ஆர்.சி.ஜெயந்தன்
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் இன்று செயல்பட முடியாத அமைப்பாக முடங்கிக் கிடக்கிறது. ஆனால், அதை 90-களில் பலம் வாய்ந்த ஒரு அமைப்பாகக் கட்டி எழுப்பியவர்களின் குழுவில் ஒரு துடிப்பான இளைஞர் முன்னால் நின்றார். அந்தச் சங்கத்துக்குத் தலைமைப் பொறுப்பேற்கும் வாய்ப்பு அமைந்தபோது அதை மறுத்து, செயல்படுவதற்கு ஏற்ற செயலாளர் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.
தமிழ் திரையுலகக்துக்கு என்று தனியே வர்த்தக சபை ஒன்று தேவை என்பதை உணர்ந்த அவர், அதை அமைத்துவிட முதல் முயற்சியில் இறங்கினார். பின்னர் அதற்குத் தடைகள் முளைத்தபோது, இங்கிருக்கும் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையையே சினிமா தொழிலின் வளர்ச்சிக்குப் பயன்படுத்திக் கொள்வதுதான் புத்திசாலித்தனம் என்று முடிவெடுத்து, அதன் செயற்குழுவுக்குப் போட்டியிட்டுத் தேர்வானார்.
தனது தனித்த செயல்பாடுகளால் உறுப்பினர்களின் நன்மதிப்பைப் பெற்று அதன் துணைத் தலைவராகி, தனது தனித்த செயல்பாடுகளால் தலைவராகவும் உயர்ந்தார். தென்னிந்தியத் திரைப்பட வர்த்தக சபையையும் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தையும் திரைத் தேரின் இரட்டைக் குதிரைகளாகப் பாவித்து தமிழ் சினிமாவின் வணிக வளர்ச்சியைப் பெரும் பாய்ச்சலுடன் முன்னெடுத்துச் சென்ற அந்த இளைஞர் கேயார் என்று அழைக்கப்படும் கோதண்ட ராமைய்யா.
அப்பாவின் கண்டிப்பு
சென்னையைப் பூர்விகமாகக் கொண்ட சீனிவாசலு - சுப்பம்மாள் தம்பதிக்கு 1953-ல் மகனாகப் பிறந்தவர் கேயார். விஜயா – வாகினி ஸ்டுடியோவின் அதிபர் நாகி ரெட்டியாருடன் இணைந்து ஏற்றுமதி வணிகத்தில் ஈடுபட்டுவந்தார் சீனிவாசலு. ஆனால், சினிமா தொழிலில் நாட்டமில்லாதவர். தனது வீட்டில் இருப்பவர்கள் யாரும் சினிமா பார்க்கத் திரையரங்குக்குச் செல்லக் கூடாது; அப்படிப் போனால் வீட்டில் சோறு கிடையாது என்று உத்தரவு போட்டிருந்தார்.
அப்பாவுக்குத் தெரியாமல், எம்.ஜி.ஆர். சிவாஜி, என்.டி.ஆர், நாகேஷ்வர ராவ் நடித்த படங்களைப் பார்த்துவிட்டு வந்து அவற்றின் கதைகளை அக்காள்கள் தனக்குச் சொல்வதைக் கேட்கக் கேட்க கோதண்ட ராமைய்யாவுக்கும் சினிமா பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. ஆனால், அப்பாவை நினைத்து பயந்தார். எதிர்பாராத விதமாக கேயாரின் 11-ம் வயதில் அவருடைய அப்பா இறந்துவிட அம்மா, சகோதரிகளின் அரவணைப்பில் வளர்ந்தார்.
சைதாப்பேட்டை எஸ்.கே.பி.டி ஆண்கள் மேல்நிலையில் படித்தபோது கேயார் முதன் முதலில் பார்த்தது ஓர் ஆங்கிலப் படம். தமிழ், தெலுங்குப் படங்களும் கவர்ந்தாலும் ஆங்கிலப் படங்களைப் பார்ப்பதற்கே அவரது கண்கள் அலை பாய்ந்தன. உள்ளூர் சினிமாவில் இல்லாத விநோதக் கற்பனைகளும் சுவாரசியமும், ஆங்கிலப் படங்களில் இருப்பதாக அவர் நினைத்தார். பள்ளிப் படிப்பை முடித்தபோது சினிமாவில் இயக்குநர் ஆவது என்று முடிவுசெய்தார்.
முதல் படம் கொடுத்த பாடம்
வீட்டில் யாரிடமும் கூறாமல் திரைப்படக் கல்லூரிக்குச் சென்று விண்ணப்பம் வாங்கி, விண்ணப்பித்தார். திரைக்கதை – இயக்கம் பிரிவில் சேர நினைத்தவருக்குப் பெரிய மனிதர்களின் சிபாரிசு தேவைப்பட்டதால், அதைத் தவிர்த்துவிட்டு ‘பிலிம் பிராசசிங் பிரி ’வில் 1972-ல் சேர்ந்தார். பிலிம் பதனிடல் பிரிவில் சிறந்த மாணவராக விளங்கிய கேயார், திரைக்கதை – இயக்கம், ஆடியோ கிராபி, எடிட்டிங் என எல்லா வகுப்புகளிலும் தன்னார்வமாகப் போய் அமர்ந்துவிடுவார். இவரது ஆர்வத்தைக் கண்ட பேராசிரியர்கள், ‘பணக்கார வீட்டுப் பையன்… நீ நினைத்தால் ஒரு சினிமா லேப் தொடங்கலாமே’ என்று கூற, அவருக்கும் அதில் ஆர்வம் ஏற்பட்டது.
ஆனால், திரைப்படக் கல்லூரியில் படிப்பை முடித்து வெளியே வந்தபோது ஏற்கெனவே பிரபலமாகியிருந்த ஜெமினி, விஜயா லேப் உடன் பிராசாத் பட நிறுவனமும் புதிதாக லேப் தொடங்கியதால் அந்த எண்ணத்தைக் கைவிட்டுவிட்டு சென்னை தூர்தர்ஷனில் பிலிம் புராசசிங் பிரிவுக்குப் பொறுப்பாளராக டெக்னிஷினியனாக வேலையில் சேர்ந்தார். அன்று சென்னைத் தொலைக்காட்சி நிலையம் தரமணி திரைப்படக் கல்லூரி மாணவர்களால் நிறைந்து, அதுவும் ஒரு திரைப்படக் கல்லூரி போலவே துள்ளலுடன் நடைபோட்டது.
அன்று தொலைக்காட்சி செய்திகள் அனைத்தும் 16 எம்.எம்.படச்சுருளில் படமாக்கப்பட்டு, பிலிம் பதனிடலுக்குப் பின் ‘டெலி சினி’ முறையில் ‘ஃபார்மேட்’ செய்யப்பட்டு ஒளிபரப்பு செய்யப்பட்டன. இதனால் செய்தி ஒளிபரப்பாகும் நேரத்துக்கு முன்பாகவே ‘ பிலிம் புராசசிங்’ முடித்துக்கொடுக்க வேண்டிய சவாலான பணியில் மூன்று ஆண்டுகள் பணிபுரிந்தார். பின்னர் சினிமா இயக்க வேண்டும் என்ற கனவுடன் வேலையை ராஜினாமா செய்துவிட்டு, தனது முதல் படத்தைத் தொடங்கினார்.
திரைப்படக் கல்லூரியில் தன்னுடன் பயின்ற கேரள நண்பர்களைத் தொழில்நுட்பக் கூட்டணியாக அமைத்துக்கொண்டு, தாமே கதை, திரைக்கதை, வசனம் எழுதி, இயக்கி ‘சிசிரத்தில் ஒரு வசந்தம்’ என்ற மலையாளப் படத்தைத் தனது அம்மாவிடம் ரூபாய் நான்கரை லட்சத்தைப் பெற்றுத் தயாரித்து முடித்தார். இன்று நடிகராகவும் இயக்குநராகவும் இருக்கும் பிருத்விராஜின் அப்பாவான சுகுமாரன் கதாநாயகனாக நடித்த அந்தப் படத்தைக் கேரளத்தின் முன்னணி விநியோக நிறுவனமான சுகுணா ஸ்கிரீன்ஸ் திரையிட்டது. படம் படுதோல்வி அடைந்தாலும் பத்து நாட்களைக் கடந்து ஓடியது.
தினசரி வசூல் அறிக்கை வந்ததே தவிர, கேயாரின் கைக்கு நாலரை லட்சத்திலிருந்து ஒரு பைசாகூட வரவில்லை. சுலபமாகப் படம் இயக்கித் தயாரித்துவிடலாம். ஆனால், விநியோகம் என்பது வலுவாகவும் கண்காணிப்பு மிக்கதாகவும் இல்லாவிட்டால் எத்தனை பெரிய சூப்பர் ஸ்டார் நடித்த படத்திலிருந்தும் போட்ட பணத்தை மீட்க முடியாது என்ற பாடத்தை முதல் படம் கற்றுக்கொடுத்தது. முதல் பட அனுபவமே 32 வயதில் 32 திரையரங்குகளை நடத்தும் அளவுக்குத் திரையரங்கத் தொழிலிலும் திரைப்பட விநியோகத்திலும் அவரை ஜாம்பவான் ஆக்கியது.
கேயாரின் திரைப்பட விநியோகத்தைக் கண்டு கேரளத்தின் மூத்த திரைப்படக் கலைஞரான நவோதயா அப்பச்சனே ஆடிப்போன அதிசயமும் நடந்தது. ‘மை டியர் குட்டிச் சாத்தான்’ 3டி படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை மட்டுமல்ல, சென்னையில் ‘கிஷ்கிந்தா’வை அமைந்தபோது, கேயாரைத் தேடி வந்து அதில் அவரை இயக்குநராகவும் பங்குதாரராகவும் ஆக்கினார் அப்பச்சன். அப்படிப்பட்ட கேயாரின் தடங்களை அடுத்த வாரமும் தொடர்வோம்.
தொடர்புக்கு: jesudoss.c@hindutamil.co.in
படங்கள் உதவி: ஞானம்