முழுவதும் இரவில் எடுத்த தமிழ்ப் படம் எது எனத் தற்கால ரசிகர்களைக் கேட்டால், ‘கைதி’ என்று பதில் தருவார்கள். இன்னும் கொஞ்சம் யோசித்து, வெங்கட் பிரபுவின் ‘சரோஜா’ என்பார்கள். ஆனால் 1986-ல் வெளிவந்த ஒரு படம், சில காட்சிகளைத் தவிர, இரவில் படமாக்கப்பட்டிருந்தது. இரவின் ஆழ்ந்த மர்மத்தையும், அதனுள் வெவ்வேறு வேட்கை, மாறுபட்ட குணங்களுடன் உலவும் மனிதர்களையும் அசலான திரில்லர் தன்மையுடன் திரை விலக்கிக் காட்டியது. அந்தப் படம், ‘எ பிலிம் பை பிலிம் ஸ்டுடண்ட்ஸ்’ என்று கர்வத்துடன் டைட்டிலில் காட்டப்பட்ட ‘ஊமை விழிகள்’.
ஊமை விழிகளுக்குமுன், 1954-ல் வீணை எஸ்.பாலசந்தர் இயக்கத்தில் வெளியாகி, ரசிகர்களை இருக்கையின் நுனியில் இறுதிவரை உட்கார வைத்தது ‘அந்த நாள்’. தமிழ் சினிமா பேசத் தொடங்கியிருந்த அந்த 23 ஆண்டுகளில், அசலான ‘கிரைம் திரில்லர்’ படமாக ‘அந்த நாள்’ நிகழ்த்திய அதிர்வுகளையும் தாக்கங்களையும் முறியடிக்க, அடுத்த பத்தாண்டுகளுக்குப்பின் தாதா மிராசியின் ‘புதிய பறவை’ வெளியாக வேண்டியிருந்தது.
‘புதிய பறவை’க்குப் பிறகு எந்த திரில்லர் பறவையும் சிறகடிக்காத தமிழ்த் திரை வானில், அதன் பின்னர் 22 ஆண்டுகள் கழித்து 1986-ல் ‘ஊமை விழிகள்’ வெளியாகிப் பார்வையாளர்களைக் காட்சிக்குக் காட்சிப் பதறவைத்து, பிளாக் பஸ்டர் வெற்றியைப் பெற்றது. அந்த வெற்றியின் பின்னணியில், முழுவதும் தரமணி திரைப்படக் கல்லூரி மாணவர்களின் படைப்பாக்கமும் தொழில்நுட்ப அறிவும் மட்டுமே இருந்தன.
கமர்ஷியல் வெற்றிக்கான கூட்டுழைப்பு
கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இணை இசையமைப்பு, தயாரிப்பு ஆகிய பல பொறுப்புகளை ஏற்றிருந்த ஆபாவாணனோ, படத்தை இயக்கிய ஆர்.அரவிந்த் ராஜோ, ஒளிப்பதிவு செய்த ஏ.ரமேஷ்குமாரோ, படத்தொகுப்பு செய்த ஜி.ஜெயச்சந்திரனோ திரையுலகில் யாரிடமும் உதவியாளர்களாகப் பணிபுரிந்தவர்கள் அல்ல!
திரைப்படக் கல்லூரி தந்த அறிவும் தொழில்முறை செய்முறைப் பயிற்சியுமே ஒரு வணிக வெற்றிப் படத்தை உருவாக்க போதுமானவை என்பதில் உறுதியாக இருந்த இந்த மாணவர் அணி, அதற்குமுன் திரைப்படக் கல்லூரி மாணவர்கள் பெற்றிராத வணிக வெற்றியை, முதல் முறையாக ‘ஊமை விழிகள்’ மூலம் சாத்தியமாக்கிக் காட்டினார்கள்.
‘ஊமை விழிகள்’ படத்தில் நிகழும் தொடர் குற்றச் சம்பங்களின் பின்னணியில் இருக்கும் காரண கர்த்தாவையும் அவருக்குப் பின்புலமாக இருப்பவர்களையும் துருவித் தோண்டும் ஒரு நாளிதழின் ஆசிரியர், அவரது உதவி ஆசிரியர், அவருக்குப் பின்னால் நின்று கைகொடுப்பவர்கள், அந்த வழக்கை விசாரிக்கும் ஒரு நேர்மையான காவல் அதிகாரி ஆகியோரைச் சுற்றித் திரைக்கதை பின்னப்பட்டிருந்தது.
இருப்பினும், வணிக வெற்றியைத் தவறவிடக் கூடாது என்பதற்காக மெல்லிய காதல், அளவான கிளாமர், குடும்ப மிகையுணர்ச்சி, சண்டைக்காட்சி, பாடல்கள், குத்துப் பாடல், தன்னம்பிக்கைப் பாடல் எனத் தேவையான அளவுக்கு வணிக அம்சங்களைத் திரைக்கதைக்குள் சரியான இடங்களில் உள்ளிட்டிருந்தார் அதை எழுதிய ஆபாவாணன். இந்த வணிக அம்சங்கள் எவையும் படத்தில் துருத்தலாகவோ திணிப்பாகவோ தெரியாமல் திரைக்கதையைப் பின்னியிருந்தார்.
இதனால் ‘ஊமை விழிகள்’ ஒரு வெற்றிப்படம் என்பதைத் தாண்டி கமர்ஷியல் காவியமானதுடன், ஒரு ‘டிரெண்ட் செட்டர்’ படத்தைக் கொடுத்தவர்கள் என்ற அழியாப் புகழையும் ஆபாவாணனின் படக்குழுவுக்குக் கொண்டு வந்து சேர்த்தது. ‘ஊமை விழிக’ளுக்கு முன்புவரை திரைப்படக் கல்லூரி மாணவர்களைப் புறந்த தள்ளிய திரையுலகம், அதன் உருவாக்க நேர்த்தியைக் கண்டு, திரைப்படக் கல்லூரி மாணவர்களைத் தேடி ஓடி வந்தது.
தொழில்நுட்பத்தின் வெற்றி
‘ஊமை விழிகள்’ படம், ஒவ்வொரு கலை, தொழில்நுட்பப் பிரிவிலும் தேர்ச்சி மிக்க சுவாரசியத் தண்மையைக் கொண்டிருந்தது. அதிகமும் இரவில் படம் பிடிக்கப்பட்டிருந்தாலும், சினிமாஸ்கோப்பில் பதிவுசெய்யப்பட்ட பிரம்மாண்டமான காட்சியாக்கம், லைவ் ஒலிப்பதிவு, பாடல்களுக்கு டி.டி.எஸ் ஒலிக்கலவை, படத்தொகுப்பில் ஷாட்களைக் கையாண்ட விதம் எனச் சொல்லிக்கொண்டே போகலாம்.
பின்னணி இசையும் காட்சிக் கோணங்களும் இயைந்து சென்றன. லாங் ஷாட்களுக்குத் தரப்பட்ட முக்கியத்துவம், இரவு நேரத்தில் நிகழும் சம்பவங்கள் என திரில்லர் உணர்வைக் கூட்டும் கூறுகளைக் கச்சிதமாகப் பயன்படுத்திக்கொண்ட படம் இது.
கடற்கரைச் சுற்றுலா விடுதியில் அலங்காரப் பொருளாக இருக்கும் வெண்கல மணியைப் பயன்படுத்திய விதம், திரைக்கதையாளர், படத்தொகுப்பாளர் ஆகிய இருவரின் தொழில்நுட்பப் புத்திசாலித் தனத்தைக் காட்டியது. அந்த மணியை முதல் காட்சியில் டிஸ்கோ சாந்தி அடிக்கும்போது ஏற்படாத பதற்றம், தாய்க் கிழவி அடிக்கும்போது ஏற்பட்டுவிடுவதில் பார்வையாளர்கள் மிரண்டுதான் போனார்கள்.
சஸ்பென்ஸ் படங்களின் பிதாமகன் ஹிட்ச்காக் திரையில் உலவவிட்ட பல சைக்கோ கதாபாத்திரங்களின் நிழல், ரவிச்சந்திரன் ஏற்று நடித்த பி.ஆர்.கே கதாபாத்திரத்தில் இருந்தாலும், தோற்றம் தொடங்கி அவரைச் சித்தரித்துக் காட்டிய விதத்தில் தமிழ் ரசிகர்களுக்குப் புதிய பயத்தை உணரவைத்தார்கள்.
ஜே.ஆர்.கே. தனது கண்களை அகல விரித்துப் பார்த்தபடி அறிமுகமாகும் தொடக்கக் காட்சியில் தொடங்கும் பதைபதைப்பும் பதற்றமும் கடைசிக் காட்சிவரை தொடர்ந்தன. ஜே.ஆர்.கேயின் கண்கள் மட்டுமல்ல; அந்தப் பாட்டியின் கண்களும் திரையரங்கை விட்டு வெளியே வந்தபிறகும் ரசிகர்களின் தலைக்குள் வந்து மிரட்டிக்கொண்டிருந்தன.
பாடல் இல்லாத விஜயகாந்த்
படத்தின் மிரட்டலான அம்சங்களில் முதன்மையானது கதாபாத்திர வடிவமைப்பும் நட்சத்திரத் தேர்வும். விஜயகாந்த் உட்பட ரசிகர்களுக்கு நன்கு பரிச்சயமான நட்சத்திர நடிகர்களான ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், தேங்காய் சீனிவாசன், வித்யா, முதுபெரும் நடிகர் ஆனந்தன், விஜயகுமார், விஜய்காந்த், விசு, கிஷ்மு, கார்த்திக், சந்திரசேகர், தியாகு, மலேசியா வாசுதேவன், செந்தில், சரிதா, இளவரசி, சசிகலா உள்ளிட்ட அனைவருமே கதாபாத்திரங்களாக மட்டுமே தெரிந்தார்கள்.
ஒரு மல்டி ஸ்டாரர் படம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக அமைந்திருந்த ‘ஊமை விழிக’ளில், அன்று முன்னணிக் கதாநாயகனாக இருந்த விஜயகாந்தை ஒரு கதாபாத்திரம் ஏற்க வைத்திருந்தார்கள். கதாநாயகன் அறிமுகப் பாடலுடன், டூயட், கதாநாயகியைக் கிண்டல் செய்யும் டீசிங் பாடல் என விதவிதமான பாடல் காட்சிகளில் பிடிவாதமாக நடித்துவந்த விஜய்காந்தை, ஒரு பாடல்கூட இல்லாமல் அவரது முதல் காவல் அதிகாரி வேடத்தில், தலையில் கொஞ்சம் நரையுடன் தோன்றச் செய்து, இயக்குநர் கேட்டதைக் கொடுத்துவிட்டுச் செல்லும் நடிகராக அவரை மாற்றியிருந்தார்கள்.
பாடல்களின் வெற்றி
விஜய்காந்துக்குத்தான் பாடல் இல்லையே தவிர, படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும், திரைக்கதை தரும் பதற்றத்தைத் தணிக்கவும் சில இடங்களில் கூட்டவுமான உத்தியாக மாறியதுடன், படத்தை ஒரு கொண்டாட்டமாகவும் மாற்றியிருந்தன.‘நிலைமாறும் உலகில் நிலைக்கும் என்ற கனவில்’ பாடல் எல்லா வயதுக்குரியவர்களாலும் பாடப்பட்டது.
அந்தப் பாடலில் இடம்பெற்ற ‘தினந்தோறும் உணவு... அது பகலில் தோன்றும் கனவு.. கனவான நிலையில் புது வாழ்வுக்கெங்கே நினைவு’ என்ற இரண்டு வரிகள், போராடி வெற்றி பெற்றவர்கள், வெற்றிக்காகப் போராடிக் கொண்டிருப்பவர்களின் கடந்த கால நினைவுகளைக் கிளறியதுடன், நிகழ்கால வலியின் ரணத்துக்கான ஆறுதலாகவும் இரு வேறு உணர்வு நிலைகளில் சஞ்சரிக்கச் செய்தன. இடதுசாரிகளின் மேடைகள், தனியார் தொண்டு நிறுவனங்கள், சிறு போராட்டக் குழுக்கள், கல்லூரி மாணவர்கள் ஆகியோர் அந்தப் பாடலை ஓர் அடையாளம்போல் பயன்படுத்தினார்கள்.
குற்றச்செயல்களின் பின்னணியைத் துருவும் திரில்லர் என்ற தன்மையைத் தாண்டி, அதிகாரத்தில் இருப்பவர்களின் துஷ்பிரயோகம், புலனாய்வு இதழியல், நேர்மையான காவல் அதிகாரிகளின் துணிவு எனப் பல இழைகளைத் திறம்படப் பயன்படுத்திய விதத்திலும் ‘ஊமை விழிகள்’ உரக்கப் பேசியது. திரைப்படக் கல்லூரி மாணவர்களுக்குக் கௌரவமான அடையாளம் கொடுத்த ‘ஊமை விழிகள்’ படக்குழுவின் தலைமை பிரம்மாவாகிய ஆபாவாணனின் வேர்கள் எங்கிருந்து தொடங்கின..? அடுத்த வாரம்.
தொடர்புக்கு: jesudoss.c@gmail.com