திரை பாரதி
தமிழ் சினிமாவையும் ‘புரடியூர் கவுன்சில்’ என்று அழைக்கப்படும் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தையும் பிரித்துப் பார்க்க முடியாது. படத் தயாரிப்பு ஒரு லாபகரமான தொழிலாக இருப்பதற்கு இச்சங்கத்தின் அணுகுமுறையும் விநியோக உத்திகளுமே காரணம். அதேபோல் தயாரிப்பாளர் சங்கத்தைச் சார்ந்தும் அனுசரித்தும் பெப்சி உள்ளிட்ட சினிமா தொழிலாளர் சங்கங்கள் இயங்குகின்றன.
படத் தயாரிப்பின் மையமாக விளங்கும் இச்சங்கத்தை, காலம் தோறும் வலிமைப்படுத்தி வந்திருக்கும் தலைமை நிர்வாகிகள் பலர். அவர்களில் கே.ஆர்.ஜி. எனத் திரையுலகினரால் நினைவு கூரப்படுபவர் அச்சங்கத்தை வலிமைமிக்க அமைப்பாக மாற்றிய கே.ராஜகோபல். அவர் மறைந்தபோது, அவரது சங்கப் பணியை அனைத்துத் தரப்பினரும் நன்றியுடன் நினைவுகூர்ந்தனர். ‘எதிரிகளே இல்லாதவர்; எல்லோருக்கும் இனியவர், ஆற்றல் மிக்கச் செயல் வீரர்’ என்று பெயர்பெற்றிருக்கிறார் கே.ஆர்.ஜி.
பேட்டி ஒன்றில் இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரிடம் உங்களுக்குப் பிடித்த தலைவர் யார் என்று கேள்வி கேட்கப்பட்டபோது அதற்கு அவர் அளித்த பதில் ‘நான் பெரிதும் மதிக்கும் கே.ஆர்.ஜி’ என்று பதிலளித்தார். அவரது வாழ்க்கை வரலாற்றை ‘தலைவர் கே.ஆர்.ஜி’ என்ற தலைப்பில் 31 அத்தியாயங்கள் கொண்ட விறுவிறுப்பான நாவலைப் போல் எழுதியிருக்கிறார் பத்திரிகையாளர், மக்கள் தொடர்பாளர், எழுத்தாளர், திரைப்பட இயக்குநர் எனப் பல துறைகளில் தடம் பதித்திருக்கும் ஜி.பாலன்.
திரைப்பட வர்த்தக சபையில் உறுப்பினராக இருந்தால் போதும் என்று எண்ணிக்கொண்டிருந்த தயாரிப்பாளர்களை, இரவு, பகல் பாராத தனது களப்பணிகளால் ஈர்த்து, தயாரிப்பாளர் சங்கத்துக்கு ஈர்த்து அதை வலிமையான அமைப்பாக மாற்றியதில் தொடங்கி, கால வரிசைப்படி கே.ஆர்.ஜியின் சாதனைகளைப் பதிவுசெய்திருக்கிறார் நூலாசிரியர் பாலன். ஒரு சங்கத் தலைவரின் வாழ்க்கை வரலாறாகச் சுருங்கிவிடாமல், 30 ஆண்டு கால தயாரிப்பாளர் சங்கத்தின் வரலாறாகவும் இருப்பது இந்நூலை ஒரு முக்கிய ஆவணமாக்கியிருக்கிறது.
ஒவ்வொரு அத்தியாயமாக வாசித்தபடி நகர்ந்து செல்லும்போது, அன்று தயாரிப்பாளர்கள் சந்தித்த பிரச்சினைகளும் அவற்றை கே.ஆர்.ஜி. எத்தனை திறமையாகக் கையாண்டு வெற்றியைக் கொண்டுவந்து சேர்த்திருக்கிறார் என்பதில் அவரது ஆளுமையும் ஒரே நேரத்தில் வெளிப்படுவதில் சுவாரசியம் குறையாத திரை நூலாகவும் கவனம் ஈர்க்கிறது.
தலைவர் கே.ஆர்.ஜி
ஜி.பாலன்
மதுபாலா பதிப்பகம்,
சென்னை -94
தொடர்புக்கு: 9383388860