ஜெயந்தன்
டிசம்பர் குளிருடன் வந்தே விட்டது 17-வது சென்னை சர்வதேசத் திரைப்பட விழா. உலகத் தரமான படங்களை நம்மாலும் தரமுடியும் என்ற நம்பிக்கையைப் புதிய தலைமுறைத் தமிழ்ப் படைப்பாளிகளிடம் விதைத்த காரணிகள் பல. அவற்றில் மறுக்க முடியாத ஒன்றாக, உலக சினிமாவின் சாளரமாக இருந்துவருகிறது சென்னை சர்வதேசத் திரைப்படவிழா.
‘கண்ட்ரி ஃபோகஸ்’ என்ற அடிப்படையில், இந்தியாவில் கலாச்சார தூதரங்களைக் கொண்ட பல்வேறு நாடுகளின் சிறந்த திரைப்படங்களை மூன்று நாள் திரைப்பட விழாக்களாக மாதந்தோறும் தலைநகர் சென்னையில் நடத்திவருகிறது இண்டோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன்.
அவற்றின் முத்தாய்ப்பாக, ஆண்டின் இறுதியில் தமிழக அரசின் நிதி உதவி, மத்திய தகவல் ஒளிபரப்பு அமைச்சகத்தின் ஒத்துழைப்பு, சினிமா ஆர்வலர்களின் ஆதரவு ஆகியவற்றுடன் இணைந்து சென்னை சர்வதேசத் திரைப்பட விழாவைக் கடந்த 16 ஆண்டுகளாக நடத்தி வருகிறது ஐ.சி.ஏ.எஃப். சென்னையின் முக்கிய கலை நிகழ்வாகவும் கலாச்சார அடையாளமாகவும் மாறி நிற்கும் சென்னை சர்வதேசப் படவிழாவின் 17-வது பதிப்பு, வரும் டிசம்பர் 12-ம் தேதி தொடங்கி 19-ம் தேதி வரை 8 நாட்கள் நடக்கிறது. இப்பட விழாவை ஒருங்கிணைக்கும் பணியில், ‘தி இந்து’ ஆங்கிலம், ‘இந்து தமிழ்’ நாளிதழ்கள் சினிமா ரசனையை வளர்க்கும் விதத்தில் ‘மீடியா பார்ட்னர்’களாகப் பங்காற்றுகின்றன.
நகைச்சுவையும் வன்முறையும்
டிசம்பர் 12-ம் தேதி மாலை 5 மணிக்கு சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள கலைவாணர் அரங்கில் படவிழா கோலாகலமாகத் தொடங்குகிறது. அன்று, கான் திரைப்பட விழாவில் தங்கப் பனை விருது பெற்ற ‘பாராஸைட்’ (Parasite) என்ற கொரியமொழிப் படம் தொடக்க விழாத் திரைப்படமாகத் திரையிடப்படுகிறது.
குறும்படங்களை எடுத்து கவனம்பெற்று, பின், தென்கொரியத் திரையுலகில் நுழைந்து, ‘மாஸ்டர்’ என்று பெயர் பெற்றிருக்கும் இயக்குநர் பொங்-ஜுன்-ஹோவின் இயக்கத்தில் கடந்த அக்டோபர் மாதம் வெளியான இப்படம், திரைப்பட விழாக்களிலும் தென் கொரியாவில் வசூலிலும் வெளுத்துக் கட்டியது.
எதிர்பாராமல் அமையும் ஒரு வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு, ஒரு பெரிய பணக்காரக் குடும்பத்துக்குள் ஒருவர் பின் ஒருவராகப் பணியாட்கள் என்ற போர்வையில் ஊடுருவுகிறது ஒரு நலிந்த குடும்பம். முதலில் உள்ளே நுழையும் மகன், பின், தனது அக்காவை ஓவிய ஆசிரியராக உள்ளே நுழைக்கிறான்.
பின்னர், அந்த வீட்டின் கார் ஓட்டுநரை வேலையை விட்டுத் துரத்திவிட்டு, அந்த இடத்தில் தந்திரமாக தனது அப்பாவை அமர்த்துகிறான். கடைசி வெளி ஆளாக இருந்த அந்த வீட்டின் சமையல்காரப் பெண்மணியின் சீட்டையும் கிழித்தபின், அந்தப் பணியில் இவனின் அம்மா அமர்கிறாள். இவர்கள் நால்வரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்ற உண்மை, அந்தப் பணக்காரக் குடும்பத்தினருக்குத் தெரிந்துவிடாமல் பாதுகாக்கிறார்கள்.
இப்போது ஊடுருவியவர்களால் அந்தப் பணக்காரக் குடும்பத்துக்கு என்ன ஆகப்போகிறதோ என்று பதறத் தொடங்குகையில், அந்த ஒட்டுண்ணிக் குடும்பம் என்ன செய்கிறது என்பதையும் பணக்காரக் குடும்பத்தினர் என்ன ஆனார்கள் என்பதையும் வன்முறையும் நகைச்சுவையும் கலந்து பரிமாறியிருக்கிறார் இயக்குநர் பொங்-ஜுன்-ஹோ.
(பாராசைட் படம் பற்றிய விரிவான பதிவை இந்து தமிழ் திசை வெளியாடான காமதேனு வார இதழிலின் இணையதளத்தில் வாசிக்க இணையச் சுட்டி: https://bit.ly/2RfjZwX) வறுமையிலும் ஏழ்மையிலும் நேர்மையை விடாமல் பற்றிக்கொண்டிருப்பவர்கள் இருந்தாலும், இவர்களைப் போன்று உடனிருந்து கொல்லும் கிருமிகளைப் போன்றவர்களும் மனிதக் கூட்டத்தில் இருக்கவே செய்வார்கள் என்ற உண்மையைப் பேச அச்சமோ, கூச்சமோ படவில்லை இயக்குநர். மிக முக்கியமாக யார் பக்கமும் நின்று வாள் சுழற்றாமல், சூழ்நிலையை மட்டுமே திரைக்கதையின் வாகனமாகக் கையாண்டு வெற்றிக் கண்டிருக்கிறார் பொங்-ஜுன்-ஹோ.
ஜெர்மனிக்கு சிறப்புக் கவனம்
உலகப் படங்களின் தேர்வு குறித்து இண்டோ சினி அப்ரிசியேஷன் ஃபவுண்டேஷன் திரைப்படச் சங்கத்தின் பொதுச் செயலாளர் தங்கராஜிடம் கேட்டபோது “ ‘பாராஸைட்’ படத்துடன் தொடங்கும் திரைப்படவிழா, உலக சினிமா என்ற பிரிவின் கீழ், அர்ஜெண்டினா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா பெல்ஜியம், பிரேசில், ஃபிரான்ஸ், சீனா, இத்தாலி, ஜெர்மனி, ஹங்கேரி, ஈரான், இஸ்ரேல், ஜப்பான், நார்வே, ஸ்பெய்ன், கனடா, ரஷ்யா, துருக்கி உட்பட உலக சினிமா வரைபடத்தில் அழுந்தத் தடம் பதித்திருக்கும் 55 நாடுகளின் 95 படங்களைத் திகட்டத் திகட்டத் திரையிடுகிறோம்.
சென்னை அண்ணா சாலையில் அருகருகே அமைந்திருக்கும் தேவி, தேவி பாலா, அண்ணா, கேசினோ, ரஷ்யா கலாச்சார மையம், தாகூர் திரைப்பட மையம் ஆகிய ஆறு திரையரங்குகளில் தினசரி மூன்று காட்சிகள் வீதம் திரையிடப்படவிருக்கும் இப்படங்கள் அனைத்துமே 2018, 2019 ஆண்டுகளில் வெளியானவை” என்றவர் இம்முறை ஜெர்மானியப் படங்கள் கூடுதல் கவனம் பெறுவதில் இருந்த பின்னணியை விவரித்தார்.
“உலக சினிமா பிரிவுக்கு வெளியே ‘கண்ட்ரி ஃபோகஸ்’ என்ற பிரிவின் கீழ், ஹங்கேரி நாட்டின் 4 படங்களும், ஜெர்மானிய சினிமாவின் புதிய தலைமுறை இயக்குநர்களின் படைப்பாக்கத்தில் உருவாகி சர்வதேச அளவில் கவனம் பெற்றிருக்கும் 6 படங்களும் திரையிடப்பட இருக்கின்றன.
அதே நேரம், இரண்டாம் உலகப்போருக்குப் பிறகான ஜெர்மனியை இரண்டாகப் பிரித்த நாடுகள், பெர்லின் சுவர் எழுப்பி அதன் எல்லையைப் பிரித்துக் கொண்டதுடன், தலைநகரான பெர்லினையும் இரண்டாகத் துண்டாடின. பிரிவினைக்கு எதிராக லட்சக்கணக்கான மக்கள் திரண்டு, எல்லையைக் கடந்து சென்றும் பெர்லின் சுவரைத் தகர்த்தும் தங்கள் எதிர்ப்பைக் காட்டினர்.
பெர்லின் சுவர் தகர்க்கப்பட்ட 30 ஆண்டுகளின் நிறைவைக் கொண்டாடும் விதமாக, ஜெர்மனியின் தேசப் பிரிவினையை மையமாகக் கொண்ட 6 படங்கள் திரையிடப்பட இருக்கின்றன. ஒட்டுமொத்தமாகத் திரையிடப்பட இருக்கும் 130 திரைப்படங்களில், சுமார் 40 படங்கள், கான், பெர்லின், வெனிஸ், டொரண்டோ, கார்லோவாரி உள்ளிட்ட புகழ்பெற்ற சர்வதேசப் படவிழாக்களில் சிறந்த படம், சிறந்த இயக்குநர், சிறந்த திரைக்கதை உட்பட பல்வேறு பிரிவுகளில் விருது, போட்டிப் பிரிவுக்குத் தேர்வு, அதிகாரபூர்வ திரையிடலுக்குத் தேர்வு என சர்வதேச அங்கீகாரத்தையும் பாராட்டுகளையும் பெற்றவை” என்றார்.
புதிதாய் இணைந்த நாடுகள்
உலக சினிமா பிரிவில், இம்முறை முதல் முறையாக, அசர்பெய்ஜான், அல்பேனியா, நியூசிலாந்து, கத்தார், சூடான் ஆகிய ஐந்து நாடுகளின் திரைப்படங்கள் பங்கேற்பது சென்னை சர்வதேசத் திரைப்பட விழாவில் புதிய உலக நாடுகளின் வரவைக் கூட்டியிருக்கிறது. இவற்றில் அசர்பெய்ஜான் நாட்டிலிருந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கவிருக்கும் ஒரு படம் ‘தி பிரா’ (The Bra).
ரயில் பாதையின் சில அடிகள் தூரம் தள்ளி தங்கள் வீடுகளை அமைத்து வாழ்ந்துவரும் அகதிகளின் குடியிருப்புப் பகுதி அது. கேரம் விளையாட்டு, ஆடு, மாடுகளைக் கட்டி வைப்பது, கொடி கட்டி துணிகளைக் காயப்போடுவது என ரயில் பாதையை வீட்டின் முற்றம்போல் பயமின்றிப் பயன்படுத்தி வாழ்ந்து வரும் அவர்கள், ரயில்வரும் நேரத்தில் மட்டும் ஆக்கிரமிப்புகளை அகற்றிவிட்டுத் தள்ளி நிற்பார்கள்.
அந்த வழியில் இரு தினங்களுக்கு ஒருமுறை சரக்கு ரயிலை ஓட்டிச் செல்கிறார் நடுத்தர வயதைக் கடந்த இன்ஜின் டிரைவரான நர்லன். ஒருமுறை காய்ந்துகொண்டிருந்த துணிகளின் கொடி ஒன்றை அவரது ரயில் அறுத்துச் செல்ல, இன்ஜினின் முன்பக்கத்தில் பெண்கள் அணியும் உள்ளாடை ஒன்று தொற்றிக்கொண்டு விடுகிறது.
சின்ட்ரெல்லா விட்டுச் சென்ற கண்ணாடிக் காலணியை எடுத்துக்கொண்டு, இளவரசன் சார்லஸ் அவளைத் தேடுவதைப் போல, தனது விடுமுறை நாளில், தனது இன்ஜினில் சிக்கிய உள்ளாடைக்கு உரிய பெண்ணைத் தேடி அந்த அகதிகள் குடியிருப்புப் பகுதிக்கு வருகிறார் நர்லன். திருமணம் செய்துகொண்டு தனக்கான குடும்பதை உருவாக்கிக்கொள்ளத் தவறிய அந்த மனிதனால், அந்தப் பெண்ணைக் கண்டுபிடிக்க முடிந்ததா என்பதுதான் ‘தி பிரா’வின் கதை. கிளுகிளுப்பான கதை போலத் தோன்றினாலும் படம் அகதிகளின் வலியைக் கடத்தும்.
நிஜம், கற்பனை இரண்டையும் நகைச்சுவை எனும் இழையால் கோத்து, எட்டாத மானுடக் கனவுகளின் எதிர்பாராத தருணங்களைச் சித்தரிப்பதில் கைதேர்ந்தவர் ஜெர்மானிய இயக்குநரான ஃபைட் ஹெல்மியர். அவரது இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியாகி, கவனம் ஈர்த்த இந்தப் படம், மிகக் குறைந்த வசனங்களைக் கொண்டது. திரைப்படம் வசனங்களை நம்பிக்கொண்டு இருப்பதில்லை என்பதை சொல்லும் சுவாரசியம் குறையாத உலக சினிமாக்களில் ஒன்று.
பனோரமாவும் தமிழ்ப் படப் போட்டியும்
இந்தியன் பனோரமா பிரிவில், ‘அமோரி’ என்ற கொங்கனி மொழிப்படம், ‘ஜாவி – தி சீட்’ என்ற அசாமியப் படம், ‘நேதாஜி’ என்ற இருளர் மொழிப் படம் ஆகிய மூன்று படங்கள் முதல் முறையாகத் திரையிடப்பட இருக்கின்றன. மேலும் கன்னடம், மலையாளம், தெலுங்கு, குஜராத்தி, வங்காளி, இந்தி, கரோ – காசி உள்ளிட்ட 13 இந்திய மொழிப் படங்கள் திரையிடப்பட இருக்கின்றன. ரூபாய் 7 லட்சம் ரொக்கப்பரிசு கொண்ட, தமிழ்ப் படங்களுக்கான போட்டிப் பிரிவில் 19 தமிழ்ப் படங்களும், தமிழ்நாடு அரசின் எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சிக் கல்லூரி மாணவர்களின் டிப்ளமோ குறும்படங்களும் திரையிடப்பட இருக்கின்றன.
ஆறு திரையரங்குகளில் எந்த தேதியில், என்ன திரைப்படம், அதன் காட்சி நேரம் ஆகியவற்றை www.icaf.in என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம். அதேநேரம், படங்களின் முழுமையானக் கதைச் சுருக்கம், அவை பெற்றிருக்கும் சர்வதேச அங்கீகாரம், படங்களைக் குறித்த சுவாரசியமான கட்டுரைகள் ஆகியவற்றை www.tamilhindu.in இணையதளத்தில் விரிவாக வாசிக்கலாம்.