழிக்காக அதிகம் மெனக்கெடாது, ஆண், பெண் உணர்வுகளில் அதிகம் துழாவுகிறது ‘மேரேஜ் ஸ்டோரி’ கதை. கணவன்-மனைவியாக ஆடம் ட்ரைவர் - ஸ்கார்லெட் ஜோஹன்சன் நடித்துள் ளனர். மனைவியின் தொலைபேசி எண்ணைக்கூடச் சொல்லத் தெரியாத கணவனைக் குறைபடும் இடத்திலும், உறவை முறிப்பதென முடிவான பின்னர் பொதுவில் இயல்பு தரிப்பதும், தனிமையில் வெடித்து அழுவதுமாய் ஸ்கார்லெட் ஜோஹன்சன் நடிப்பில் பிரமாதப்படுத்தியிருக்கிறார்.
உணர்வுகளை மென்று விழுங்கும் கணவன் கதாபாத்திரத்தில் வரும் ஆடம் ட்ரைவர் நடிப்பும் தனித்துவம். தம்பதியரைத் தனியாகப் பேச அனுமதிக்கும் கடைசி வாய்ப்பில், மனதிலிருந்த கசப்பு வெளிப் பட்டதில் மனைவியின் காலைக் கட்டிக்கொண்டு கதறுவதும் மனைவி வாசிக்க மறுத்த உள்ளக் கிடக்கையை கடைசி காட்சியில் வாசிக்க நேரும்போது உணர்ச்சி வசப்படுவதுமாய் நிறைவான கதாபாத்திரத்தில் வாழ்ந்திருக்கிறார்.
உணர்வுபூர்வமானத் திரைப்படத் தில் ஆங்காங்கே வரும் நகைச்சுவை காட்சிகள் ரசிக்க வைக்கின்றன. முக்கியமாக விவாகரத்து கோரும் தம்பதியர் வழக்கறிஞர்களிடம் மாட்டிக்கொண்டு தவிக்கும் இடங்கள் கதைக்குப் பொருந்திப்போகின்றன. ஸ்கார்லெட், மூக்கைச்சிந்தி அழும் பாவனையிலே அதிகம் இருப்பதும், மேடை நாடக அனுபவத்தைத் திணிக்கும் பின்னணி இசையும் துருத்தல்கள்.
மண வாழ்வில் இணைவதை விட, சட்டப்பூர்வமாகப் பிரிவதில் வெளிப்படும்டர்பாடுகள், நடைமுறைச் சிக்கல்களைப் போகிற போக்கில் அலசுகிறார்கள். அமெரிக்காவின் திறந்த கலாச்சாரம் முகத்தில் அறைவதைத் தவிர்த்து விட்டால், கணவன் மனைவி இடையிலான விவாகரத்து கதை எல்லா மண்ணுக்கும் உகந்ததாகிறது.
லாரா டெர்ன், ஆலன் அல்டா, ரே லியோட்டா உள்ளிட்டோர் உடன் நடித்திருக்கும் திரைப்படத்தினை நோவா பாம்பாக் இயக்கி உள்ளார். டொரன்டோ, வெனிஸ் என சர்வதேசத் திரைப்பட விழா மேடைகளை அலங்கரித்த ‘மேரேஜ் ஸ்டோரி’, பரீட்சார்த்த திரையரங்குக் காட்சிகளைத் தொடர்ந்து டிசம்பர் 6 முதல் நெட்ஃபிளிக்ஸில் காணக்கிடைக்கிறது. திருமண நாள், இணையின் பிறந்த நாள், தொலைபேசி எண்ணை அடிக்கடி மறந்துவிடும் பேர்வழிகள் பார்க்கவேண்டிய திரைப்படம்.