குமாரபாளையம் அருகில் உள்ள தேவூர் என்ற கிராமத்தில் ஆறுமுகம் - பாவாயி தம்பதிக்கு மகனாகப் பிறந்த சின்னச்சாமிதான் பின்னாளில் ஆபாவாணன் ஆனார். சேலம், கொளத்தூர் நிர்மலா மேல்நிலையில் பள்ளிக் கல்வியை முடித்து சென்னை வந்தவர் முதலில் தாம்பரம் கிறிஸ்தவக் கல்லூரியில் இளங்கலையும் பின்னர் தரமணி திரைப்படக் கல்லூரியில் திரைக்கதை - இயக்குதல் பிரிவில் பட்டயமும் பெற்றவர்.
‘ஊமை விழிகள்’ வழியே தனது திரைப் பயணத்தை தொடங்கியபோது அப்பாவின் பெயரில் உள்ள ‘ஆ’ என்ற முதலெழுத்தையும் அம்மாவின் பெயரில் உள்ள ‘பாவா’ என்ற முதல் இரு எழுத்துகளையும் இணைத்து தன்னை ஆபாவாணன் ஆக்கிக்கொண்டவர். சென்னைக்கு வந்து வெற்றிபெற்ற கதையை அவரே விவரிப்பதைத் தொடர்ந்து வாசியுங்கள்.
“பள்ளிப் பருவத்தில் அப்பா, அம்மா இருவருமே சிவாஜியின் தீவிர ரசிகர்கள். அவர்களுடன் சிவாஜியின் படங்களை சிறுவயதுமுதல் பார்த்து, சினிமா என்றால் நடிப்பு என்று புரிந்துகொண்டிருந்தேன். அவரைபோல் சினிமாவில் நடிகனாகிவிடவேண்டும் என்ற எண்ணம் 6-ம் வகுப்பில் தோன்றியது. அதனால், நாடகங்களில் நடிப்பது, பாட்டுப் போட்டிகளில் பங்கேற்பது என்று பள்ளி நிகழ்ச்சிகளில் முன்னால் நிற்பேன்.
சென்னை வந்தபிறகுதான் திரைப்படத்தின் உண்மையான தளபதி, நடிகர்கள் அல்ல; அவர்களை ஆட்டுவிக்கும் இயக்குநர் என்று தெரிய வந்தது. இப்போது நடிப்பின் மீதான ஆசையைக் கைவிட்டு, இயக்குநர் ஆகவேண்டும் என்ற உறுதியை எடுத்துக்கொண்டேன்.
சென்னைக்கு வந்து கிறிஸ்தவக் கல்லூரியில் ஆங்கில இலக்கியம் சேர்ந்தேன். எனது கலை ஆர்வத்தைக் கண்ட பாதிரியார்கள் கல்லூரியின் தமிழ் மன்றத்துக்கு என்னைத் தலைவர் ஆக்கினார்கள். ‘அவள் அப்படித்தான்’ திரைப்படம் வெளியாகி இருந்த ஆண்டு அது. அதைப் பற்றியே கல்லூரியில் பேச்சாக இருந்தது.
‘இயக்குநர் ருத்ரய்யா திரைப்படக் கல்லூரியின் மாணவர்’ என்று காதில் கேட்டபோது, ‘ஓ..! சினிமாவைக் கற்றுக்கொள்ளத் தனியே கல்லூரியே இருக்கிறதா?’ என்று அப்போதுதான் தெரிந்துகொண்டேன், கல்சுரல்ஸ் நடத்தும் சாக்கில் திரைப்படக் கல்லூரிக்குப்போய் விசாரித்தேன். எனது அதிர்ஷ்டம், என்னுடன் பள்ளியில் படித்த நாகராஜ் என்ற மாணவர் அங்கே படத்தொகுப்பு பிரிவில் படித்துக்கொண்டிருந்தார். என்னைப் பார்த்ததும் ‘நீ வரவேண்டிய இடத்துக்குத்தான் வந்திருக்கிறாய் என்றார். கல்லூரிப் படிப்பை முடித்ததும் திரைப்படக் கல்லூரியில் சேர்ந்துவிட்டேன்.
கோபமூட்டிய சிறப்பு விருந்தினர்
திரைக்கதை எழுதுதல், இயக்கம் ஆகியவற்றுடன் ஒரு திரைப்பட உருவாக்கத்தில் தொடர்புடைய அனைத்து கலைப் பிரிவுகள் குறித்த அடிப்படை அறிவும் அங்கே கிடைத்தது. மிக மிக முக்கியமாக, சத்யஜித் ரே, ரித்விக் கட்டாக், ராபர்ட் பிரெஸ்ஸான், பெலினி போன்ற திரைப்பட மேதைகளின் மிகச்சிறந்த திரைப்படங்களைப் பார்க்க முடிந்தது. திரைப்படம் என்பது நூற்றுக்கணக்கான சாத்தியங்களை ஓர் இயக்குநருக்குத் தரும் கலை என்பதை அங்கேதான் தெரிந்துகொண்டேன். ஆனால் திரைப்படக் கல்லூரியின் ஆண்டுவிழாவுக்குச் சிறப்பு விருந்தினராக வந்திருந்த புகழ்பெற்ற, முன்னணி இயக்குநர் ஒருவர் பேசிய பேச்சு, எனக்கு அதிர்ச்சியையும் கோபத்தையும் தந்தது.
நாகரிகம் கருதி, அவரது பெயரைக் குறிப்பிட விரும்பவில்லை. விழாவின் இறுதியில் அவர் பேசும்போது “சினிமா பற்றி கல்லூரியில் வந்து படிப்பது சுத்த வேஸ்ட். இந்தக் கல்லூரியில் படித்துவிட்டு நீங்கள் அனைவரும் என்ன செய்யப்போகிறீர்கள்? கோடம்பாக்கத்துக்கு வந்து என்னைப் போன்ற இயக்குநர்களிடம் உதவியாளராகச் சேர்ந்து தொழில் கற்றுக்கொண்ட பிறகுதான் உங்களால் படம் எடுக்கமுடியும். எதற்காக உங்கள் வாழ்க்கையின் மூன்று வருடங்களை இங்கே வந்து வீணாக்குகிறீர்கள்?” என்று பேசிவிட்டு கொஞ்சம் கூட அலட்டிக்கொள்ளாமல் போய்விட்டார்.
ஆண்டு விழா முடிந்து பல நாட்கள் ஆகியும் அவர் பேசிய பேச்சை என்னால் ஜீரணிக்கவே முடியவில்லை. சினிமாவில் சாதனைகள் படைத்துக்கொண்டிருக்கும் ஓர் இயக்குநர், திரைப்படக் கல்லூரியை இவ்வளவு குறைத்து மதிப்பிட்டது ஏன் என்று பேராசிரியர்கள், மாணவர்களுடன் கலந்துரையாடினேன். திரைப்படக் கல்லூரியில் படித்துவிட்டுப் போய் படமெடுத்த யாரும் வணிக ரீதியாக வெற்றிப் படங்களை கொடுக்கமுடியாமல் போனதுதான், சிறப்பு விருந்தினரின் ‘துடுக்குப் பேச்சு’க்குக் காரணம் என்ற உண்மை அப்போது புலப்பட்டது.
அதை மாற்றிக்காட்ட வேண்டும் என்ற உறுதியும் வணிக வெற்றி மீதான வெறியும் பிறந்தன. திரைப்படக் கல்லூரியில் படித்த சக மாணவர்களை மட்டுமே வைத்துக்கொண்டு தொடர்ந்து படங்கள் எடுத்து வெற்றி கொடுக்க வேண்டும் என்று நான் எடுத்துக்கொண்ட உறுதிமொழியே ‘ஊமை விழிக’ளாக வெளிவந்தது. அதற்குமுன் ‘இரவுப் பாடகன்’ என்ற முயற்சியையும் நாங்கள் எடுத்தோம்” என்கிறார்.
‘ஊமை விழிகள்’ ஒரு குறும்படம்
திரைப்படக் கல்லூரியில் இறுதி ஆண்டு மாணவர்கள் எடுக்க வேண்டிய ‘டிப்ளமோ’ படத்துக்காக 1500 அடி நீளத்தில் ஆபாவாணன் இயக்கியிருந்த க்ரைம் த்ரில்லர் குறும்படம் ‘மர்டர் எக்கோ’. அதுதான் ‘ஊமை விழிக’ளாக உருவெடுத்தது. டிப்ளமா படத்துக்குப் பின் பல வெற்றிப் படங்களுக்கு கதை, திரைக்கதை, பாடல்கள், தயாரிப்பு எனப் பங்களித்த ஆபாவாணனை, விஜயகாந்த் நடித்த ‘காவியத் தலைவன்’ படத்தின் தோல்வி முடக்கிப்போட்டது. அதன்பிறகு ‘மூங்கில் கோட்டை’ படத்தை முதல்முறையாக இயக்கவிருந்த ஆபாவாணன் அது தள்ளிப்போனதால், தமிழ்த் தொலைக்காட்சி உலகில் வெற்றிகரமான மெகா தொடர் தயாரிப்பாளராகவும் தடம் பதித்தார்.
- ஆர்.சி.ஜெயந்தன், தொடர்புக்கு: jesudoss.c@gmail.com | படங்கள் உதவி: ஞானம்