இந்து டாக்கீஸ்

கோடம்பாக்கம் சந்திப்பு: குவியும் வாழ்த்துகள்!

செய்திப்பிரிவு

வால்ட் டிஸ்னியின் அனிமேஷன் படங்களில் பாக்ஸ் ஆபீஸில் அதிரடி வசூல் சாதனை படைத்த படங்களில் ஒன்று ஆறு ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த ‘ ஃப்ரோஸன்’. இன்று வெளியாகும் அதன் இரண்டாம் பாகத்தை உலகின் பல்வேறு பிராந்திய மொழிகளிலும் ஒரே நேரத்தில் வெளியிட்டு ஆச்சரியப்படுத்துகிறது டிஸ்னி.

அதன் தமிழ்ப் பதிப்பில், இரு சகோதரிகளில் அக்காவின் கதாபாத்திரமான இளவரசி எல்சாவின் கதாபாத்திரத்துக்கு தனது குரல்மூலம் உயிரூட்டிருக்கிறார் ஸ்ருதி ஹாசன். படத்தின் தமிழ் ட்ரைலர் வெளியானது முதலே அவரது குரல் நடிப்புக்குச் சமூக வலைத்தளங்களில் வாழ்த்துகள் குவிந்துவரும் நிலையில், ‘மேற்கத்திய இசையில் பரிச்சயம் பெற்ற ஸ்ருதிஹாசனை விட்டால் எல்சாவைத் தமிழில் உயிருட்ட யார் இருக்கிறார்கள்’ என்று அவரைப் பாராட்டி வருகிறார்கள்.

தலைப்பை மாற்று!

‘ஏ1’ படத்தில் ஒரு குறிப்பிட்ட பிரிவினரை இழிவாகச் சித்தரித்தமைக்காக வாங்கிக் கட்டிக்கொண்டார் நடிகர் சந்தானம். சர்ச்சை, வசவுகளைத் தாண்டி அந்தப் படம் அவருக்கு வெற்றியாக அமைந்தது. தற்போது சந்தானம் நடித்துவரும் ‘டிக்கிலோனா’ என்ற படத்தின் தலைப்பாலும் அவருக்குத் தலைவலி முளைத்திருக்கிறது.

இதுபோன்ற தலைப்பை தவிர்க்கும்படி அவரது நண்பர்களே அவருக்கு அறிவுறுத்தி வருகிறார்களாம். சந்தானம் மூன்று வேடங்களில் நடிக்கும் இந்தப் படத்தைப் புதுமுகம் கார்த்திக் யோகி இயக்குகிறார். இந்திய அணியின் பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்தப் படத்தில் அனகா, ஷிரின் என்று சந்தானத்துக்கு இரண்டு கதாநாயகிகள்.

திருநங்கையுடன் ரஜினி

‘தர்மதுரை’ படத்தில் விஜய்சேபதியுடன் நடித்து கவனம் பெற்றார் திருநங்கை ஜீவா சுப்பரமணியம். அதன்பின் பல தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து வந்த அவருக்கு சினிமா வாய்ப்புகள் எதுவும் அமையவில்லை. இதற்கிடையில் ‘அவள் நங்கை’ என்ற குறும்படம் அவரது நடிப்பு, நடனத் திறனை வெளிப்படுத்தும் பெரும் வாய்ப்பாக அமைந்து விட்டதாம். அந்தக் குறும்படத்தைக் கண்ட இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், அவரை அழைத்து ரஜினியுடன் ‘தர்பார்’ படத்தில் ஒரு பாடல் காட்சியில் நடனமாட வைத்துவிட்டார்.

இசை வெளியீட்டில் இரஞ்சித்!

ராஜராஜசோழன் சர்ச்சையிலிருந்து வெளியே வந்தபின் பொது நிகழ்ச்சிகளில் தலையைக் காட்டாமல் இருந்தார் இயக்குநர் பா.இரஞ்சித். நீலம் புரொடக்சன் பட நிறுவனம் மூலம் தயாரித்திருக்கும் ‘இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டார். அந்த விழாவில் பேசிய ‘பரியேறும் பெருமாள்’ படத்தின் இயக்குநர் மாரிசெல்வராஜ் “எங்கள் அண்னன் இரஞ்சித், ஒரு மாடு மேய்த்த இளைஞனை அழைத்து வந்து ‘பரியேறும் பெருமாள்’ படத்தை இயக்க வைத்தார்.

அதேபோல் இரும்புக் கடையில் வேலை பார்த்துக்கொண்டிருந்த ஒரு சாமானியத் தொழிலாளியை அழைத்து வந்து, இப்போது ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ படத்தை இயக்க வைத்திருக்கிறார். அதியனின் அரசியல் எனக்கு மிகவும் பிடிக்கும். இப்படியான ஒருவர் படமெடுத்தால் எப்படி இருக்கும் என்ற ஆவல் என்னிடம் அதிகரித்தது. இப்போது படத்தைப் பார்த்தபோது, இந்தப் படத்துக்குக் கிடைக்கப்போகும் இடத்தை நினைத்து கர்வம் கொள்ள முடிகிறது” என்றார்.

பழைய தலைப்பு, புதிய கதை

உலகின் 199 நாடுகளின் புள்ளிவிவரங்களுடன் ஒப்பிடும்போது, சாலை விபத்துகளில் இறப்போரின் எண்ணிக்கையில் இந்தியா முதலிடத்தில் இருப்பதை அறிந்து கொதித்துப்போனார் இந்தப் பேராசிரியர். இந்தியா முழுவதும் பயணித்து ‘சாலைப் பாதுகாப்பு நிர்வாகம்’ என்ற தலைப்பில் ஆய்வுசெய்து முனைவர் பட்டமும் பெற்றார். தனது ஆய்வின் பலன்கள் தன்னுடன் மட்டும் தேங்கிவிடக் கூடாது என்று நினைத்த பேராசிரியரான மாறன், அந்த ஆய்வை ஜனரஞ்சகமான திரைப்படமாக எழுதி, இயக்கி, தயாரித்து நடித்திருக்கிறார்.

“புகழ்பெற்ற எம்.ஜி.ஆர், சிவாஜி படங்களின் தலைப்புகளை முறையாக அனுமதிபெற்று மீண்டும் பயன்படுத்துகிறவர்கள் அந்தத் தலைப்புகளுக்கான நியாயத்தைச் செய்ததே இல்லை. எனக்குத் தெரிந்து செல்வராகவனின் ‘ஆயிரத்தில் ஒருவன்’ அதைச் செய்தது.

அதன்பிறகு சிவாஜியின் வெற்றிப் படங்களில் ஒன்றாகிய ‘பச்சை விளக்கு’ படத்தின் தலைப்பைப் பெற்று எனது படத்துக்குச் சூட்டியிருக்கிறேன். தலைப்புக்கு நூறு சதவீதம் நியாயம் செய்யும் படமாக இதை உருவாக்கியிருக்கிறேன். சாலை விதிகளை மீறிய பயணம், வாழ்க்கை நியதிகளை மீறிய காதல் இரண்டில் எதுவொன்றும் இலக்கை எட்டாது என்பதுதான் படத்தின் கதைக் கரு.

அதை நகைச்சுவையின் துணையுடன் பொழுதுபோக்குப் படமாக உருவாக்கியிருக்றோம். எளிதில் விளம்பர வெளிச்சம் கிடைக்கும் என்பதற்காக இந்தத் தலைப்பைப் பெறவில்லை. சாலை விபத்துகளாலும் காதலின் பெயராலும் உயிர்களை நாம் தொலைக்கக் கூடாது என்பதைச் சொல்ல இதைவிடச் சிறந்த தலைப்பு அமையாது” என்கிறார் மாறன்.

SCROLL FOR NEXT