கன்னடப் படவுலகில் ‘கிரிக் பார்ட்டி’ என்ற படத்தில் அறிமுகமாகி, ‘கர்நாடகா கிரெஷ்’ என்று ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் ரேஷ்மிகா மந்தனா. முதல் படநாயகன் ரக்ஷித்துடன் திருமண நிச்சயதார்த்தம் வரை வந்தார். ஏனோ, பின்னர் இருவரும் பிரிந்தனர்.
இந்தப் பிரிவுக்கு, தெலுங்குப் படவுலகில் ரேஷ்மிகாவுக்குக் கிடைத்த அதிரடியான ஏற்றமே காரணம் என்கிறார்கள். விஜய் தேவரகொண்டாவின் ‘கீதகோவிந்தம்’, ‘ டியர் காம்ரேட்’ படங்களில் நடித்து டோலிவுட்டின் முன்னணிக் கதாநாயகி ஆன ரேஷ்மிகா, தற்போது மகேஷ்பாபுவின் ‘சரிலேறு நீக்கெவரு’ படத்தில் அவருக்கு ஜோடி. கன்னடத்திலிருந்து வந்தாலும் கன்னடப் படங்களையும் விடாமல் தெலுங்குப் படங்களில் ஆதிக்கம் செலுத்திக் கொண்டே, தற்போது தமிழ் சினிமாவிலும் நுழைந்திருக்கிறார்.
‘ரேமோ’ படத்தின் இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி கதாநாயகனாக நடித்துவரும் ‘சுல்தான்’ படத்தில் அவருக்கு ஜோடியாக தமிழில் அறிமுகமாகிறார். ‘சுல்தான்’ படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு திண்டுக்கல்லில் நடந்து முடிந்திருக்கிறது. இந்நிலையில், கார்த்தியுடன் இறுதிக் கட்டப் படப்பிடிப்பில் இணைந்து நடிக்க இருந்தார். ஆனால், நான்கு படங்களில் மாறி மாறி நடித்துவந்த ரேஷ்மிகா தற்போது டெங்குக் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருகிறாராம். ரேஷ்மிகாவுக்காகக் காத்திருக்கிறது ‘சுல்தான்’ படக்குழு.
‘கோப்ரா’வாக மாறிய விக்ரம்
‘டிமாண்டி காலனி, ‘இமைக்கா நொடிகள்’ படங்களைத் தொடர்ந்து அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நாயகனாக நடித்து வருகிறார். விக்ரமின் 58-ம் படமாக விறுவிறுப்பாகப் படப்பிடிப்பு நடந்துவரும் இதற்கு ‘கோப்ரா’ என்று தலைப்பு சூட்டி, அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். லலித்குமாரின் செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் தயாரிக்கும் இப்படம், தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் உருவாகி வருகிறது. இதில் விக்ரமுக்கு ஜோடி ஸ்ரீநிதி ஷெட்டி. இவர்களுடன் கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான், கே.எஸ்.ரவிகுமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள். படத்துக்கு இசை ஏ.ஆர்.ரஹ்மான்.
மக்களின் விருதுக்காக..
17-ம் சென்னை சர்வதேசப் படவிழாவில், தமிழ்ப் படங்களுக்கான போட்டிப்பிரிவுக்கு அதிகாரபூர்வமாகத் தேர்வுபெற்றது ‘பிழை’திரைப்படம். டர்னிங் பாயிண்ட் புரொடக்ஷன்ஸ் ஆர். தாமோதரன் தயாரிப்பில், ராஜவேல் கிருஷ்ணா எழுதி இயக்கியிருக்கும் இப்படம், ஏழ்மை நிலையில் வளரும் மூன்று பள்ளிச் சிறுவர்கள், அவர்களைக் குறித்துப் பெரிய கனவுகளை வரித்துக்கொள்ளும் மூன்று பெற்றோர்களின் கதையாக உருவாகி இருக்கிறது.
“திரைப்படவிழா போட்டிப் பிரிவுக்குத் தேர்வானதையே பெரிய கௌரமாக நினைக்கிறோம். நடுவர்கள் சிறப்பு விருதுக்கு இறுதிச் சுற்றுவரை எங்கள் படம் முன்னேறியதை அறிந்து மகிழ்ந்தோம். மக்களின் மனங்களை வெல்வதுதான் மிக முக்கியமான விருது.
அது எங்கள் படத்துக்குக் கண்டிப்பாகக் கிடைக்கும். ஏனென்றால் இது நடந்த கதை, ஊர்தோறும் நடந்துகொண்டிருக்கும் கதை” என்கிறார் இந்தப் படத்தின் இயக்குநர் ராஜவேல் கிருஷ்ணா. இந்தப் படத்தில் சார்லி, ஜார்ஜ் மரியான், மைம் கோபி ஆகிய மூவரும் ஏழை அப்பாக்களாகப் போட்டி போட்டு நடித்திருக்கிறார்களாம். வரும் ஜனவரி 3-ம் தேதி வெளியாக இருக்கிறது ‘பிழை’.
பயமுறுத்தும் பிந்து மாதவி!
நடிப்புத்திறனும் தோற்றப் பொலிவும் கொண்ட நடிகைகளின் பட்டியலில் பிந்து மாதவிக்கு இடமுண்டு. ‘கழுகு 2’ படத்தில் சிறப்பாக அவர் நடித்திருந்தபோதும் அவருக்கு அது வெற்றியாக அமையவில்லை. தற்போது அவர் நாயகியாக நடித்துவரும் ‘மாயன்’ திரைப்படத்தின் முதல் பார்வை வெளியாகி ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்திருக்கிறது.
சிவனையும் மாயர்களையும் மையமாகக் கொண்டு, பிரம்மாண்ட விஷுவல் எஃபெக்ட் காட்சிகளுடன் தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் தயாராகி வருகிறதாம் இந்தப் படம். சன் டிவியில் ‘நாம் ஒருவர்’ நிகழ்ச்சியை இயக்கிய கவனம்பெற்ற ராஜேஷ் கண்ணா இயக்கி வருகிறார். மலேஷிய நடிகர் வினோத் மோகன் நாயகனாக அறிமுகமாகும் இந்தப் படத்தை, இந்தியாவின் ஃபாக்ஸ் அண்ட் க்ரோ ஸ்டுடியோஸ், மலேசியாவின் டத்தோ கணேஷ் மோகன சுந்தரம் இணைந்து தயாரித்து வருகிறார்கள்.
கார்த்தி அடுத்து
கதை சர்ச்சை, கலவையான விமர்சனங்கள் என ‘ஹீரோ’ படத்துக்குச் சிக்கல்கள் வந்தாலும் வசூலில் குறை வைக்கவில்லை என்கிறார்கள் பாக்ஸ் ஆபீஸ் நிபுணர்கள். இதற்கிடையில் ‘ஹீரோ’ படத்தின் இயக்குநர் தனது அடுத்த படத்துக்கான வேலைகளில் பிஸியாகிவிட்டார். கார்த்தி நடிப்பில் வெளிவந்த 'தேவ்' படத்தைத் தயாரித்தது பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம்.
அந்த நிறுவனத்துக்கு மீண்டும் ஒரு படத்தில் நடித்துக் கொடுக்கிறார் கார்த்தி. அதைத்தான் மித்ரன் இயக்குகிறார். இதில் கார்த்திக்கு இரட்டை வேடம். தற்போது நீளமான முடியை வளர்த்திருக்கும் கார்த்தி, 'பொன்னியின் செல்வன்' படத்தில் நடிக்க இருக்கிறார். அதே நீளமான முடிகொண்ட தோற்றத்துடன் மித்ரன் படத்தில் இடம்பெறும் இரட்டைக் கதாபாத்திரங்களில் ஒன்றில் நடிக்க இருக்கிறாராம்.