இந்து டாக்கீஸ்

கலை வாழ்வில் கமல் 60: என்றும் கமலிஸம்

செய்திப்பிரிவு

‘தூங்காவனம்’ படம் திரைக்கு வந்து தோராயமாய் மூன்று வருடங்களாகி இருக்கும். ‘விஸ்வரூபம் 2’, முதல் பாகத்தின் தொடர்ச்சி என்பதாலும் நீண்டகாலம் கிடப்பில் இருந்ததாலும் அதை நான் கணக்கில் கொள்ளவில்லை. சுமார் மூன்று வருடங்களாக கமல்ஹாசன் எனும் மாபெரும் திரை ஆளுமையை ரொம்பவே மிஸ் பண்ணிக்கொண்டிருக்கிறோம்.

அரசியலில் இறங்கி மூன்று வருடங்களைத் தொலைத்துவிட்டார் கமல். அவரோடு சேர்ந்து கூடவே நாங்களும் வெரைட்டி சினிமாவைத் தொலைத்தோம். அவர் இல்லாத தமிழ் சினிமா என்னவோ போலிருந்தது. ஏனெனில், எங்களுக்கு கமல் வேறு தமிழ் சினிமா வேறு இல்லை.

அவர் தமிழ் சினிமாவுக்குச் செய்த முன்னெடுப்புகளிலும் புதுமைகளிலும் நூற்றில் ஒரு பங்கைக்கூடத் தொடாதவர்கள், அவர் இல்லாத நேரத்தில் தமிழ் சினிமாவுக்கு ஏகபோகமாகச் சொந்தம் கொண்டாடியதை எங்களால் பொறுத்துக்கொள்ளவே முடியவில்லை.

கமல் அரசியலுக்குள் நுழைந்ததில் எங்களுக்கு எப்போதும் விருப்பமில்லை. அவர் தொடர்ந்து நடித்துக்கொண்டே இருக்க வேண்டும். செயற்கையாக விக் வைத்துக்கொண்டு மாறி மாறி மாஸ் ஹீரோவாக மட்டுமே அவர் நடித்துக் கொண்டிருக்க வேண்டும் என்பதே இல்லை.

‘குணா’ படத்தின் இறுதியில் அபிராமியைச் சுமந்துகொண்டு மலையிலிருந்து விழும் முன்பு மூன்று முறை மூச்சை இழுத்துப் பிடிப்பாரே.. அதைப் போல். ‘தேவர்மக’னில் மாயனின் வீட்டுக்குள் ஆக்ரோஷமாகப் புகும் அந்த நேரத்திலும் அங்கிருக்கும் நாயைக் கண்டு நாலடி பின்வாங்குவாரே அதைப் போல.. ‘குருதிப்புன’லில் வில்லனின் துப்பாக்கி முனையில் நின்றுகொண்டிருக்கும் போலீஸ்காரரிடம், 'துப்பாக்கிய முதலில் மெதுவா வெளிய எடுத்து.. மெதுவா.. ஆ..வெளிய எடுத்து..' என்று இரண்டு மாடுலேஷன்களில் மாற்றிச் சொல்வாரே அதைப் போல...

அப்படி ஹீரோயிஸம் இல்லாத இயல்பான, நுட்பமான நடிப்பை வெளிப்படுத்த அவரால்தான் முடியும். அதுபோன்ற வேடங்களில் கமல் எவ்வளவு வயதானாலும் சரி, நடித்துக்கொண்டே இருக்க வேண்டும்.

சினிமாவில் அவர் பங்களிப்பு இருந்துகொண்டே இருக்க வேண்டும் என்பது மட்டுமே ஆசையாக இருக்கிறது. இந்த ஓட்டு அரசியல், பிக்பாஸ் போன்ற அபத்தங்களிலிருந்து மீண்டு பழைய பன்னீர்செல்வமாக அவர் வரவேண்டும்.

கமல்ஹாசனின் சரித்திரத்தை இப்போதுள்ள நானோ நீங்களோ யாரும் முழுவதுமாக எழுதிவிட முடியாது. ஏதோ அங்கும் இங்குமாகக் கொஞ்சமாய்க் குறிப்பெடுக்கலாம். அந்த அளவுக்கு நீண்ட நெடிய சகாப்தம் அது. சினிமாவில் 2020-ல் நீங்கள் புதுமையென்று எதைத் தூக்கிக்கொண்டு வந்தாலும் அதற்கு 80,90-களிலேயே வெள்ளோட்டம் பார்த்திருப்பார் அவர். இனிவரும் ஹீரோக்கள் என்ன கெட்-அப்பில் நடித்தாலும் அது கமல் போட்ட கெட்-அப்பில் ஒன்றாகத்தான் இருக்கும்.

இன்று வரையிலும் மண்சோறு சாப்பிடாத, நாக்கில் அலகு குத்திக்கொள்ளாத ரசிகர்களைப் பெற்றிருக்கிறார் அவர். உண்மையான கமல் ரசிகன் எவனும் மூடநம்பிக்கையில் இறங்குவதற்கு முன் ஒன்றுக்கு மூன்றுக்கு முறை யோசிப்பான். அதுவே கமலின் வெற்றி.

கமல் எனும் பல்கலைக்கழகத்தில் பயின்றவர்களிடம் பக்குவத்துக்குப் பஞ்சமே இருப்பதில்லை. கமலே சுமாரான படத்தில் நடித்தாலும் கூட அதை ஹானஸ்டாக விமர்சிக்கும் வகையில் தனது அபிமானிகளைத் தயார்ப்படுத்தி இருக்கிறார். வாழ்க்கையை ஏதோ வந்தோம் வாழ்ந்தோம் என்று வாழுகிறவர்களுக்கு அதை எப்படி ரசனையோடு அணுகுவது என்று சினிமாவிலும் சரி, சொந்த வாழ்க்கையிலும் சரி, இன்னமும் தொடர்ந்து வாழ்ந்துகாட்டிக் கொண்டேதான் இருக்கிறார் அவர். கமலின் படங்கள் வேண்டுமானாலும் தோற்கலாம். கமலிஸம் என்றும் தோற்பதே இல்லை.

கட்டுரையாளர், பெங்களூருவில் வசிக்கும் மென்பொருள் பொறியாளர், கமல்ஹாசன் ரசிகர்.
தொடர்புக்கு: sivakumar.v2@gmail.com

SCROLL FOR NEXT