சுப.ஜனநாயகச்செல்வம்
சிவாஜி கணேசன் நடிப்பில் 1970-ம் ஆண்டு ஆகஸ்ட் 15 அன்று வெளியான ‘ராமன் எத்தனை ராமனடி’ படத்துக்கு வரும் 2020-ல் பொன்விழா ஆண்டு. நடிகர் திலகத்தின் கலை வாழ்க்கையிலிருந்து ஒருசில நிகழ்வுகளைத் திரையிலும் பிரதிபலிக்கும்விதமாக உருவாக்கப்பட்ட இந்தப் படத்தில் இன்னொரு சுவாரசியமும் உண்டு.
அறிஞர் அண்ணா எழுதிய ‘சிவாஜி கண்ட இந்து ராஜ்ஜியம்’ நாடகத்தின் ஒரு காட்சியை அண்ணா குடும்பத்தினரின் அனுமதி பெற்று, அதை, ‘ராமன் எத்தனை ராமனடி’ திரைப்படத்தில் வைத்தார் சிவாஜி. நடிகர் திலகம், சத்ரபதி சிவாஜியாகத் திரையில் தோன்றி நடித்த அந்த ஒரு காட்சிக்காகவே திரும்பத் திரும்பப் படத்தை வந்து பார்த்த ரசிகர்கள் பலர்.
அதைத் தாண்டி சாப்பாட்டு ராமன் என்ற அப்பாவி இளைஞன் திரையுலகில் நுழைந்து நட்சத்திரமாக உயரும் நாயகன், சொந்த வாழ்க்கை தோல்வி அடையும் கதை அந்தப் படத்தை வெற்றியாக்கின. முத்துராமன் வில்லனாக வந்து, பிறகு நல்லவராக மாறுவார். கே.ஆர்.விஜயா ஏற்ற தேவகி கதாபாத்திரமும் ரசிகர்களை உருகவும் நெகிழவும் வைத்தது. பி.மாதவன் இயக்கத்தில் பாலமுருகன் கதை, வசனம் எழுதிய இந்தப் படத்துக்காக எம்.எஸ்.வியின் இசை அமைத்த பாடல்கள் அனைத்தும் வரவேற்புப் பெற்றன.
இத்தனை சிறப்புகள் கொண்ட இந்தப் படத்தின் முதல் பொன்விழா கொண்டாட்டத்தை முன்னதாகவே மதுரையில் நடத்தி முந்திக்கொண்டிருக்கிறார்கள் மதுரை உள்ளிட்ட தென்மாவட்ட சிவாஜியின் ரசிகர்கள். இதற்காக ‘ராமன் எத்தனை ராமனடி’ படத்தில் இடம்பெற்ற முக்கிய காட்சிகளின் ஒளிப்படங்கள் இடம்பெற்றுள்ள நாட்காட்டி ஒன்றை ரசனையுடன் வடிவமைத்துள்ளனர்.
அதை, மதுரையில் மாவட்ட நீதிமன்றம் அருகே அமைக்கப்பட்டுள்ள சிவாஜி சிலையின் முன்பு வெளியிட்டபின், அங்கே கூடிய இருநூற்றுக்கும் அதிகமான ரசிகர்கள் அனைவருக்கும் அந்தப் பொன்விழா நாட்காட்டி இலவசமாக வழங்கப்பட்டது. இந்த நிகழ்வுக்குத் தலைமை வகித்த பொறியாளர் ஜெயக்குமார், ‘ராமன் எத்தனை ராமனடி’ திரைப்படத்தை டிஜிட்டல் முறையில் மறுபதிப்பு செய்து வெளியிட இருப்பதாகத் தெரிவித்தார்.