இந்து டாக்கீஸ்

விடைபெறும் 2019: பெரிய படங்களின் ஆண்டு!

செய்திப்பிரிவு

தமிழ் சினிமாவில் ‘பெரிய படம்’, ‘சிறிய படம்’ என்ற இருமை எப்போதும் கட்டமைக்கப்படுவதுண்டு. பெரும் பொருட்செலவில் எடுக்கப்படும் படங்களுக்கும் பெரிய படம் என்ற அடைமொழியை அளிக்கலாம். அதேபோல், இன்று அதிகச் சம்பளம் வாங்கும் பெரிய நடிகர்களுக்குக் கொடுக்கப்படும் சம்பளத் தொகை காரணமாகவே அவர்களுடைய படங்கள் பெரிய பட்ஜெட் படங்களாகி விடுகின்றன.

எனவே, வணிக மதிப்பைக் கொண்ட நட்சத்திர நாயகர்கள் (ஒரு சில நாயகிகள்) முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்து வெளிவரும் படங்களையே பெரிய படங்கள் என்று எடுத்துக்கொள்ளலாம். இப்படங்களே ‘பெரிதாக எதிர்பார்க்கப்படும்’ படங்களாகின்றன. 2019-ல் வெளியான பெரிய படங்களில் அவை உருவாக்கிய எதிர்பார்ப்பை நிறைவேற்றியவை எவை, ஏமாற்றியவை எவை என்று பார்க்கலாம்.

தமிழ் சினிமா வணிகக் கணக்கைப் பொறுத்தவரை பொங்கலை ஒட்டிய விடுமுறைக் காலம்தான் ஆண்டுத் தொடக்கம். அப்போதுதான் பெரிய படங்கள் வெளியாகும். அவை பொங்கலுக்கு வெளியாகப் போவதாக முந்தைய ஆண்டின் கடைசி மாதங்களிலேயே அறிவிக்கப் பட்டுவிடும் என்பதால், ரசிகர்களும் அந்தப் படங்களை எதிர்பார்த்தே காத்திருப்பார்கள்.

அந்த வகையில் இந்த ஆண்டு பொங்கலுக்கு உச்ச நட்சத்திரங்களான ரஜினியின் ‘பேட்ட’, அஜித்தின் ‘விஸ்வாசம்’ ஆகியவை வெளியாயின. ‘இரண்டு பெரிய படங்கள் ஒரே நாளில் வெளியானால் ஓப்பனிங் வசூலைக் குவிக்கப் போதுமான திரையரங்குகள் கிடைக்காது; இதனால் இரண்டு படங்களின் வசூல் கணக்கும் பாதிக்கப்படும்’ என்று வசூல் களத்தில் உலவும் புலிகள் பலரும் ஆரூடம் கூறினர்.

ஆனால், ரசிகர்கள் அவற்றைப் பொய்யாக்கினர். இரண்டு படங்களுமே கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் மிகப் பெரிய வசூலைக் குவித்தன. ‘பேட்ட’யை அசலான ரஜினி படமாக அவரது ரசிகர்கள் கொண்டாட ‘விஸ்வாச’த்தில் இருந்த தந்தை-மகள் சென்டிமென்ட் காட்சிகள் குடும்ப ரசிகர்களை வெகுவாக ஈர்த்தன. ஆண்டுக்குச் சராசரியாகப் பத்துப் படங்களே எதிர்பார்த்த வெற்றியை எட்டின என்ற சூழலில் 2019-ன் தொடக்கமே இவ்வளவு சிறப்பாக அமைந்தது திரை யுலகுக்குப் புத்துணர்வை அளித்தது.

ஏமாற்றிய புதுக் கூட்டணிகள்

சிம்புவும் நகைச்சுவை மிளிரும் ஜனரஞ்சகப் படங்களுக்குப் பெயர்போன இயக்குநர் சுந்தர்.சியும் முதல்முறையாக இணைந்த படம் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’. பெரும் வெற்றிபெற்ற ‘அத்தாரிண்டிக்கி தீரிடி’ என்ற தெலுங்குப் படத்தின் மறு ஆக்கம் இது. இந்த எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற முடியாமல் படம் தோல்வியைத் தழுவியது. கடந்த சில ஆண்டுகளாக படப்பிடிப்புக்கு ஒழுங்காக வருவதில்லை, படக் குழுவுக்கு முறையாக ஒத்துழைப்பு அளிப்பதில்லை என்றெல்லாம் குற்றம்சாட்டப்பட்ட சிம்புவின் ரசிகர்களுக்கு மற்றும் ஓர் இடியாக அமைந்தது.

புதுமுக இயக்குநர் ரஜத் ரவிசங்கர் இயக்கத்தில் கார்த்தி நடித்த படம் ‘தேவ்’. கார்த்தி எப்போதுமே புதுமையான கதைகளைத் தேர்ந்தெடுப்பவர் என்ற நம்பிக்கை, ஹாரிஸ் ஜெயராஜின் இசை, ‘ரோட் மூவி’ வகை ஆகிய காரணங்களால் இந்தப் படம் எதிர்பார்ப்பை கிளப்பியது. ஆனால், படம் எந்த சுவாரசியத்தையும் அளிக்காததால் தோல்வி அடைந்தது.

மார்ச் மாதம் ‘ஐரா’,‘சூப்பர் டீலக்ஸ்’ படங்கள் ஒரே வாரத்தில் வெளியாயின. ‘லேடி சூப்பர்ஸ்டார்’ என்றழைக்கப்படும் நயன்தாராவைக் கதைநாயகியாகக் கொண்டு குறும்படங்களால் கவனம் ஈர்த்த சர்ஜுன் கே.எம். ‘ஐரா’ படத்தை இயக்கியிருந்தார்.

தமிழ் சினிமாவையே திரும்பிப் பார்க்கவைத்த ‘ஆரண்ய காண்டம்’ பட இயக்குநர் தியாகராஜன் குமாரராஜாவின் இரண்டாம் படம், விஜய் சேதுபதி திருநங்கையாக நடிக்கிறார் என்ற பரப்புரை, மேலும் சமந்தா, ஃபஹத் ஃபாசில், ரம்யா கிருஷ்ணன் ஆகிய பெரும் நட்சத்திரப் பட்டாளத்துடன் உருவான படம் என்பதாலும் ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தைப் பெரிய படம் என்று கூறலாம். இவற்றில் ‘ஐரா’ சொதப்பலான கதை திரைக்கதையைக் கொண்ட பேய்ப் படமாக அமைந்து, ஊடக விமர்சகர்களாலும் முறைவாசல் செய்யப்பட்டு நிராகரிக்கப்பட்டது. ‘சூப்பர் டீலக்ஸ்’ கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இரண்டு படங்களுமே வணிக வெற்றியை ருசிக்கவில்லை.

கைகொடுக்காத கோடை விடுமுறை

கோடை விடுமுறைக்கு வெளியான பெரிய படங்களில் ‘காஞ்சனா 3’ மட்டுமே வசூலைக் குவித்தது. இரைச்சலும் இரட்டை அர்த்த நகைச்சுவைகளும் மூன்று கதாநாயகி யரின் கவர்ச்சியும் நிரம்பி வழிந்த இரண்டாம் தரமான இந்தப் படத்தை விமர்சகர்கள் காய்ச்சி எடுத்தாலும் ‘ஜாலியாகப் பொழுதைப் போக்க உதவினால் போதும்’ என்று சொல்லும் வெகுஜன ரசனையின் ஆதரவு இந்தப் படத்துக்குக் கிடைத்தது.

சூர்யா நடித்து செல்வராகவன் இயக்கத்தில் வெளியானது ‘என்ஜிகே’. ரசிகர்களின் பெரும் மதிப்பைப் பெற்ற அதன் கதாநாயகன், இயக்குநர் இருவரையும் அவர்களது இறங்கு முகத்திலிருந்து மீட்கவில்லை. அரசியலில் பங்கேற்கும் சாமானியன் அரசியலில் வெல்வதற்காக சுயநலவாதியாக மாறும் கதையை இயக்குநர் பூடகமாகக் கூறியிருப்பதாக செல்வராகவனின் ரசிகர்களும் வரிந்துகட்டிக்கொண்டு படத்தைப் பாராட்டினார்கள்.

ஆனால், செல்வராகவனின் முயற்சியும் சூர்யாவின் உழைப்பும் பொதுப் பார்வையாளர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. விஷாலின் ‘அயோக்யா’ கவனம் ஈர்க்கத் தவறியது. நகைச்சுவைப் படங்களுக்குப் பெயர்போன ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன்- நயன்தாரா நடித்த ‘மிஸ்டர் லோக்கல்’ போதுமான நகைச்சுவையை வழங்க வில்லை என்பதோடு, தற்சார்புடைய பெண்களை இழிவுபடுத்தும் காட்சிகளுக்காக விமர்சகர்களின் கண்டனங்களைப் பெற்றது.

நம்பிக்கையை மீட்ட பார்வை

ஜூன்-ஜூலை மாதங்களில் விஜய் சேதுபதியின் ‘சிந்துபாத்’, கமல்ஹாசன் தயாரிப்பில் விக்ரம் நடித்த ‘கடாரம் கொண்டான்’ படங்கள் வெளியாகி, வந்த சுவடே தெரியாமல் திரையரங்குகளை விட்டு நீங்கின. ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்த ‘நேர்கொண்ட பார்வை’ ஆகஸ்ட் 8-ம் தேதி வெளியானது. இந்தியில் வெளியாகி விமர்சகர்களால் கொண்டாடப்பட்ட ‘பிங்க்’ என்ற பெண் மையப் படத்தின் மறு ஆக்கம் இது.

அஜித் நடித்ததால் மட்டுமே இதைப் பெரிய படம் என்று கூறமுடியும். துணிச்சலான கருத்துகளைப் பேசும் படத்தில் அஜித் என்ற நட்சத்திர நடிகரை ஈடுபடுத்துவது, படத்தின் கருவையும் கருத்துகளையும் சிதைத்துவிடலாம் என்று அஞ்சப்பட்டது. ஆனால், அஜித் ரசிகர்களைத் திருப்திபடுத்து வதற்காகச் சில காட்சிகள் சேர்க்கப் பட்டிருந்தாலும் அசல் படத்தின் மையக் கரு சிதைக்கப்படவில்லை. விமர்சகர்களால் பாராட்டப்பட்ட படம் ஓரளவு வசூலையும் குவித்தது.

பதினைந்து ஆண்டுகள் கோமாவிலிருந்துவிட்டு மீண்ட இளைஞனின் கதையாக, ஜெயம் ரவி-காஜல் அகர்வால் இணை நடித்த ‘கோமாளி’ மிகப் பெரிய வசூலைக் குவித்தது. பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த ‘நம்ம வீட்டுப் பிள்ளை’ கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் குடும்ப ரசிகர்களைக் கவர்ந்து வசூல் வெற்றியைப் பெற்றது.

அசத்திக் காட்டிய ‘அசுரன்’

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த ‘அசுரன்’ அசுரத்தனமான வெற்றியைப் பெற்றது என்று சொன்னால் மிகையில்லை. வெற்றிமாறன் - தனுஷ் கூட்டணியின் படங்கள் எப்போதுமே பேராதரவைப் பெற்றிருக்கின்றன என்றாலும், எண்பதுகளில் நிகழும் கதையில் தனுஷ் வயது முதிர்ந்தவராக நடித்திருந்தார். இவை தொடர்பான சந்தேகங்களையும் ரசிகர்கள் தவிடுபொடியாக்கினார்கள்.

இந்தப் படத்தின் வெற்றி, சாதி ஒடுக்குமுறை போன்ற தீவிரமான விஷயங்களைப் பேசும் படங்கள் வணிக ரீதியாகவும் வெற்றிபெற முடியும் என்ற நம்பிக்கையை அழுத்தமாக விதைத்தது. பூமணியின் ‘வெக்கை’ நாவலை அடிப்படையாகக் கொண்ட இந்தப் படம், நாவல்களை வெற்றிகரமாகத் திரைப்படமாக்க முடியும் என்ற நம்பிக்கையையும் ஏற்படுத்தியது.

இவற்றுக்கிடையில் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா, மோகன்லால், ஆர்யா என நட்சத்திரப் பட்டாளத்துடன் வெளியான ‘காப்பான்’ விமரச்கர்களால் நிராகரிக்கப்பட்டாலும் வசூல்ரீதியாக ஓரளவு வெற்றிபெற்றது. நயன்தாரா நடித்த மற்றுமொரு பேய்ப் படமான ‘கொலையுதிர் காலம்’ தலைப்புக்காக மட்டுமே நினைவுகூரப்பட வேண்டிய படமானது.

பொங்கலைப் போலவே தீபாவளி

பொங்கலைப் போலவே தீபாவளிக்கும் இரண்டு பெரிய படங்கள் வெளியாகி இரண்டுமே பெரும் வெற்றியைக் குவித்தன. அட்லி இயக்கிய ‘பிகில்’ விஜயின் மற்றுமொரு தீபாவளி வசூல் சாதனையானது. ஐம்பது நாட்களைக் கடந்து திரையரங்குகளில் ஓடிய இந்தப் படம், இந்த ஆண்டின் மிகப் பெரிய வசூலைக் குவித்திருப்பதாக தயாரிப்பு நிறுவனத்தைச் சேர்ந்த அர்ச்சனா கல்பாத்தி அறிவித்தார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்து வெளியான படம் ‘கைதி’. ஒரே இரவில் நடக்கும் கதை, சுவாரசியமான கதை, புதுமையான திரைக்கதை, சிறப்பான மேக்கிங் என அனைத்து தரப்பு ரசிகர்களையும் திருப்திபடுத்தி வெற்றியடைந்தது. தீபாவளிப் படங்களின் வெற்றி, தமிழ் சினிமா வணிக உலகுக்கு மீண்டும் புத்துணர்வூட்டியது.

தீபாவளிக்குப் பிறகு வெளியான விஜய் சேதுபதியின் ‘சங்கத் தமிழன்’, விஷாலின் ‘ஆக்‌ஷன்’ படங்கள் பெரும் தோல்வியைச் சந்தித்து தீபாவளித் தித்திப்பை மட்டுப்படுத்தின. மூன்றாண்டுகளாகப் படப்பிடிப்பில் இருந்து செப்டம்பரில் வெளியாவதாக அறிவிக்கப்பட்டு கடைசி நேரத்தில் தள்ளிப்போய் கடைசியாக நவம்பர் இறுதியில் வெளியானது ‘எனை நோக்கிப் பாயும் தோட்டா’. மூன்றாண்டு தாமதம், முதல்முறையாக இணைந்த கெளதம் மேனன் - தனுஷ் கூட்டணி மீதான எதிர்பார்ப்பைப் பாதிக்கவில்லை. இருந்தாலும், படம் ரசிகர்களை திருப்திபடுத்தத் தவறி தோல்வியடைந்தது.

பெரிய படங்களின் வெற்றி விகிதம் ஒப்பீட்டளவில் அதிகம் என்பது கோலிவுட்டுக்கு 2019-ஐ மறக்க முடியாத ஆண்டாக ஆக்குகிறது. இதனால் பெற்ற ஊக்கத்துடன் இன்று சிவகார்த்திகேயனின் ‘ஹீரோ’ வெளியாகிறது. 2020 பொங்கலுக்கு ரஜினிகாந்த் - ஏ.ஆர்.முருகதாஸ் இணையும் ‘தர்பார்’ வெளியாகவிருக்கிறது. வழக்கம்போல் தங்களை ஏதேனும் ஒரு வகையில் திருப்திபடுத்தும் படத்துக்கு வசூலை வாரித் தர ரசிகர்கள் தயாராக இருக்கிறார்கள்.

தொடர்புக்கு: gopalakrishnan.sn@hindutamil.co.in

SCROLL FOR NEXT