சுமன்
19-ம் நூற்றாண்டின் இறுதியில் வெப்பக் காற்று பலூன்களை மையமாகக் கொண்டு நடைபெற்ற வானியல் ஆராய்ச்சிகள், அதையொட்டிய சாகசங்களைத் திரைமொழியில் சொல்ல வருகிறது ‘தி ஏரோநாட்ஸ்’ திரைப்படம்.
இங்கிலாந்தைச் சேர்ந்த வானியல் ஆய்வாளர்கள் இருவர், வெப்பக் காற்று பலூனில் உயரேப் பறந்து பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டனர். 1862-ல் அவர்கள் மேற்கொண்ட வெப்பக்காற்று பலூன் சாகசப் பறத்தலில், சுமார் 39 ஆயிரம் அடி உயரத்தைக் கடந்தனர்.
இதே போன்று பிரெஞ்சு மண்ணில் பெண் ஆய்வாளர் ஒருவர் தீரம் மிக்க வானியல் ஆய்வுக்காகத் தனது உயிரையும் பறிகொடுத்தார். இந்த இரு உண்மை சாகச சம்பவங்களையும் புனைவின் பின்னணியில் பிணைத்து ‘தி ஏரோநாட்ஸ்’ திரைப்படம் உருவாகி உள்ளது.
இங்கிலாந்து சாகசத்தில் இரண்டு ஆண்கள் மட்டுமே ஈடுபட்டனர். அதில் ஓர் ஆணின் இடத்தை பிரெஞ்சு பெண் ஆய்வாளரின் பாதிப்பிலான கற்பனைக் கதாபாத்திரத்தைப் புகுத்தி ‘தி ஏரோநாட்ஸ்’ படமாகி உள்ளது. வெப்பக்காற்று பலூன்களில் பறந்து, கண்டறிந்து சொன்ன வானியல் ஆய்வு உண்மைகள், அதன் பின்னரான அறிவியல் ஆராய்ச்சிகள், விமானக் கட்டமைத்தலில் பெரிதும் உதவின.
வானியல் ஆய்வாளர் ஜேம்ஸ் கிளைசர் வேடத்தில் எட்டி ரெட்மெய்ன், அவருடன் பயணிக்கும் பெண் பைலட்டாக ஃபெலிசிடி ஜோன்ஸ் ஆகியோர் நடித்துள்ளனர். ஹிமேஷ் படேல், ரெபேகா ஃபிரண்ட் உள்ளிட்டோர் உடன் நடித்துள்ளனர்.
கதை, திரைக்கதை, தயாரிப்பில் இணைந்ததுடன், திரைப்படத்தினை இயக்கியும் உள்ளார் டாம் ஹார்பர். பல்வேறு சர்வதேசப் திரைப்பட விழா மேடைகளை அலங்கரித்து வரும் ‘தி ஏரோநாட்ஸ்’ திரைப்படம், டிசம்பர் 6 அன்று அமெரிக்கத் திரையரங்குகளில் வெளியாகிறது. தொடர்ந்து அமேசான் பிரைம் வீடியோவிலும் வெளியாக உள்ளது.