இந்து டாக்கீஸ்

வாசிப்பு உணர்வைத் தரும் முயற்சி

ஜெய்

சென்ற தலைமுறைப் படங்களில் ஒரு உறுதியான கதை இருக்கும். ஒரு வலுவான கதையை இன்றைய திரைப்படங்களில் காண்பது மிக அரிது. அந்தக் குறையைப் போக்கும் விதமாக வெளிவந்திருக்கிறது ‘விசுவாசம்’ குறும்படம்.

தமிழின் குறிப்பிடத்தகுந்த எழுத்தாளர்களில் ஒருவரான என்.ஸ்ரீராமின் சிறுகதையைத்தான் படமாக எடுத்திருக்கிறார் இயக்குநர் மணிபாரதி துறையூர். ஐந்தாறு கதாபாத்திரங்கள் கதை மாந்தர்களாக வருகிறார்கள். வயலும், ஓடையும் சார்ந்த மிக எளிமையான, யதார்த்தமான காட்சி அமைப்பு. பத்தி எழுத்தாளாரும் நடிகருமான பாரதி மணி முக்கியமான கதாபத்திரத்தில் நடித்துள்ளார். இயக்குநர் மணிபாரதி அவரது இளைய மகன் பாத்திரத்தை ஏற்றுள்ளார். கவிஞரும் ஆவணப்பட இயக்குநருமான ரவி சுப்ரமணியன் முக்கியக் கதாபாத்திரம் ஒன்றில் நடித்துள்ளார்.

ஒரு எளிய குடும்பம். அம்மா பூ கட்டுகிறார். இளைய மகன் டி.என்.பி.எஸ்.சி. தேர்வுக்குப் படித்துக்கொண்டிருக்கிறார். இருவரும் அந்த அம்மாவின் மூத்த மகன் வருவதற்காகக் காத்திருக்கிறார்கள். அந்த மூத்த மகன்தான், தலையெடுத்து, தம்பியைப் படிக்கவைத்திருக்கிறார் என்பதை எளிய உரையாடல்கள் மூலம் நமக்கு இயக்குநர் கடத்திவிடுகிறார். இவர்களது தந்தை குடும்பத்தை விட்டுப் பிரிந்து சென்று முதலாளி வீட்டில் சமையல்காரராகவே வெகு காலம் வாழ்ந்துவிட்டார்.

இப்போது குடும்பத்துடன் சேர்ந்து வாழ விரும்புகிறார் என முதலாளி வீட்டில் இருந்து வரும் ஒருவர் சொல்கிறார். மூத்த பையனுக்குக் கோபம்; சம்மதிக்க மறுக்கிறார். ஒருவழியாக இளைய மகன் தந்தையை அழைக்கச் செல்கிறான். ஆனால் அவரோ அந்தப் பெரிய வீட்டைப் பிரிந்து வர முடியாமல் விசுவாசத்துடன் புலம்பியபடியே வருகிறார். “ஏன் இத்தனை வருஷத்துக்கு அப்புறம் நீயும் உன் அண்ணனும் வீட்ல வந்து இரு இருன்னு கட்டாயப்படுத்துறீங்க?” எனக் கேட்கிறார்.

அப்படியானால் ‘அப்பா குடும்பத்துடன் இருக்க விரும்புகிறார் எனச் சொன்னது பொய்யா? அதைச் சொன்னது யார்?’ என இளைய மகன் நினைத்துப் பார்க்கிறான். அதற்கான விடையை இயக்குநர் திறந்து காண்பிக்கும்போது பெரும் வலியை நாமும் உணர்கிறோம்.

பின்னணியில் இசைக்கும் ரவி சுப்ர மணியனின் குரல் இதமாக இருக்கிறது. படத்தில் முக்கியமான பாத்திரமாகவும் வந்து மனம் நிறைக்கிறார் அவர்.

காட்சிப்படுத்துதலில் ஒரு நாடகத்தன்மையை உணர முடிகிறது. கதாபாத்திரங்களின் நடிப்பில் கூடுதல் அக்கறை எடுத்திருக்கலாம். பாரதி மணியின் வசன உச்சரிப்பில் கொங்கு பாஷை சரியாக வெளிப்படவில்லை. இவை எல்லாவற்றையும் மீறி என்.ராமின் வலுவான கதையை வாசித்தது போன்ற உணர்வைப் படம் தந்துவிடுகிறது. அதுவே போதுமானதாகவும் இருக்கிறது.

SCROLL FOR NEXT