இந்து டாக்கீஸ்

சினிமா எடுத்துப் பார் 21- அந்த புகழ்பெற்ற நடிகர்!

எஸ்.பி.முத்துராமன்

சென்ற கட்டுரையில் ‘ராமு’ படத் தின் இறுதிக் காட்சியில் ராமுவை உரலில் கட்டிப் போட்டிருந்தார்கள். அந்த அறையில் தீ பரவியது… என முடித்திருந்தேன். அதன் தொடர்ச்சி…

தீ அதிகமாக அறையில் பரவத் தொடங்கியது. ராமு பலமாக கத்த, கொஞ்சமும் யோசிக்காமல் இயக்குநர் திருலோகசந்தர் ஓடிப் போய் பையனை கல் உரலோடு சேர்த்து தூக்கிக்கொண்டு வெளியே வந்தார். அவர் ஒரு பாக்ஸர் என்று முன்பே சொல்லியிருக்கிறேன். மனத் திறமையைப் போல உடல் பலமும் மிக்கவர் திருலோகசந்தர். இயக்குநர் படத்தை இயக்கும்போது அந்தக் காட்சிகளில் சூழ்நிலைக்குத் தகுந்த மாதிரி செயல்பட வேண்டுமென்பதற்கு இந்தக் காட்சி ஒரு சாட்சி.

அன்றைக்கு உடல் கருகி சாக இருந்த அந்த ராமுவின் உண்மை யானப் பெயர் ராஜ்குமார். அந்தப் பையனுடைய அப்பா பெயர் அனுமந் தாச்சார். அவர் யுனிவாக்ஸ் வாசிப் பவர். ராஜ்குமார் ராமுவாக நடிக்கும் போது வயது 8. இன்றைக்கு வயது 57. அக்கார்டிங் வாசிக்கும் இசைக் கலைஞராக இன்றைக்கு வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவருக்கு மனைவி வினதாவும், பணிபுரியும் இரண்டு மகன்களும் இருக்கிறார்கள். 8 வயது ராஜ்குமாரையும் 57 வயது ராஜ்குமாரையும் புகைப்படங்களில் ஒப்பிட்டுப் பாருங்கள். காலச் சுழற்சியில் தான் எவ்வளவு மாற்றங்கள்!

கே.ஆர்.விஜயா, ஏவி.எம்மில் பணியாற்றிய நடராஜன் நடத்திய அமெச்சூர் நாடகங்களில் நடித்து வந்தவர். ஏவி.எம். தயாரிக்கும் படத்தில் நடிக்க வைக்க நடராஜன்தான் ‘‘நல்லா நடிக்கிற பொண்ணு’’ என்று கே.ஆர்.விஜயாவுக்கு சிபாரிசு செய்தார். அவருக்கு ஸ்கிரீன் டெஸ்ட் எடுத்துப் பார்த்தோம். அந்த நேரத்தில் ஒல்லியாக அவர் இருந்ததால் தேர்வாக வில்லை. அதன் பிறகு கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் தயாரித்து, இயக் கிய ‘கற்பகம்’ படத்தில் நடித்துப் புகழ்பெற்றார். அதைப் பார்த்துவிட்டு நாங்கள் அவரை ‘ராமு’ படத்தில் நடிக்க வைத்தோம்.

காதல் மன்னன் ஜெமினி கணேசன் எப்போதுமே ஜாலி பேர்வழி. ஷூட்டிங் சமயத்தில் ஷாட் எடுக்கும்போது காணா மல் போய்விடுவார். தேடிப் பார்த்தால் படப்பிடிப்பு நடக்கும் செட்டை தாண்டி ஒரு ஃப்ளோரின் வராண்டாவில் இருக்கும் லான்ட்லைன் போனில் பேசிக் கொண்டிருப்பார். எம்.ஜி.ஆர், சிவாஜி இருவரும் கொடி கட்டிப் பறந்த காலத்தில் தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்துக்கொண்டவர் ஜெமினி கணேசன். அவரது மகள்கள் டாக்டர் கமலா செல்வராஜ், வட இந்தியாவில் பெரும் பெயரை பெற்றுள்ள நடிகை ரேகா ஆகியோர் இன்றைக்கும் ஜெமினியின் பெயருக்கு கூடுதல் புகழையும் பெருமையையும் சேர்த்து வருகிறார்கள்.

‘ராமு’ தமிழில் வெற்றி பெற்றதும் அந்தப் படத்தை வழக்கம் போல ஏவி.எம் தெலுங்கில் எடுத்தார்கள். அங்கு என்.டி. ராமராவும், ஜமுனாவும், ராமுவாக தமிழில் நடித்த அதே ராஜ்குமாரும் நடித்தார்கள். ஏ.சி.திருலோகசந்தர்தான் தெலுங்குப் படத்துக்கும் இயக்குநர். நரசிம்ம ராஜு என்ற சிறந்த எழுத்தாளர் வசனம் எழுதினார். என்.டி.ராமராவ் எப்போதும் உணர்ச்சிகரமாக நடிக்கக் கூடியவர். படத்தில் ஒரு காட்சியில் வாய் பேச முடியாத ராமுவை, தன் மனைவியின் கல்லறைக்கு அழைத்துச் சென்று அவனை ‘அம்மா’ என்று பேச வைக்க முயற்சிப்பார். அவனும் ‘அ… அ… அ…’ என்று பேச முயற்சிப்பான். அவனால் பேச முடியாது. என்.டி. ராமராவ் உணர்ச்சிகரமாக ‘அம்மா பிலுவு... அம்மா பிலுவு…’ என்று வற்புறுத்தி கெஞ்சுவார்.

இந்தக் காட்சியை தியேட்டரில் பார்த்துக் கொண்டிருந்த பெண்கள், ‘‘சின்னா… அம்மான்னு பிலுவு, நானா... அம்மான்னு பிலுவு” என்று என்.டி.ஆரோடு சேர்ந்து கெஞ்சினார்கள். கதையோடு பெண்கள் ஒன்றிப்போய் உணர்ச்சி வசப்பட்டார்கள். இதுதான் வெற்றியின் அடையாளம். தெலுங்கிலும் படம் 100 நாட்கள் ஓடியது.

ஏவி.எம் நிறுவனத்தில் அப்போது ஒரு பிரம்மாண்டமான படம் எடுக்க முடிவு செய்யப்பட்டது. பிரம்மாண்ட மான படத்துக்குப் பெரும் புகழ்பெற்ற நடிகரைத்தானே ஒப்பந்தம் செய்வார்கள். அந்தப் புகழ்பெற்ற நடிகர் யார்?

- இன்னும் படம் பார்ப்போம்...

SCROLL FOR NEXT