கால் நூற்றாண்டுக்கும் மேலாக சினிமா ரசனையை மேம்படுத்தும் நோக்கில் தொடர்ந்து இயங்கி வருபவர் எஸ். இளங்கோ. புதுகை பிலிம் சொசைட்டி மூலம் 500—க்கும் மேற்பட்ட உலகத் திரைப்படங்களைத் திரையிட் டுள்ளார். கடந்த ஆண்டு இவர் எழுதிய ‘நீங்கள் பார்க்க வேண்டிய நல்ல குறும்படங்கள்’ எனும் நூல் 88 தமிழ்-இந்திய-உலகக் குறும்படங்களை திறம்பட அறிமுகம் செய்தது.
தற்போது கறுப்பின மக்களின் வாழ்க்கையைப் பதிவு செய்த 12 உலக சினிமாக்கள் குறித்த தனது பார்வையை ‘கருப்பு வெள்ளி’ எனும் நூலாகத் தந்துள்ளார் எஸ். இளங்கோ. நிற வேற்றுமையின் கொடுமையென்பது கழிப்பறைவரை நீளும் பெரும் அவலம் என்பதைச் சித்தரிக்கும் ‘தி ஹெல்ப்’, ஆதிக்க வெறியானது மனிதர்களை விலங்குகளைப்போல் நடத்தும் துயரத்தைப் பேசும் ‘மேன் டு மேன்’, நெல்சன் மண்டேலா கறுப்பின மக்களின் விடுதலை நாயகனாக உயர்ந்த வரலாற்றைப் பதிவு செய்திருக்கும் ‘தி லாங் வாக் டு ஃப்ரீடம்’ என ஒவ்வொரு படம் பற்றியும் நூலாசிரியர் ஆழமான பார்வையை முன்வைக்கிறார். அது நமக்குள் சலனத்தை ஏற்படுத்துகிறது.
படங்களைப் பற்றி எழுதியதோடு நில்லாமல், அந்தப் படங்களின் திரைக்கதை, இயக்கம், ஒளிப்பதிவு, இசை, நடிகர்கள், விழாக்கள், விருதுகள் என கூடுதல் தகவல்களையும் தந்திருக்கிறார். நூலை வாசித்து முடித்ததும், இத்தகைய படங்களைப் பார்க்க வேண்டுமென்கிற ஆவல் எழுவதே இந்நூலின் சிறப்பு.
கருப்பு வெள்ளி
நூலாசிரியர் எஸ்.இளங்கோ
பக்கம் : 96 விலை : ரூ.75/-
வெளியீடு: அகரம், 1, நிர்மலா நகர்,
தஞ்சாவூர்- 613 007.
மஞ்சள் ஒளிவீசும் பிரபலங்கள்
திரைப் படங்களில் நடிக்கும் கலைஞர்கள் மீது மக்களுக்கு எப்போதுமே கூடுதல் ஈர்ப்பும் கவனிப்பும் உண்டு. அவர்களது நடிப்பைப் பற்றி பேசுவதைப் போலவே, அவர்களது தனிப்பட்ட வாழ்க்கைக் குறித்து பேசுவதிலும் அலாதியான ஆர்வமுண்டு.
கோலிவுட் ரசிகர்களுக்கு ஹாலிவுட் பிரபலங்களைப் பற்றி அறிமுகம் செய்யும் வகையில் ஆர்.மணவாளன் எழுதியுள்ள நூலே ‘ஹாலிவுட் பிரபலங்கள்.’ நகைச்சுவை மன்னன் சார்லி சாப்ளின், ஹாலிவுட் அரசர் டக்ளஸ் ஃபேர்பேங்ஸ், மகா கலைஞன் மார்லன் பிராண்டோ, திகில் மன்னன் ஆல்ஃப்ரட் ஹிட்ச்காக், கவர்ச்சிப் புயல் மர்லின் மன்றோ என 35 ஹாலிவுட் கலைஞர்களைப் பற்றி எழுதப்பட்டுள்ள சிறிய அறிமுகக் கட்டுரைகளின் தொகுப்பிது.
சிறுகுறிப்பாக இல்லாமல், ஹாலிவுட் பிறந்த கதை, சினிமா தொழில் நுட்பம் பிறந்த கதைகளை இன்னும் விரிவாய் எழுதியிருக்கலாம். என்றாலும் எளிய வாசிப்புக்கு ஏற்ற நூலாக இருக்கிறது.
ஹாலிவுட் பிரபலங்கள்
நூலாசிரியர் ஆர்.மணவாளன்
பக்கம் : 160 விலை : ரூ.120/-
நூல் கிடைக்குமிடம்: கண்ணம்மா பதிப்பகம்,
144, மகாலட்சுமி இல்லம், பாக்குமுடையான்பட்டு,
புதுச்சேரி 605 008