அஜித் அளவுக்கு அவரது படங்களில் வரும் வில்லன்களும் தோற்றப் பொலிவுடன் இருப்பார்கள் என்று கூற முடியாது. ஆனால், பல படங்களில் அழகான வில்லன்களும் நடித்திருக்கிறார்கள். அந்த வரிசையில் தெலுங்கு நாயகன் கார்த்திகேயா இடம்பெறலாம் என்கிறார்கள். ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் அடுத்து நடிக்கவிருக்கும் படத்தில் அவரது ஜோடியாகயாமி கௌதம் நடிக்க அவருடன் பேச்சு வார்த்தை நடத்தி முடிக்கப்பட்டிருப்பதாக இயக்குநர் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில் அஜித்துடன் மோதும் இரண்டாம் வில்லனாக நடிக்க, தெலுங்குப் பட உலகின் இளம் நாயகனான கார்த்திகேயாவிடம் பேச்சு வார்த்தை நடத்தியிருப்பதாகக் கூறுகிறார்கள். நானி நடிப்பில் வெளியான ‘கேங் லீடர்’ படத்தில் வில்லனாக நடித்து டோலிவுட் ரசிகர்களிடம் பாராட்டுகளைப் பெற்ற கார்த்திகேயா, தெலுங்கில் நல்ல கதைகளில் நடித்து வருபவர் என்று பெயரெடுத்திருக்கிறார்.
கல்லி பாய்க்கு கல்தா!
இந்தி தவிர்த்து வேறு எந்த இந்திய மொழியில் சிறந்த படங்கள் வெளிவந்தாலும் அவை ‘சிறந்த வெளிநாட்டு மொழிப் பட’த்துக்கான ஆஸ்கர் ரேஸில் கலந்துகொள்ளத் தேர்வாவது குதிரைக்குக் கொம்பு முளைத்த கதை. அரசியல் மலிந்திருக்கும் இதில் இந்தியாவின் ஆஸ்கர் பரிந்துரைத் திரைப்படமாக இந்த ஆண்டு அனுப்பப்பட்ட இந்திப் படம் ‘கல்லி பாய்’. பத்துப் படங்கள் மட்டுமே இடம்பிடிக்கும் இறுதிப் பட்டியலில் ‘கல்லி பாய்’க்கு கல்தா கொடுத்துவிட்டது தேர்வுக் குழு. ஸோயா அக்தர் இயக்கத்தில் ரன்வீர் சிங், ஆலியா பட் நடித்திருந்த இந்தப் படம், மும்பையில் தாராவி குடிசைப் பகுதியிலிருந்து உருவான ‘ராப்’ இசைப் பாடகர்களின் வாழ்க்கையை உள்ளடக்கமாகக் கொண்டது.
’ஜித்து’வின் அடுத்த கெத்து!
கடந்த 2008-ல் வெளிவந்த ‘சஸ்பெக்ட் எக்ஸ்’ என்ற ஜப்பானியப் படத்தின் தாக்கத்தில் ஜித்து ஜோசப் எழுதி, இயக்கிய படம் ‘திரிஷ்யம்’. தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் மறு ஆக்கம் செய்யப்பட்டு ஹிட் அடித்தது. இந்தியாவுக்கு வெளியே சீனம், சிங்களம் ஆகிய மொழிகளிலும் மறு ஆக்கம் செய்யப்பட்டு இந்த ஆண்டின் இறுதியில் வெற்றி பெற்றது. அடுத்து ‘ஜப்பானிய’ மொழியிலேயே மறு ஆக்கம் ஆனாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.
இப்படி ஒரே ஒரு திரைக்கதையின் மூலம் உலகம் உருண்டையானது என்பதை நிரூபித்துவிட்ட ஜித்து ஜோசப் இயக்கத்தில் கார்த்தி – ஜோதிகா நடிப்பில் உருவாகியிருக்கும் ‘தம்பி’ திரைப்படம் இன்று வெளியாகிறது. இதற்கிடையில் ஜித்து தனது அடுத்த படத்துக்கு மோகன் லாலுடன் மீண்டும் கூட்டணி அமைத்திருக்கிறார். மோகன் லால் ஜோடியாக த்ரிஷா நடிக்கவிருக்கும் இந்தப் படத்துக்கு ‘ராம்’ என்று தலைப்பு சூட்டி இருக்கிறார்.