இந்து டாக்கீஸ்

ஹாலிவுட் ஜன்னல்: போலீஸ் புள்ளிங்கோ!

செய்திப்பிரிவு

சுமன்

‘பேட் பாய்ஸ்’ திரைப்பட வரிசையின் மூன்றாவதாக, ‘பேட் பாய்ஸ் ஃபார் லைஃப்’ திரைப்படம் வெளியாக உள்ளது. வில் ஸ்மித், மார்டின் லாரன்ஸ் நடிப்பில், மைக்கேல் பே இயக்கத்தில் 25 ஆண்டுகளுக்கு முன், போதைப்பொருள் கடத்தலை விரட்டும் இரு போலீஸாரின் ஆக்‌ஷன் காமெடியாக வெளியானது ‘பேட் பாய்ஸ்’ படத்தின் முதல் பாகம். உலக அளவில் வசூல் சாதனை புரிந்த அந்தப் படத்தின் கூட்டணி, தொடர்ந்து 2003-ல் ‘பேட் பாய்ஸ்-2’ படத்தை உருவாக்க, அதற்கும் ரசிகர்கள் பெரும் வரவேற்பளித்தனர்.

சர்வதேச அளவிலான ரசிகர்களின் எதிர்பார்ப்பு, அதனை ஈடுகட்டும் தயாரிப்புச் செலவு ஆகியவற்றால் ‘பேட் பாய்ஸ்’ பட வரிசையின் அடுத்த பாகம் வெளியாவதில் ஆண்டுகள் பல கழிந்தன. தற்போது 16 வருட இடைவெளியில், ‘பேட் பாய்’ஸின் மூன்றாம் திரைப்படமாக ‘பேட் பாய்ஸ் ஃபார் லைஃப்’ வெளியாக இருக்கிறது. இதனை அடில் எல் அர்பி – பிலால் ஃபலா இணைந்து இயக்கி உள்ளனர்.

புதிய ‘பேட் பாய்ஸ்’ கதையில், மார்டின் லாரன்ஸ் பதவி உயர்வு பெற்றிருக்கிறார். வில் ஸ்மித் மத்திம வயதின் பிரச்சினைகளில் மாட்டிக்கொண்டு தவிக்கிறார். இருவருமே காவல் பணியிலிருந்து ஓய்வுபெற முடிவு செய்கின்றனர். ஆனால், இவர்களால் கொல்லப்பட்ட பழைய எதிரியின் சகோதரன் ஒருவன் புதிய பழிவாங்கலுக்காகப் புறப்படுகிறான். வேறு வழியின்றி பேட் பாய்ஸ் இருவரும் இணைந்து அடுத்த சுற்று சாகசங்களுக்குத் தயாராகின்றனர். வழக்கம்போல ஒருவரை ஒருவர் வாரிவிடும் ஆக்‌ஷன் காமெடியில் அதகளம் செய்கிறார்கள்.

முந்தைய பாகங்களை மிஞ்சும் ஆக்‌ஷன் காட்சிகள், வழக்கமான நகைச்சுவைக்குப் பஞ்சமின்றி ரசிகர்களை மகிழ்விக்க வருகிறார்கள் புதிய ‘பேட் பாய்ஸ் ஃபார் லைஃப்’. வரும் ஜனவரி 17 அன்று திரையரங்குகளில் இவர்களைச் சந்திக்கலாம்.

SCROLL FOR NEXT