இந்து டாக்கீஸ்

ஆடி அடங்கும் வாழ்க்கையடா! - 50 ஆண்டுகள் நிறைவு செய்த நீர்க்குமிழி

எஸ்.ராஜகுமாரன்

‘அன்புக் கரங்கள்’, ‘ஆயிரத்தில் ஒருவன்’, ‘இதயக் கமலம்’, ‘எங்க வீட்டுப் பிள்ளை’, ‘காக்கும் கரங்கள்’, ‘திருவிளையாடல்’ இவையெல்லாம் 1965-ல் வெளியான சில முக்கியமான படங்கள். இவற்றோடு வெளியான ஒரு படம்தான் ‘நீர்க்குமிழி’. படத்தின் தலைப்பே, மற்ற படங்களிலிருந்து ஒரு வித்தியாசத்தை உணர்த்துகிறதல்லவா? படமும் அப்படித்தான்.

‘கன்னித்தாய்’ என்ற திரைப்படத்துக்குக் கதை-வசனம் எழுதித் தனது திரைப் பயணத்தைத் தொடங்கினார் கே.பாலசந்தர் என்னும் நாடக இயக்குநர். நாகேஷ் நடித்த ‘சர்வர் சுந்தரம்’(1964) படத்தின் வித்தியாசமான கதை-வசனத்தால், அவரின் பெயர் கவனம் பெற்றது. கே. பாலசந்தர் இயக்கிய முதல் திரைப்படம் ‘நீர்க்குமிழி’.

‘நீர்க்குமிழி’படத்தின் பெயரே பாலசந்தரின் நட்பு வட்டத்தில் சென்டிமென்ட் புயலைக் கிளப்பியது. ‘நிலையில்லாத நீர்க்குமிழி என்னும் வார்த்தையைத்தான் நீ இயக்கும் முதல் படத்துக்குப் பெயராக வைக்க வேண்டுமா?’ என்று பீதியைக் கிளப்பினார்கள். வெற்றி பெற்ற நாடகத்தை அதே பெயரில் இயக்குவதில் கே.பி. உறுதியாக இருந்தார். தமிழ்த் திரையில் அதிலிருந்து தொடங்கியதுதான் கே.பி டச்!

ஒரு நர்சிங் ஹோம். அதன் ஏழாவது வார்டு. மூன்று நோயாளிகள், ஒரு தலைமை மருத்துவர், ஒரு மருத்துவர், ஒரு நர்ஸ், நோயாளிகளைச் சந்திக்க வரும் சில மனிதர்கள் எனக் குறைவான கதாபாத்திரங்களைக் கொண்டு பின்னப்பட்ட நேர்க்கோட்டுக் கதை. இது ஏழாம் நம்பர் வார்டின் கதை என்ற பின்குரலோடு படம் தொடங்குகிறது.

தமிழ் சினிமாவின் முதல் சேது

கதையின் மையப் பாத்திரமான சேது (நாகேஷ்) ஒரு புற்று நோயாளி. தன் மகள் டாக்டர் இந்திராவை (சௌகார் ஜானகி) அமெரிக்காவுக்கு அனுப்பி மேற்படிப்பு படிக்க வைக்க வேண்டும் என லட்சியக் கனவு காணும் தலைமை மருத்துவர் (மேஜர் சுந்தர்ராஜன்), காலில் அடிபட்டு சிகிச்சைக்காக வந்திருக்கும் கால்பந்து வீரர் அருண் (வி. கோபால கிருஷ்ணன்), டுயூட்டி நர்ஸ் (ஜெயந்தி) இவர்கள்தான் மற்ற முக்கியப் பாத்திரங்கள்.

கால்பந்து வீரர் அருண் மேல் ஏற்படும் காதலால் அமெரிக்கா போவதைத் தவிர்க்கிறார் டாக்டர் இந்திரா. காலை இழந்த பின்னும்கூட சொத்துக்காக அருணைக் கொல்ல அவனுடைய சொந்தங்களே திட்டமிடுகின்றனர். காதலால் தன் லட்சியத்தையே அலட்சியம் செய்த மகளை மருத்துவமனைக்கே வரக் கூடாது எனத் தடை விதிக்கிறார் தலைமை டாக்டர். குறும்புக்காரனான சேதுவுக்கு அவனுடைய மிச்ச வாழ்நாட்கள் மிகவும் குறைவானவை எனத் தெரியவருகிறது. அவன் அருண் - இந்திரா காதலை அறிந்து, அவர்களை சேர்த்து வைக்கத் தீவிரமாகத் திட்டமிடுகிறான். இறுதியில் எல்லோருடைய கனவுகளும் நீர்க்குமிழிகள் ஆகின்றன. இதுதான் கதை மையம்.

அறிமுக இயக்குநர்

படத்தின் பெயர் தொடங்கிப் பல எதிர்மறை விஷயங்களால் கதையைத் துணிச்சலாக நகர்த்திய அறிமுக இயக்குநர் இறுதிக் காட்சியில் கொஞ்சம் தடுமாறுகிறார். நாகேஷின் மரணத்துடன் சட்டென முடிய வேண்டிய படம், சிறிது நேர ஜவ்வு மிட்டாய் இழுப்புக்குப் பின், டாக்டர் இந்திரா மேல் படிப்புக்காக அமெரிக்கா செல்வதுடன் முடிவது கொஞ்சம் அலுப்பைத் தருகிறது.

அதே போல் மேடை நாடகத்தைத் திரைப் பிரதியாக மாற்றியதாலோ என்னவோ ஒரு மேடை நாடகத்தைக் கீழிருந்து கவரேஜ் செய்தது போலவே காட்சிகள் நகர்கின்றன. எளிமை நடுத்தர வர்க்கத்து ஸ்பெஷலிஸ்ட்டாக நாடகங்கள் இயக்கி வெற்றி கண்ட கே.பி.யின் சமூக எள்ளல் மிகுந்த வசனங்களும், இயல்பான அங்கதம் இழையோடும் காட்சி அமைப்புகளும் முழுப் படத்தையும் தொய்வின்றி எடுத்துச் செல்கின்றன.

நகைச்சுவை பந்தம்

புற்று நோயாளியான சேதுவின் ஒரே சொந்தபந்தம் கள்ளங்கபடமற்ற அவனுடைய நகைச்சுவை உணர்வுதான். மரணத்தை நாட்கணக்கில் நெருங்கும் அவன், அதையறியாது செய்யும் சேட்டைகள், ஒரு பக்கம் சிரிப்பையும் இன்னொரு பக்கம் அனுதாபத்தையும் ரசிகர்களுக்கு ஏற்படுத்தும். கே.பி. வார்த்த இந்தப் பாத்திரப் படைப்பின் வெற்றிதான் இந்தப் படத்தின் வெற்றி. அங்கதம் வழியும் இயல்பான முகபாவங்களாலும் குறும்பு கொப்பளிக்கும் உடல் மொழியாலும் நாகேஷ் படம் நெடுகிலும் அந்தக் கதாபாத்திரத்துக்கு உயிரூட்டியுள்ளார்.

கட்டிலுக்குக் கீழே பதுங்கியவாறு புகை பிடித்தபடி சேது கதாபாத்திரமாக நாகேஷ் அறிமுகமாகும் காட்சியே அமர்க்களம். வெளியே வந்து வாய்க்குள் மிஞ்சியுள்ள புகையை, மறைத்து பின்பு அவர் முகத்தை அஷ்ட கோணலாக்கி வெளியேற்றும் முகபாவனைகள் அருமை. அதே போல் ஈட்டிக்காரனுக்குப் பயந்து ஜன்னல் கண்ணாடியில் மூக்கையும் வாயையும் அழுந்தப் பதித்து அவர் வெளிப்படுத்தும் கோமாளி பிம்பம் அநாயாசம். தொடர்ந்து நர்சு உடை மாற்றும் அறைக்குள் அவர் முகத்தையே அவர் கையால் திருப்புவதும் மீண்டும், முகம் தானாக, உடை மாற்றும் நர்சை நோக்கித் திரும்புவதும் நாகேஷ் நடிப்புக்கு உதாரணம் காட்டத் தக்க காட்சிகள். நாகேஷ் என்னும் நடிப்புக் கலைஞனின் ஆற்றல் இப்படிப் படம் நெடுக இயல்பாக வெளிப்படுகின்றன.

தனக்கு நடிக்க ஒரு வாய்ப்பு வேண்டும் என கே.பி.யிடம் கேட்ட நாகேஷிடம், உனக்காக ஒரு கதையையே உருவாக்குகிறேன் என அவர் எழுதிய நாடகம்தான் சர்வர் சுந்தரம். மேடையில் வெற்றி பெற்ற அந்த நாடகத்தை கே.பி.யின் கதை வசனத்தில் கிருஷ்ணன் - பஞ்சு இயக்கத்தில் ஏ.வி.எம். நிறுவனம் தயாரித்தது. நாகேஷின் திரைப் பயணத்தில் அந்தப் படம் ஒரு மைல்கல்லாக அமைந்தது. கே.பி.க்கும் அது ஒரு பெரும் திருப்புமுனையானது. அதைத் தொடர்ந்து வெளியான இந்தப் படம் நாகேஷ் என்னும் நகைச்சுவைக் கலைஞனுக்குள் இருந்த மாறுபட்ட நடிப்பாற்றலை வெளிப்படுத்துவதாக அமைந்தது.

படத்தில் வி. குமாரின் இசை அமைப்பில் இரண்டு பாடல்கள் மட்டுமே உள்ளன. ஜெயந்தியுடன் நாகேஷ் ஆடும் ‘கன்னி நதி ஓரம்...’ என்னும் டூயட் பாடல். இது ஆலங்குடி சோமு எழுதியது. ராக் அண்ட் ரோல் பாணியில் உடம்பை ஒரு ரப்பர் பேண்ட் போல் வளைத்து நாகேஷ் ஆடும் நடனம் அன்றைய தமிழ் சினிமாவில் நிச்சயம் தனித்துவமானது. இப்போது பார்க்கும்போதும் ரசிக்க முடிகிறது.

இன்னொரு பாடலின் பல்லவி வரிகளைச் சொன்னாலே நம் எல்லோர் மனதும் முணுமுணுக்கும்: ‘ஆடி அடங்கும் வாழ்க்கையடா... ஆறடி நிலமே சொந்தமடா’. கூர்மையும் தனித்துவமும் பொருந்திய மரபுக் கவிஞராக விளங்கிய உவமைக் கவிஞர் சுரதாவின் வரிகள், எளிமையும் இயல்புமாக வாழ்க்கையின் நிலையாமையை உணர்த்துகின்றன. நாகேஷின் உடலுக்கு சீர்காழி கோவிந்தராஜனின் துயரக் குரல் அப்படியே பொருந்திப்போகிறது. இந்தப் பாட்டில் வெளிப்படும் நாகேஷின் முகபாவங்களும் உடல்மொழியும் ஆரவாரமற்ற அண்டர் பிளே அற்புதம்!

இந்தப் படத்தின் நடன இயக்குநர், பிரபுதேவாவின் தந்தை சுந்தரம் மாஸ்டர். ஏ.ஆர். ரகுமானின் தந்தை ஆர்.கே.சேகர் இதில் இணை இசை அமைப்பாளராக பணிபுரிந்துள்ளார். இசை வி.குமார். ஒளிப்பதிவு நிமாய் கோஷ். அந்தக் காலத்துக் குறைந்த பட்ஜெட் படமான ‘நீர்க்குமிழி’ ஒரு வெற்றிப் படம். படத்தின் ஹைலைட் என்றால் ‘ஆடி அடங்கும் வாழ்க்கையடா’ பாடலும் நாகேஷின் நடிப்பும்தான். சென்னை கெயிட்டி தியேட்டரில் அந்த நாட்களில் தொடர்ந்து 80 நாட்கள் ஓடியது.

நட்சத்திர நடிகர்களின் படங்களில் நகைச்சுவை ஊறுகாயாக மட்டும் தொட்டுக்கொள்ளப்பட்ட நாகேஷ் என்னும் நடிகனின் பன்முக நடிப்பாற்றலை வெளிப்படுத்தியதில் இயக்குநர் கே.பாலசந்தரின் பங்களிப்பு முக்கியமானது. அவரின் இயக்கத்தில் உருவான முதல் படமான ‘நீர்க்குமிழி’ காலங்களைக் கடந்து, ரசிக நெஞ்சங்களில் உடையாமல் நிற்கும் என்பது உறுதி!

SCROLL FOR NEXT