இந்து டாக்கீஸ்

தரமணி 08: இரு நல்லவர்கள்!

செய்திப்பிரிவு

ஆர்.சி.ஜெயந்தன்

வெவ்வேறு குடும்பச் சூழ்நிலை, வெவ்வேறு உணர்ச்சி நிலைகளில் வாழ்ந்தாலும் நட்பில் மட்டும் சமரசம் செய்துகொள்ள விரும்பாத ஐந்து நண்பர்கள். கல்லூரிப் படிப்பை முடித்துவிட்ட அவர்களது வாழ்கையில் தென்றலாய் நுழையும் ஒரு பெண் திருப்பங்களை உருவாக்குகிறாள்.

எங்கிருந்தோ வந்து, எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல், தங்களிடம் மாற்றங்களைக் கொண்டுவந்தவள் மீது நேசம் வைக்கிறார்கள். காதலுக்கும் நட்புக்கு இடையில் கண்ணியத்தின் எல்லையைத் துளியளவும் கடந்துவிடாமல் ஊடாடும் இவர்களது உறவைப் புனிதப்படுத்திச் செல்கிறது அவளது மரணம்.

1981-ல் வெளியான ‘பாலைவனச் சோலை’ படத்தின் கதை இதுதான். தலைப்பில் மட்டுமல்ல; இன்னும் பல அம்சங்களில் 70-களின் புதிய அலை சினிமாவின் தொடர்ச்சி அறுந்துவிடாமல் அதை 80-களுக்கு முன்னெடுத்துச் சென்ற படம். தெளிவான திரைக்கதை, இருப்பையும் இயல்பையும் மீறாத கதாபாத்திர வடிவமைப்பு, அவற்றுக்குப் பொருத்தமான நட்சத்திரத் தேர்வு, அவற்றின் வாழ்விடத்தை நம்பகமாகச் சித்தரித்த ஒளிப்பதிவு, கதாபாத்திரங்களின் உணர்ச்சியை மெட்டிலும் வரிகளிலும் இழையவிட்ட இசை என ரசிகர்களை புதியதோர் அனுபவத்துக்கு அழைத்தது. சினிமாவை வெறும் பொழுதுபோக்கு என்று மட்டுமே எண்ணிக்கொண்டிருந்த பார்வையாளர்களுக்கு அதையே மரியாதைக்குரிய திரை அனுபவமாக மாற்றிக் கொடுக்க முடியும் என்று காட்டியது.

கனவுப் பாடல் இல்லை

“இந்த டயரியிலே என்னோட கல்யாண நாள் இருக்கு. அதனாலே உங்களோட கல்யாண நாளும் நிச்சயம் இருக்கும்.” என்று கீதாவைப் (சுகாசினி) பார்த்து சேகர் (சந்திரசேகர்) கூறும் இடம், காதலை இத்தனை தூய்மையாகக்கூட வெளிப்படுத்த முடியுமா என்று எண்ண வைத்தது. காதலையும் நட்பையும் அழுத்தும் மென்சோகத்துடன் ‘ரொமாண்டிசைஸ்’ செய்த இந்தப் படம், வேலையில்லாத் திண்டாட்டம், வரதட்சிணை, நடுத்தரக் குடும்பங்களின் பாடு உள்ளிட்ட சமகால சமூகப் பிரச்சினைகளைத் தொட்டுக்காட்டிச் சென்ற வகையிலும் இயக்குநர்களின் படமாக விளங்கியது. ‘படிச்சிட்டு என்னைப் போல வேலை கிடைக்காம அலையற இளைஞர்களின் கண்ணீர்தான் இந்தியாவிலே ஓடற வற்றாத ஜீவநதி’ என்ற வசனத்தில் மிகையுணர்ச்சி கரைபுரண்டாலும், 80-களின் வேலையின்மையை காட்டியது அந்த ஒற்றை வசனம்.

ஒரு பெண்ணைச் சுற்றிவரும் ஆண்களைக் கொண்ட கதையில் கனவுப் பாடலும் கட்டில் காட்சியும் ஒரு நோய்க்கூறாக ஒட்டிக்கொண்டிருந்த காலகட்டத்தில், அவை இல்லாமல், காதலையும் நட்பையும் கண்ணியமாகச் சித்தரிக்க முடியும் என்று காட்டிய அந்தப் படத்தை ராபர்ட் – ராஜசேகரன் என்ற இரண்டு இயக்குநர்கள் இணைந்து இயக்கியிருந்தார்கள். ‘இரு நல்லவர்கள்’ என்று திரையுலகில் பலராலும் புகழப்படும் இவர்கள் தரமணி திரைப்படக் கல்லூரியில் ஒளிப்பதிவு பயின்றவர்கள். சென்னையைப் பூர்விகமாகக் கொண்ட இவர்களை இணைத்தது திரைப்படக் கல்லூரியும் சென்னை பச்சையப்பன் கல்லூரியும்.

ஓர் அசலான முயற்சி

‘பாலைவனச் சோலை’க்குப் பின்னர் ஒரு பகலில் தொடங்கி முடியும் ‘கல்யாண காலம்’ என்ற பெண் மையப் படத்தைச் சோதனை முயற்சியாக, அதேநேரம் ஒரு அசலான முயற்சியாக இயக்கினார்கள். கடமையே உருவான பெற்றோர், 80 வயதைத் தாண்டிவிட்ட பாசத்தின் மறு உருவமாக ஒரு தாத்தா, இரண்டு அண்ணன்கள், பள்ளிப் பருவத்தில் இருக்கும் குழந்தைமை மாறாத் தங்கை என நாயகி சீதாவின் குடும்பம் 80-களின் நடுத்தரக் குடும்பம் ஒன்றைப் பிரதிபலிப்பது.

கல்யாணச் சந்தையில் சீதாவுக்கான மாப்பிள்ளைக்குப் பெரும் விலை கொடுக்க வேண்டிய நெருக்கடியில் அந்தக் குடும்பம் தனது அமைதியை இழக்கிறது. பொங்கும் உணர்வுகளால் வார்த்தைகள் தடித்துவிடும் அந்த வீட்டில், விலைமதிப்பற்ற ஓர் உயிரின் அந்திமத்தில் சீதாவின் திருமணம் நின்று, அவளது வாழ்வு புதிய வைகறையில் புலர்கிறது. “மகளுக்குப் பிடித்த வண்ணத்தில் புடவை வாங்க ஒன்றுக்கு நான்கு கடைகளில் ஏறி இறங்க விரும்பும் அந்த வீட்டின் தந்தைக்கு மகளுக்குப் பிடித்த மாப்பிள்ளையைத் தேடத் தவறும் தலைமுறையின் முரணைப் பளிச்சென்று சித்தரித்தது இந்தப் படம்.

“டௌரியாம் டௌரி.. பையன வைச்சு பிராத்தல் நடத்துறாங்க” என்ற வசனம் வரதட்சிணை வாங்க நினைப்பவர்களை பிடரியில் அடித்தது. “நீங்க நினைக்கிற மாதிரி என்னைத் தேடி ஒரு ராஜகுமாரன் வரல... எங்க அப்பா விலைக்கு வாங்கப்போற ஒருத்தர்தான் வந்தார். நீங்க நினைக்கிற மாதிரி நான் ராஜகுமாரி இல்ல... ஒரு அடிமை” என்று சீதா தனது தாத்தாவிடம் பேசும் வசனங்களில் நாடக உணர்ச்சி வெளிப்பட்டாலும் பிரச்சினையின் தீவிரத்தைப் பிறளாமல் பேசியது.

கவ்வும் காவியச் சோகம்

ராபர்ட் – ராஜசேகர் இணைந்து இயக்கியது ஏழு வெகுஜனப் படங்கள்தாம். ஆனால் அவற்றின் முதன்மைக் கதாபாத்திரங்களில் ஒன்றோ சிலவோ வாழ்வின் துயர்மிகு தருணங்களில் உழல வைத்தனர். அவை, கதையின் இறுதியில் மரணத்தில் தீர்வைப் பெறுவதாகவும் ரசிகர்கள் மனதைக் கவ்விப் பிடிக்கும் அத்தகைய காவியச் சோகத்தை உறுத்தல் இன்றி அவர்கள் ஏற்றுக்கொள்ளும் தர்க்கத்துடனும் சித்தரித்தார்கள்.

இவர்களுடைய திரைக்கதைகளின் ஒரு கூறாகவே இதைப் பார்க்கலாம். ‘சின்னப்பூவே மெல்லப்பேசு’ ‘மனசுக்குள் மத்தாப்பு’, ‘பறவைகள் பலவிதம்’ என அவர்களுடைய படங்களில் இந்தக் காவியச் சோகத் தன்மையைக் கதாபாத்திரங்களுடன் ஒன்றியும் அவற்றைப் பின்தொடர்ந்தும் நம்மால் காண முடியும்.

’மனசுக்குள் மத்தாப்பு’ படத்தில், காதலியின் இறப்பால் மனநலம் பாதிக்கப்பட்டு மனநல மருத்துவமனையில் சிசிச்சைபெற்றுவரும் நாயகன் சேகர் (பிரபு), இசைக்காக ஏங்குகிற காட்சியில் பார்வையாளர்கள் உடைந்தார்கள். அவர் டாக்டர் கீதாவிடம் சிகிச்சை பெறும் காட்சிகள் சினிமாவுக்காக எழுதப்பட்ட கற்பனைதான்.

என்றபோதும் எதுவொன்றும் ஒப்பேற்றலாக இல்லாமல் வசனம் வழியாகவும் பாடல் வழியாகவும் நம்பகத்தன்மையின் மீது கட்டப்பட்ட காட்சியமைப்புகளாகச் சித்தரித்துக் காட்டினார்கள். ‘பறவைகள் பலவிதம்’ கல்லூரி வாழ்வின் கடைசி நாளுக்குப் பின், மீண்டும் ஒரு குறிப்பிட்ட நாளில் சந்திக்க விரும்பிய எட்டு மாணவர்களின் கதையாக விரிந்தது.

கல்லூரியின் கடைசி நாளில் நடத்தப்படும் பிரிவு உபாச்சார விழாவில் மாணவர்கள் பாடும் நினைவுகளின் தேசிய கீதமாக ஒளித்த பாடல் சிவாஜி – சாவித்திரி நடித்து 1963-ல் வெளியான ‘ரத்தத் திலகம்’ படத்தில் இடம்பெற்ற ‘பசுமை நிறைந்த நினைவுகளே பாடித் திரிந்த பறவைகளே...’ பாடல். அதற்கு மாற்றாக மற்றொரு பிரிவுரைப் பாடல் தமிழ் சினிமாவில் இடம்பெறாத நிலையில், அதை ராபர்ட் – ராஜசேகரன் கூட்டணி ‘பறவைகள் பலவிதம்’ படத்தில், எஸ்.ஏ.ராஜ்குமார் இசையில் சாத்தியப்படுத்தியது. அந்தப் பாடல் ‘மனம் பாடிடத் துடிக்கிறதே.. வார்த்தையில்லை’.

திரை உலகமே இளையராஜாவின் பின்னால் சென்று கொண்டிருந்தபோது சங்கர் கணேஷுக்கும் எஸ்.ஏ.ராஜ்குமாருக்கும் வித்யா சாகருக்கும் ஏன் இவர்கள் வாய்ப்பளித்தார்கள்? தங்களுடைய படங்களில் இசையைக் கதைசொல்லப் பயன்படுத்தியதிலும் தனித்து நிற்கும் இவர்கள், எதிலும் ஒரு மாற்று இருக்க வேண்டும் என்று முயன்று பார்த்ததன் பின்னணியில் இவர்கள் பயின்ற தரமணி திரைப்படக் கல்லூரிக்குப் பங்கிருக்கிறதா…?

(அடுத்த வாரமும் ராபர்ட் – ராஜசேகரனின் தடங்களைப் பின் தொடர்வோம்.)
தொடர்புக்கு: jesudoss.c@hindutamil.co.in
படங்கள் உதவி: ஞானம்

SCROLL FOR NEXT