இந்து டாக்கீஸ்

பாலிவுட் வாசம்: ஆமிர்கானின் அழுகை!

செய்திப்பிரிவு

‘நிலைமை மாறிவிட்டது’

இர்ஃபான் கான் நடிக்கும் ‘தல்வார்’ படத்தின் ட்ரைலர் பாலிவுட்டைத் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது. வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்க விரும்பும் நடிகர்களுக்கு இப்போது நிறைய வாய்ப்புகள் இருப்பதை இந்த ட்ரைலர் உறுதிசெய்கிறது.

“1950, 60, 70களில் வெளிவந்த படங்களின் கதைகள் நம் மனதில்அப்படியே பதிந்திருக்கும். அது ஒரு காலம். பாலிவுட்டின் மோசமான காலமாக 90களைச் சொல்லலாம். அப்போது, மக்கள் ஒரே விஷயத்தைப் பார்க்க விரும்பினார்கள். இப்போது அந்த நிலைமை மாறியிருக்கிறது. நடிகர்கள் புதிய விஷயங்களை ரசித்துச் செய்ய பாலிவுட் இப்போது அனுமதிக்கிறது” என்று சொல்கிறார் இர்ஃபான் கான்.

‘நேர்மைக்கு இடமில்லை’

‘மசான்’ படத்தில் ரிச்சா சட்டாவின் நடிப்புக்கு இணையாக ஸ்வேதா திரிபாதியின் நடிப்பும் கவனத்தைப்பெற்றது. அதன்பிறகு, ஸ்வேதாவுக்கு நிறையப் படவாய்ப்புகளும் கிடைத்திருக்கின்றன. ஆனால், ஸ்வேதா தனக்கு முப்பது வயதாகிறது என்று உண்மையைச் சொன்னவுடன் அந்தப் படவாய்ப்புகள் கைநழுவிப் போயிருக்கின்றன. “நான் 1985-ல் பிறந்தேன். இதைச் சொல்வதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. ஆனால், இப்படி உண்மையாக நடந்துகொள்வதற்கு ஒரு விலையைக் கொடுக்க வேண்டியிருக்கிறது. என் வயதைக் காரணம்காட்டி சில படங்களிலிருந்து என்னை விலக்கிவிட்டார்கள்” என்கிறார் ஸ்வேதா.

“இயக்குநர்கள் என் நடிப்பைப் பார்த்து இந்தக் கதாபாத்திரத்துக்கு நீங்கள் பொருத்தமாக இருப்பீர்கள் என்று சொல்வார்கள். பிறகு, என் வயதைக் கேட்பார்கள். நான் என் வயதைச் சொல்வேன். அதற்குப் பிறகு நான் அந்தப் படத்தில் நடிக்கவில்லை என்ற செய்தி வரும்” என்று தன் அனுபவத்தைச் சொல்கிறார் ஸ்வேதா.

‘மசான்’ படத்துக்குப் பிறகு வித்தியாசமான கதாபாத்திரங்களுக்காகக் காத்திருக்கிறார் ஸ்வேதா. தற்போது, நவாஸுத்தீன் சித்திக்கியுடன் ‘ஹரம்கோர்’ படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார் ஸ்வேதா.

வெங்காயங்களே அழும்

சமீபத்தில், ஆமிர் கானின் அழுகையை டிவிட்டரில் கிண்டலடித்து தீர்த்துவிட்டார்கள். அவர் கங்கனா-இம்ரான் கானின் ‘கட்டி பட்டி’ படத்தைப் பார்த்து கண்ணீர் விட்டதுதான் அதற்குக் காரணம். ஏற்கனவே, சல்மான் கானின் ‘பஜ்ரங்கி பாய்ஜான்’ படத்தைப் பார்த்து அழுத ஆமிர், இப்போது தன் மருமகன் இம்ரான் கானின் படத்தைப் பார்த்தும் அழுதிருக்கிறார்.

இப்படி எல்லாப் படங்களையும் பார்த்து அழுவதால் ‘டிவிட்டர்’ சிட்டிசன்கள் ஆமிர் கானை பயங்கரமாகக் கலாய்த்துவிட்டார்கள். உதாரணமாக சில டிவிட்ஸ் - “டியர் காஸை விரைவில் ஆமிர் கான் காஸ் என்று அழைப்பார்கள்”, “அவன் குழந்தையாக இருக்கும்போது டாம் அண்ட் ஜெர்ரியைப் பார்த்து அழுதிருக்கிறான் - ஆமிரின் அம்மா”, “ஆமிர் கான் வெட்டினால் வெங்காயங்களே அழத் தொடங்கிவிடும்”.

SCROLL FOR NEXT