இந்து டாக்கீஸ்

கோலிவுட் கஃபே - குள்ள அப்பு விஜய்

செய்திப்பிரிவு

அக்‌ஷய் குமார் நடிப்பில் இன்று வெளியாகும் ‘பிரதர்ஸ்' படத்தைத் தெலுங்கு, தமிழ் ஆகிய மொழிகளில் தனித்தனியே மறுஆக்கம் செய்ய முடிவு செய்திருக்கிறாராம் அந்தப் படத்தின் தயாரிப்பாளர். மூன்று கதாநாயகர்கள் நடிக்க வேண்டிய இந்தப் படத்தின் தமிழ் மறுஆக்கத்தில் விக்ரம், சூர்யா, கார்த்தி ஆகியோர் நடித்தால் சரியாக இருக்கும் என்று பரிந்துரைக்கப்பட்டதால் அவர்களோடு முதல்கட்டப் பேச்சுவார்த்தையைத் தொடங்கியிருக்கிறாராம் தயாரிப்பாளர். அதேபோலத் தெலுங்கில் பிரபாஸ், ராம்சரண், ராணா ஆகியோர் சரியான தெரிவு என்ற பரிந்துரையை ஏற்று அவர்களிடமும் பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டுள்ளதாம். நடிகர்களுக்குள் ஈகோ இல்லையென்றால் இந்த இரண்டு கூட்டணியுமே சாத்தியமாகலாம்.

குள்ள அப்பு விஜய்

புலி படத்தில் ராணியாக நடித்திருக்கும் ஸ்ரீ தேவியை வில்லனிடமிருந்து காப்பாற்றக் கடந்த காலத்தின் மனிதனாக நடிக்கிறாராம் விஜய். இதற்காகக் கால இயந்திரத்தில் பயணிக்கும் ஸ்ரீ தேவி, விஜயைத் தனது நாட்டுக்கு அழைத்து வருகிறார். அப்போது ஒரு காட்சியில் குள்ள அப்பு போல நடித்திருக்கிறாராம் விஜய். இதற்காக கமல் பயன்படுத்திய அதே உத்தியைப் பயன்படுத்தியிருக்கிறார்கள் என்று பட வட்டாரத்திலிருந்து தகவல்.

ஆக்‌ஷன் அகர்வால்

விஜய், சூர்யா, கார்த்தி, விஷால், தனுஷ் என்று முன்னணி கதாநாயகர்களுடன் நடித்துவிட்ட காஜல் அகர்வால் அடுத்து அஜித்துடன் நடித்துவிட வேண்டும் என்ற ஆவலில் இருந்தார். ஆனால் லாரன்ஸுடன் நடிக்கும் வாய்ப்பு தேடி வர, ஒரு கணம்கூட யோசிக்காமல் ஒப்புக்கொண்டிருக்கிறார். வேந்தர் மூவீஸ் தயாரிக்கும் ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படத்தில் காஜலுக்கு ஆக்‌ஷன் காட்சிகளை அமைக்க இருக்கிறாராம் ராகவா லாரன்ஸ். இந்தப் படம் தவிர, அரிமா நம்பி பட இயக்குநர் ஆனந்த சங்கர் இயக்கத்தில் ‘மர்ம மனிதன்’ என்ற த்ரில்லர் படத்தில் நடிக்கிறார் காஜல்.

தாதா பார்த்திபன்

சூர்யாவின் ‘மாஸ்’ படத்தில் தனது முத்திரையை விட்டுவிடாத வில்லனாக நடித்தார் பார்த்திபன். ஆனால் இந்தப் படத்துக்கு முன்பே பார்த்திபன் வில்லனாக நடித்து முடித்திருந்த ‘திகார்’ திரைப்படம் அடுத்த வாரம் வெளியாக இருக்கிறது. தனது படங்களுக்கு ஊர்களின் பெயர்களைத் தலைப்பாக வைப்பதில் பிடிவாதம் காட்டும் இயக்குநர் பேரரசு இயக்கியிருக்கும் படம் இது. சிறைச்சாலைக்குப் பேர்போன திகார் நகரத்தில் தொடங்கும் கதை, கேரளா, துபாய் என்று பயணித்துச் சென்னையில் முடிகிற மாதிரி திரைக்கதை அமைத்திருக்கிறாராம். “நான் ரசித்து நடித்த தாதா கதாபாத்திரம்” என்று கூறியிருக்கிறார் பார்த்திபன்.

பாதையை மாற்றும் சேதுபதி

அருண்குமார் என்ற புதியவர் இயக்கும் படத்தில் நேர்மையும் கண்டிப்பும் மிக்க அதிரடி போலீஸ் அதிகாரியாக கமர்ஷியல் களத்தில் கலக்க முடிவுசெய்திருக்கிறாராம் விஜய் சேதுபதி. ‘கா சேதுபதி’ என்று தலைப்பு சூட்டப்பட்டிருக்கும் இந்தப் படத்துக்காகத் தனது உடலை முறுக்காக மாற்றவும் முடிவு செய்திருக்கிறாராம். காக்கா முட்டை மணிகண்டன் இயக்கத்தில் நடிக்கும் படமும் அதிரடியான கதைக்களம்தானாம். தனுஷ் தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் ‘நானும் ரெளடிதான்’ படமும் முழுமையான கமர்ஷியல் படம்தான் என்கிறார்கள்.

தம்பி ராமையா வாரிசு!

தம்பி ராமையாவின் மகன் உமாபதி நாயகனாக அறிமுகமாகிறார். அறிமுக இயக்குநர் இன்பசேகர் எழுதி இயக்கும் அந்தப் படத்துக்கு ‘அதாகப்பட்டது மகாஜனங்களே’ என்று தலைப்பு வைத்திருக்கிறார்கள். உமாபதிக்கு ஜோடியாக நடிக்கத் தெலுங்குப் படவுலகிலிருந்து ரேஷ்மா ரத்தோர் என்ற கதாநாயகியை அழைத்து வந்திருக்கிறார்கள்.

SCROLL FOR NEXT