இந்து டாக்கீஸ்

திரைப்பார்வை: அபாயத்துக்கு நடுவே - 'ஹெலன்' (மலையாளம்)

செய்திப்பிரிவு

மலையாளத்தில் சிறிய சினிமாக்களின் காலகட்டம் மீண்டும் தொடங்கியிருக்கிறது. சமீபத்தில் குறைந்த முதலீட்டில், நட்சத்திர நடிகர்கள் இல்லாமல் எடுக்கப்பட்ட பல படங்கள் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளன. ‘தண்ணீர் மத்தன் தினங்கள்’, ‘தமாஷ’, ‘இஷ்க்’ போன்ற படங்கள் அதற்கான உதாரணங்கள். இந்தப் போக்கின் தொடர்ச்சியாக வெளிவந்துள்ளது ‘ஹெலன்’.

கொச்சியில் குடியிருப்புப் பகுதி ஒன்றில் கதை தொடங்குகிறது. தந்தையும் மகளுமான ஒரு குடும்பம், அவர்களது அண்டை வீட்டார் எனப் படம் சிறிது சிறிதாக விரிவு கொள்கிறது. மகள் ஹெலன், செவிலியப் பட்டதாரி. இறந்துபோன அம்மா வைத்தியத்துக்காகப் பட்ட கடனை அடைக்க கனடாவுக்குப் போக ஐ.இ.எல்.டி.எஸ் தேர்வு எழுதவேண்டி, ஆங்கில மொழிப் பயிற்சி வகுப்புக்குச் சென்று வருகிறார். மாலையில் ஒரு வணிகவளாகத்திலுள்ள கே.எஃப்.சி. போன்ற கோழிப் பண்டக் கடையில் வேலை பார்க்கிறார்.

இவையெல்லாம் அடுத்து அடுத்துச் சொல்லப்படுகின்றன. அவற்றின் ஊடே தந்தை-மகளுக்குமான உறவு, அவர்களின் தனித்த ஆளுமைகள் எல்லாம் பதிவாகின்றன. நண்பர்களைப் போல் இருக்கும் இந்த உறவுக்கு இடையில் மகள் ஒரு காதலை மட்டும் ரகசியமாக வளர்த்துவருகிறார். அதற்கான காரணமும் முன் காட்சியில் மறைமுகமாகச் சொல்லப்படுகிறது. அந்தக் காதலனும் ஒரு காட்சியில் அறிமுகமாகிவிடுகிறான்.

தந்தை-மகள், காதலன்-காதலி, பணியிட மேலாளர்-பணிப்பெண் ஆகிய இந்த மூன்று உறவுச் சிக்கல்களைச் சொல்லி அடுத்த நிகழ்வுக்கான சாத்தியப்பாடுகளை பார்வையாளர்கள் முன்பு படம் முன்வைக்கிறது. இதற்குப் பிறகு தன் த்ரில்லர் தன்மையைப் படம் அவிழ்க்கிறது. அது ஹெலன் வேலை பார்க்கும் கடைப் பின்புலத்தில் தொடங்குகிறது. அதற்காகப் பார்வையாளர்களை அறிமுக இயக்குநர் மாத்துக்குட்டி சேவியர் முன்பே தயாராக்கிவிடுகிறார். திடமான திரைக்கதை அச்சில் படத்தின் அடுத்த அடுத்த காட்சிகள் இயங்குவதால் பார்வையாளர்களின் முழுக் கவனத்தையும் படம் பிடித்துவைத்திருக்கிறது.

படத்தில் ஹெலனுக்குச் சம்பவிக்க இருக்கும் அபாயம் தொடக்கக் காட்சி ஒன்றிலேயே காட்டப்படுகிறது. படத்தின் இடையே ஒரு காட்சியும் நாயகியை அபாயத்தின் அருகில் கொண்டுபோய் நிறுத்துகிறது; அதற்குப் பிறகுதான் அவளை அதற்குள் தள்ளித் தாழிடுகிறது. பின்பாதிப் படம் நிகழ்வதே அந்த அபாயத்துக்குள்தான். ஆனாலும் சோர்வில்லாமல் படம் நகர்கிறது. அதற்குக் காரணம் திறமையான திரைக்கதையும் படத்தொகுப்பும்தாம். ஹெலனாக நடித்திருக்கும் ‘கும்பளங்கி நைட்ஸ்’ நாயகி அன்னா பென்னும் இதற்கு வலு சேர்க்கிறார்.

காணாமல்போன ஹெலனைத் தேடும் இந்தப் படலத்தில் காவல்துறையும் இணைகிறது. அப்போது படம் சமூக விமர்சனத்தைப் போகிற போக்கில் முன்வைக்கிறது. அத்துடன், அங்கு முறுகும் சிக்கலைத் தன் பயணச் சுவாரசியத்துக்காகவும் படம் பயன்படுத்திக்கொள்கிறது. நகைச்சுவை நடிகர் அஜூ வர்கீஸ் மாறுபட்டக் கதாபாத்திரத்தில் இந்தக் காட்சிகளில் முயன்று பார்த்துள்ளார். படத்தின் தயாரிப்பாளரான வினீத் ஸ்ரீனிவாசன் ஒரே காட்சியில் வந்து வெகுமக்களின் கைத்தட்டகளை அள்ளுகிறார்.

ஆனால் கதாபாத்திர உருவாக்கத்தில் பழைய சூத்திரத்தைப் படம் கையாண்டுள்ளது. உதாரணமாக நல்ல போலீஸுக்கு இடையில் கெட்ட போலீஸ், ஆட்டோ ரோமியோ, மாப்பிள்ளை பார்க்கச் சொல்லும் பக்கத்துவீட்டுப் பாட்டி எனச் சிலவற்றைச் சொல்லலாம். ஒருவிதத்தில் பார்த்தால் தந்தை-மகள் உறவே சில இடங்களில் தேய் வழக்கான காட்சிகளாகவும் வெளிப்பட்டுள்ளன.

பிழைத் திருத்தலுக்காக நாயகி சூழலைப் பயன்படுத்திக்கொள்ளும் விதம் படத்தில் சிறப்பாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இம்மாதிரியான முயற்சிகளைப் புத்திசாலித்தனமாகப் படம் கையாண்டுள்ளது. இந்த விதத்தில் டாம் ஹங்சின் ‘காஸ்ட் அவே’, விக்கிரமாதித்யா மோத்வனேயின் ‘ட்ராப்டு’ ஆகிய படங்களைப் படங்களை இந்தப் படம் நினைவுபடுத்துகிறது. ஆனால் உணர்ச்சிகரமான வாழ்க்கையுடன் தொடர்புப்படுத்திக்கொள்வதில் ‘ஹெலன்’ அவற்றிலிருந்து விலகித் தனித்துவம் பெறுகிறது. திரைப்பார்வை


- ஜெய்குமார்

SCROLL FOR NEXT