இந்து டாக்கீஸ்

அம்மா என் ரசிகை; அப்பா விமர்சகர்! - கல்யாணி பேட்டி

கா.இசக்கி முத்து

இயக்குநர் ப்ரியதர்ஷன் - லிஸி தம்பதியின் வாரிசு கல்யாணி. அம்மாவின் வழியில் அவரும் நடிப்புத்துறைக்கு வந்திருக்கிறார். ‘ஹலோ' என்ற தெலுங்குப் படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமான இவர், தற்போது சிவகார்த்திகேயன் ஜோடியாகத் தமிழில் அறிமுகமாகும் ‘ஹீரோ’ திரைப்படம் இன்று வெளியாகும் நிலையில் அவருடன் உரையாடியதிலிருந்து...

சிவகார்த்திகேயனுடன் நடித்த அனுபவம்..

தொடக்கத்திலிருந்தே அவருடைய படங்களைப் பார்த்து வருகிறேன். நான் அவரது ரசிகை. படப்பிடிப்பில் நிறையக் கற்றுக் கொடுத்தார். ‘இந்த வசனத்தைக் கொஞ்சம் நிறுத்திப் பேசினால், இன்னும் நன்றாக இருக்கும்’ என்பதில் தொடங்கி நிறைய டிப்ஸ் கொடுத்தார். ‘இந்த வசனத்தை இப்படி மனதுக்குள் நினைத்துக் கொண்டு சொல்லுங்கள்’ என்றெல்லாம் சொல்வார். அதெல்லாம் ஒரு இயக்குநர் கற்றுத் தரக்கூடியது.

‘க்ரிஷ் 3', ‘இருமுகன்' படங்களில் ‘ஆர்ட் அசிஸ்டெண்டாக’ பணிபுரிந்திருக்கிறீர்களே?

சின்ன வயதிலிருந்தே சினிமாவில் தான் பணிபுரியப் போகிறேன் எனத் தெரியும். முதலில் கேமராவுக்குப் பின்னால் பணிபுரிந்தேன். சினிமாவில் என்னவாகப் போகிறோம் என்ற தெளிவு, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தான் வந்தது. அப்பாவும் சாபு சிரில் சாரும் நெருங்கிய நண்பர்கள். சாபு சாரின் ‘ஆர்ட் டைரக்‌ஷன்’ பணியைப் பார்த்து வியந்திருக்கிறேன்.

ஆகையால் தான் அத்துறையில் பயிற்சி எடுத்துக்கொண்டேன். ஆனால், சினிமாவில் எனது பங்களிப்பு வேறுமாதிரி இருக்க வேண்டும் என உள்ளுக்குள் தோன்றிக்கொண்டே இருந்தது. அப்பாவிடம் பேசும் போது, எனது நாயகி ஆசையைக் கூறினேன். அப்போது சிறு தயக்கம் இருந்தது.

நடிக்க வந்து விட்டால் நிறைய விமர்சனங்கள் வரும். என்னால் அதைத் தாங்கிக் கொள்ள முடியாது. இப்போதும் கூட அப்படித்தான். அப்போது அப்பா ‘திரையுலகில் நிறைய அனுபவம் இருக்கிறது. நானும் அம்மாவும் எப்போதும் உறுதுணையாக இருப்போம்’ என நம்பிக்கை தந்தார். அதன்பின்னர் தான் நடிப்பில் முழு மூச்சாக இறங்கினேன்.

அப்பா கொடுத்த ‘கோல்டன் டிப்ஸ்’..

‘ஆமிர்கான் - அக்‌ஷய் குமார் இருவருமே வெவ்வேறு திசையில் நடிப்பைக் கொடுப்பவர்கள். ஆனால், இருவருமே மிகச்சிறந்த நடிகர்கள். அவர்கள் நடிப்பதற்கான களத்தை இயக்குநர்களும் கதாசிரியர்களும்தான் உருவாக்கித் தருகிறார்கள். ஆகையால், நடிப்புப் பயிற்சியை விட நல்ல இயக்குநர், நல்ல கதாசிரியர்தான் உனது தேர்வாக இருக்க வேண்டும்’ என்றார்.

‘நல்ல படத்தில் நடிக்கும் போது, திரையில் எவ்வளவு நேரம் வருகிறோம் என்றெல்லாம் யோசிக்கக் கூடாது’ என்று அப்பா சொல்லியிருக்கிறார். ‘ஹலோ' படத்தில் நான் அறிமுகமாக ஒப்புக் கொண்டதற்கு இயக்குநர் விக்ரம் குமார் தான் காரணம்.

அப்பாவின் இயக்கத்தில் நடித்த அனுபவம்..

‘மரக்கார்' படத்தில் சின்ன கதாபாத்திரம் தான். அதன் படப்பிடிப்பு முடிந்தவுடனே, அப்பாவின் இயக்கத்தில் நடிக்க வேண்டாம் என முடிவு செய்துவிட்டேன். கொஞ்சம் அதிகமான ப்ரஷர், பயம் இருந்தது. ‘மரக்கார்' படத்தின் முதல் நாள் படப்பிடிப்பில் இரண்டு வசனங்கள் மட்டுமே இருந்தது. அந்த வசனங்களை எனக்குப் பேச வரவில்லை.

அப்பாவை கூலான இயக்குநர் என்பார்கள். ஆனால், மகள் என்பதால் பயங்கரமாகத் திட்டினார். ஏனென்றால், திட்டவில்லை என்றால் மகள் என்பதால் அட்ஜஸ்ட் செய்கிறார் என நினைப்பார்கள். அதற்காகவே கொஞ்சம் அதிகமாகவே திட்டிவிட்டார் என நினைக்கிறேன்.

அப்பா - அம்மா இருவரும் உங்கள் நடிப்பைப் பார்த்துவிட்டு என்ன சொல்லியிருக்கிறார்கள்?

அம்மா என்னுடைய ரசிகை, அப்பா என்னுடைய விமர்சகர். என் படத்தைப் பார்த்துவிட்டு, ‘இதை ஏன் சரியாகப் பண்ணவில்லை’ என்று அப்பா சொல்வார். ‘இந்தப் படத்தில் ரொம்ப அழகாக இருக்கே’ என்று அம்மா சொல்வார். இருவரும் படப்பிடிப்பு தளத்துக்குக் கூட வரமாட்டார்கள். உனது கதைகளை நீயே கேட்டு முடிவு செய் என்று முழுச் சுதந்திரம் கொடுத்திருக்கிறார்கள். அதைப் பத்திரமாகப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்பதில் படு கவனமாக இருக்கிறேன்.

‘மாநாடு' படம் குறித்துச் சொல்லுங்கள்..

அய்யோ...! அருமையான கதை. ‘எப்படி சார் இப்படியொரு கதையை யோசித்து எழுதினீர்கள்?’ என வெங்கட் பிரபு சாரிடம் கேட்டேன். சிம்புவை இன்னும் சந்திக்கவில்லை. அந்தப் படத்தின் படப்பிடிப்புக்கு ஆவலுடன் காத்திருக்கிறேன்.

SCROLL FOR NEXT