பெண்களை மையமாகக் கொண்ட நகைச்சுவைத் திரைப்படமாக வெளியாக உள்ளது, ‘லைக் எ பாஸ்’. சகலத்திலும் துருவங்களாக இயங்கும் தோழியர் இருவர், ஒன்றிணைந்து ஓர் அழகு நிறுவனத்தைத் தொடங்குகின்றனர். இருவரில் ஒருவர் நடைமுறை சார்ந்து நிதானமாக நிறுவனத்தைக் கொண்டுசெல்ல விரும்புகிறார். மற்றொருவர், சடுதியில் சம்பாதிக்க ஆசைப்படுகிறார். இந்த முரண்பாடுகளால் முளைக்கும் பிரச்சினைகள், நிறுவனத்தை நொடிக்கச் செய்கின்றன. அழகுப் பொருள் சந்தையைக் கையில் வைத்திருக்கும் மூன்றாம் பெண்மணி, சில நிபந்தனைகளோடு தோழியருக்கு உதவ முன்வருகிறார்.
அந்த நிபந்தனைகளில் முக்கியமானது, அழகு நிறுவனத்தின் தலைவராக இருந்து பழகுவது. இந்தப் புதிய தலையீட்டால் பழைய கடன்களுடன் பல்வேறு பிரச்சினைகளும் பூதாகாரமாக எழுகின்றன. தாங்கள் கட்டமைத்த நிறுவனம் கைநழுவிப் போகும் ஆபத்துடன், எதிர்காலம் பாழாவதைத் தவிர்க்க தோழியர் இருவரும் போராடுகின்றனர். தங்கள் அழகு நிறுவனத்தின் மீது படியும் அழுக்கைக் களைந்து அவர்கள் மீண்டார்களா என்பதை, நகைச்சுவையுடன் சொல்கிறது ‘லைக் எ பாஸ்’ திரைப்படம்.
தோழியராக டிஃபனி ஹேடிஸ், ரோஸ் பர்ன் ஆகியோர் நடிக்க, இவர்களிடம் ஆதிக்கம் செலுத்தும் பெண்மணியாக சல்மா ஹெய்க் தோன்றுகிறார். பில்லி போர்டர், நடாஷா ரோத்வெல் உள்ளிட்டோர் உடன் நடித்திருக்கும் திரைப்படத்தை மிகெல் அர்டேடா இயக்கி உள்ளார். பாராமவுண்ட் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிடும், ‘லைக் எ பாஸ்’ திரைப்படம் ஜனவரி 10 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது.