இந்து டாக்கீஸ்

நடிப்பு என்பது நடிப்பு மட்டுமே இல்லை!- கூத்துப் பட்டறை ஸ்ரீதேவி நேர்காணல்

கல்யாண்குமார்

கூத்துப் பட்டறை பல நடிகர்களை சினிமாவுக்குத் தந்திருக்கிறது. அந்த வரிசையில் டீவிரிக்ஷா என்கிற ஆனந்தக்கூத்து டிரஸ்டும் சேர்ந்துகொண்டுள்ளது. கடந்த ஐந்தாண்டுகளில் வெளியான பல திரைப்படங்களில் டீவிரிக்‌ஷாவின் நடிகர்கள் குணச்சித்திரங்களாகக் கலக்க ஆரம்பித்திருக்கிறார்கள். இதைத் தலைமையேற்று நடத்தில் வருபவர் க.ஸ்ரீ தேவி. இவரும் கூத்துப் பட்டறையிலிருந்து வந்தவர்தான். ஷங்கர் இயக்கத்தில் வெளியான ‘நண்பன்’ படத்தில் ஜீவாவின் அக்காவாக நடித்திருந்தாரே அதே ஸ்ரீ தேவிதான்.

ஒரு திரைப்படத்துக்காகத் தேர்வு செய்யப்படும் நடிகர்கள் குழுவுக்குப் பயிற்சிப் பட்டறை நடத்துவது, சினிமாவில் நடிக்க வாய்ப்புத்தேடும் முன்பு நடிப்புத் திறனை மேம்படுத்திக்கொள்ள விரும்புகிறவர்களுக்குப் பயிற்சி அளிப்பது, புதிய தலைமுறை அறியாத பழம்பெரும் நாடகப் பிரதிகளை மீண்டும் நவீன நாடக அரங்கியல் மொழியில் மேடையேற்றுவது என வெற்றிகரமாக இயங்கி வரும் ஸ்ரீ தேவியைச் சந்தித்தோம்.

கூத்துப் பட்டறையிலிருந்து வெளியே வருபவர்கள் பெரும்பாலும் சினிமாவில் நடித்துப் புகழ்பெறுவதுதான் வழக்கம். நீங்கள் தனியே ஒரு பயிற்சிப் பட்டறை தொடங்க வேண்டும் என்று ஏன் நினைத்தீர்கள்?

கூத்துப் பட்டறை நிறுவனர் நா. முத்துசாமி சாரும் எனது அப்பாவும் கொடுத்த தைரியம்தான் காரணம். குடியாத்தம் அருகில் உள்ள கோவிந்தாபுரம் எனது சொந்த ஊர். வீட்டில் நாங்கள் நான்கு சகோதரிகள். “மற்றவர்களைச் சார்ந்திருக்காதீர்கள். ஆண்கள் செய்யும் எல்லா வேலைகளையும் பெண்களும் செய்ய முடியும். எதற்கும் தயங்காதீர்கள்” என்று அப்பா ஊக்கம் தந்தார்.

நான் பத்தாம் வகுப்பு படித்தபோது வேலூரில் இயங்கிய வீதி நாடகக் குழுக்களோடு பரிச்சயம் ஏற்பட்டது. வீதி நாடகங்களில் நடிக்க ஆரம்பித்தேன். அப்போது கூத்துப் பட்டறையில் பயிற்சிபெற்ற குமரகுருதாசன் எங்களுக்கு பயிற்சி அளிக்க வந்திருந்தார். அவரைச் சந்தித்தது ஒரு குக்கிராமத்தில் இருந்த எனக்குத் திருப்புமுனையாக அமைந்தது. அவர் மூலம்தான் நானும் எனது தோழியும் சென்னைக்கு வந்து கூத்துப் பட்டறையில் சேர்ந்தோம்.

கூத்துப் பட்டறையில் கிடைத்த அனுபவம் எப்படிப்பட்டது?

“இரண்டு பெண்கள் துணிவுடன் கிராமத்திலிருந்து நடிப்பு பயிற்சி பெற வந்திருக்கிறீர்களே.. சந்தோஷமாகவும் ஆச்சரியமாகவும் இருக்கிறது!” என்று எங்களை உடனே உற்சாகப்படுத்தி முத்துசாமி சார் சேர்த்துக்கொண்டார். அங்கே அலுவலக வேலைகளைச் செய்துகொண்டு பயிற்சியும் பெற்றோம். பயிற்சி பெறுவதற்காக எங்களுக்கு உதவித்தொகை வழங்கியது கூத்துப் பட்டறை.

அங்கே நிறைய வெளிநாட்டுக் கலைஞர்கள் வந்து செல்வார்கள். அப்படி வந்தவர்களில் இஸ்ரேலில் இருந்து வந்த கில் ஆலன், திருமதி ரூத், கோஸ்டாரிக்காவிலிருந்து வந்த எட்கர், ஜெர்மனியிலிருந்து வந்த திருமதி. நீலியா வெக்சல், ஆகியோர் இங்கே பயிற்சிப் பட்டறை நடத்தினார்கள். அவற்றில் பங்குபெறும் அரிய வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அதன் பிறகு நிறைய நாடகங்களில் நடிக்கும் வாய்ப்பும் அமைந்தது. நான் கற்றுக்கொண்ட உத்திகள் எனக்கு நடிக்கும் ஆற்றலைத் தந்ததோடு நின்றுவிடவில்லை.

அபாரமான தன்னம்பிக்கை, எதையும் செய்ய முடியும் என்கிற மன உறுதி ஆகியவற்றோடு மட்டற்ற மனமகிழ்ச்சியையும் தந்தது. மனச்சோர்வு என்பதே இல்லை. நடிப்புக் கலை நடிப்பாக மட்டும் சுருங்கிவிடுவதில்லை என்பதை உணர்ந்துகொண்டேன். எனவேதான் நடிப்பையும் அதைத் தாண்டி நான் உணர்ந்த தன்னிலை வளர்ச்சியையும் மற்றவர்களுக்கும் சொல்லித்தர வேண்டும் என்று டீவிரிக்‌ஷாவைத் தொடங்கினேன்.

இன்று சினிமா நடிப்புக்கென்று ஒரு வாரம், பத்து நாட்கள் என பலர் ’ஃபாஸ்ட் டிராக்’ பயிற்சி நடத்துகிறார்களே, இதிலிருந்து உங்கள் பயிற்சி எந்த வகையில் வேறுபட்டது?

மற்றவர்களைப் பற்றி என்னால் எதுவும் சொல்ல முடியாது. ஆனால் டீவிரிக்‌ஷாவின் சிறப்புகளை நிறைய சொல்ல முடியும். நமது பாரம்பரியக் கலைகளான தெருக்கூத்து, சிலம்பம், வில்லுப்பாட்டு ஆகிய உத்திகளைப் பயன்படுத்தி மாணவர்களுக்கு நாடகப் பட்டறை நடத்துகிறோம். பயிற்சியின் இறுதியில் கேமராவுக்கு இணக்கமாக எப்படி நடிப்பது என்பதையும் கற்றுத் தருகிறோம். எங்களது பயிற்சியின் முக்கிய அம்சம், உடலையும் மொழியையும் கருவிகளாக எப்படி எல்லாம் பயன்படுத்த வேண்டும் என்பதைச் சொல்லிக் கொடுப்பதுதான். இதற்காகவே பாரம்பரிய நாடகப் பிரதிகள், நவீன நாடகப் பிரதிகள் அகிய இரண்டிலுமே மாணவர்களுக்கு பயிற்சி அளித்து அந்த நாடகங்களை மேடையேற்றுகிறோம். இந்த நாடகங்களைப் பார்வையாளர்களுக்கு இலவச அனுபவமாகக் கொடுக்கிறோம்.

இதுவரை ஒரு பைசாகூட டிக்கெட் கட்டணம் வாங்கியது கிடையாது. இதுவரை பத்து படைப்புகளை மேடையேற்றியிருக்கோம். எல்லாமே இப்படித்தான். டீவிரிக்‌ஷா ஆனந்தக் கூத்து டிரஸ்ட் லாபம் ஈட்டும் அமைப்பு கிடையாது. தரமான திறமைகள் நம்ம தமிழ் திரைப்படம், நாடகம், தொலைக்காட்சிக்கு கிடைக்கணும். தொழில்முறையாக நடிக்க விரும்பாதவங்களுக்கு இந்தப் பயிற்சி ஆனந்தமா அமையணும், தன்னம்பிக்கை தரணும். அவ்வளவுதான். என் மாணவர்களிடம் எங்கள் பயிற்சி பற்றி கேட்டுப்பாருங்கள். இங்கே நடிப்புத் திறனை வளர்த்துக்கொண்ட பிறகு நடிப்பு என்பது நடிப்பு மட்டுமே இல்லைன்னு சொல்லுவாங்க.

உங்கள் பட்டறையில் இப்போது என்ன நடந்துகொண்டிருக்கிறது?

அல்லி சரித்திரம். சங்கரதாஸ் சுவாமிகள் எழுதிய நாடகம். அதை எடுத்துப் பண்ணும்போது ரொம்பவும் கர்வமாக உணர்றோம். தமிழ் நாடகக் கலையை வளர்த்தெடுத்தவருடைய வார்த்தைகளை நாங்க பேசறோம். அவருடைய நாடக வடிவிலேயே அவர் எழுதிய மொழியிலேயே நாடகத்தை அமைக்கிறோம், பழகுகிறோம்.

அது மாணவர்களுக்கும் ரொம்ப குஷியான ஒரு விஷயம். நம்முடைய நவீன நாடகத் தந்தை நமக்குத் தந்துட்டுப்போன நாடகங்களைப் பழமை மாறாமல் போடும்போது நாடகம் இன்னும் உயிர்க்கும். தமிழ் வளரும். நம்முடைய வரலாற்றில் இடம்பெற்ற நாடகங்கள் புதிய தலைமுறை நடிகர்களால மக்களுக்கு மறுபடியும் தெரியவரும். அதுவே புதுப் பரிமாணமாக இருக்கும். இதைத் தொடர்ந்து செய்வோம். ’

SCROLL FOR NEXT