வரிசையாக மூன்று படங்கள் ஓடிவிட்டால் போதும். ஐந்து லட்சம் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த கதாநாயகன் 5 கோடி சம்பளம் கேட்கும் காலம் இது. 1950களில் நிலைமையே வேறு. தியாஜராஜ பாகவதர், டி.ஆர்.மகாலிங்கம் என்று பெரிய நடிகர்கள் கோலோச்சிய கால கட்டத்தில், இவர் மாதம் 300 ரூபாய் சம்பளம் பெற்ற முன்னணி நாயகன். அதுவும் ஒரு ஆண்டோ இரு ஆண்டோ அல்ல; 1941-ல் தொடங்கி 1954 வரை சுமார் 13 ஆண்டுகள்.
அவர் ஜெமினி நிறுவனத்தின் கம்பெனி நடிகராக இருந்து பல புகழ்பெற்ற படங்களில் நடித்த ‘பத்மஸ்ரீ’ எம்.கே. ராதா. தமிழ் சினிமாவின் முதல் பிரமாண்டப் படமாகிய ‘சந்திரலேகா’விலும், ரசிகர்களை வாய்பிளக்க வைத்த இரட்டை வேடப் படமாகிய ‘அபூர்வ சகோதரர்கள்’ படத்திலும் நடித்தார். திருநெல்வேலி, மதுரை, புதுக்கோட்டை, தஞ்சை, சேலம் என தமிழகத்தின் பிற பகுதிகளிலிருந்து சினிமாவுக்குள் வந்து பெயர் பெற்றவர்களே அதிகம். ஆனால் தன் அழகிய தோற்றத்துக்காக ‘சுந்தர புருஷன்’ என்று அழைக்கப்பட்ட எம்.கே. ராதா சென்னையில் பிறந்து வளர்ந்து சினிமாவில் நுழைந்து தலைநிமிர்ந்து நின்றவர். அவர் பெயரின் முன்னெழுத்தில் உள்ள எம், மெட்ராஸைக் குறிக்கிறது.
கலைக் குடும்பம்
புகழ்பெற்ற நாடகாசிரியராக இருந்தவர் எம். கந்தசாமி முதலியார். அவரது மகன்தான் எம்.கே. ராதா. 1909-ம் ஆண்டு பிறந்த ராதாவுக்கு அப்பாவின் நாடகக் கம்பெனி பெரும் தாக்கத்தை உருவாக்கியது. வீட்டில் நடக்கும் நாடக ஒத்திகைகள் அவருக்குள் மனப்பாடம் ஆகின. இன்றைய வடசென்னையின் ஒரு பகுதியாகிவிட்ட தங்கசாலையில் இருந்த ‘ஹிந்து பயலாஜிக்கல் மேல்நிலைப் பள்ளியில் படித்துவந்தார். ஆனால் படிப்பில் ஆர்வம் செல்லாமல் நாடகத்தில் மேலோங்கிய மகனின் ஈடுபாட்டைக் கண்டு 9 வயதில் லோகிதாசன் வேடம் கொடுத்தார் அப்பா. வளர வளர வயதுக்கேற்ற வேடங்களில் நடிக்க ஆரம்பித்தார் ராதா. கந்தசாமி முதலியாரின் நாடகக் கம்பெனியில் பிரகாசித்த பல நடிகர்கள் பின்னாளில் சினிமா உலகில் நுழைந்து புகழ்பெற்றார்கள். எனவே எம்.கே. ராதாவும் திரையில் நுழைய விரும்பியதில் ஆச்சரியமில்லை.
பரபரப்பான அறிமுகம்
மகன் சினிமாவில் நடிக்க விரும்புவதை அறிந்ததும் சினிமாவுக்கு ஏற்ற கதையைத் தேடினார் கந்தசாமி முதலியார். அப்போது கே.பி. கேசவன் நடித்து வந்த கிருஷ்ணசாமிப் பாவலரின் ‘பதி பக்தி’ என்ற நாடகம் புகழ்பெற்று விளங்கியது. அந்த நாடகத்தைப் படமாக்கும் உரிமையைப் பெற்றுப் படவேலைகளைத் தொடங்கினார். ஆனால் திடீரென்று உரிமையை ரத்து செய்தார் கே.பி. கேசவன். தன் நடிப்பில் அந்த நாடகத்தை சினிமாவாகத் தயாரிக்க கேசவன் விரும்பியதுதான் காரணம்.
கந்தசாமி அசரவில்லை. பத்திரிகையாளரும் எழுத்தாளருமான எஸ்.எஸ்.வாசன், தனது ‘ஆனந்த விகடன்’ பத்திரிகையில் எழுதிவந்த ‘சதிலீலாவதி’ என்ற தொடர்கதை கவர்ந்தது. கந்தசாமி அதைப் படமாக்க விரும்பினார். கோயம்புத்தூர் மருதாசமல் செட்டியார் தயாரிக்க முன்வந்தார். கந்தசாமி வசனம் எழுதினார். பின்னாளில் ஜெமினி பிக்ஸர்ஸ் என்ற நிறுவனத்தைத் தொடங்கி சாதனைகள் படைத்த வாசனுக்கு இதுவே முதல் படம். எம்.கே.ராதா முதல் படத்திலேயே கதாநாயகனாக நடிக்க, 19 வயது எம்.ஜி.ஆர். ‘ரங்கையா நாயுடு’ என்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் வேடத்தில் அறிமுகமானார். என்.எஸ்.கிருஷ்ணன், டி.எஸ்.பாலையா ஆகியோரும் இந்தப் படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார்கள். இயக்குநர் எல்லீஸ். ஆர். டங்கனுக்கும் அதிகாரபூர்வமான முதல் படமும் இதுவே.
படம் ரிலீஸுக்குத் தயாரானபோது கேசவன் தங்களது ‘பதி பக்தி’ கதையை திருடி ‘சதி லீலாவதி’ படத்தை எடுத்துவிட்டதாக வழக்குத் தொடுத்து படத்தின் வெளியீட்டைத் தடுத்தார். ஆனால் கதாசிரியர் வாசன் நீதிமன்றத்தில் “சதி லீலாவதி படத்தின் கதை ஹென்றி வுட் என்ற ஆங்கிலப் பெண் எழுத்தாளர் எழுதிய ‘டேன்ஸ்பரி அவுஸ்’ என்ற (Henry Wood's Danesbury House) நாவலின் தாக்கத்தில் எழுதப்பட்டது” என்று தெளிவுபடுத்தினார். பிரச்சினை தீர்ந்தது. தமிழ் சினிமாவில் கதையால் ஏற்பட்ட முதல் சர்ச்சையும் இதுவே.
இத்தனை பரபரப்புக்கு நடுவே 28.3.1936 ல் வெளியான ‘சதி லீலாவதி வெற்றி பெற்றது. படத்தின் நாயகி எம்.எஸ். ஞானாம்பாளையே காதலித்துத் திருமணம் செய்துகொண்டார் எம்.கே. ராதா.
பிரம்மாண்ட நாயகன்
சதி லீலாவதியின் வெற்றிக்குப் பிறகு அடுத்து வந்த இரு வருடங்களில் ‘மாயா மச்சீந்திரா’, ‘சந்திரமோகனா’ ‘துளசிதாஸ்’, ’ சதிமுரளி’ ஆகிய படங்களில் நடித்தார் . எல்லாம் சுமாரான வெற்றியைப் பெற்றன. அப்போது ‘இலங்கைக் குயில்’ என்று அழைக்கப்பட்ட சிங்களத் தாரகை தவமணிதேவியுடன் இணைந்து ‘ வனமோகினி’ என்ற படத்தில் நடித்தார். ஹாலிவுட்டில் அப்போது பிரபலமாக இருந்த டார்ஜான் வகைப் படமாக முழுக்க முழுக்கக் காட்டிலேயே படமாக்கப்பட்ட அந்தப் படம் மாபெரும் வெற்றிபெற்றது.
இந்தச் சமயத்தில் ஜெமினி ஸ்டூடியோவைத் தொடங்கிய வாசன் தனது கம்பெனியின் நிரந்தர நடிகராக எம்.கே. ராதாவை ஒப்பந்தம் செய்துகொண்டார். தமிழ் சினிமாவின் முதல் பிரமாண்டத் தயாரிப்பாக ஜெமினி தயாரித்த ‘சந்திரலேகா’ படத்தின் நாயகனாக ராதா நடித்தார். ‘சந்திரலேகா’ வரலாறு காணாத வெற்றிபெற்றது. ராதாவுக்குப் பெரும்புகழையும் கொண்டுவந்து சேர்த்தது. ராதாவும், வில்லனாக நடித்த ரஞ்சனும் மோதும் கத்திச் சண்டைக் காட்சியைப் பார்த்து மிரண்ட ரசிகர்கள் திரும்பத் திரும்ப திரையரங்கு நோக்கிக் குவிந்தனர். தமிழ் சினிமாவின் முதல் சாகச நாயகன் (ஆக்ஷன் ஹீரோ) என்றும் எம்.கே. ராதாவைப் பேச வைத்தது இந்தப் படம்.
‘சந்திரலேகா’வை இந்தியிலும் தயாரித்த வாசன் அதிலும் ராதா - டி.ஆர். ராஜகுமாரி ஜோடியை நடிக்கவைத்து பாலிவுட்டிலும் பெரிய வெற்றியை ஈட்டினார். அதன் பின்னர் மீண்டும் ஒரு பிரமாண்டமாக ‘அபூர்வ சகோதரர்கள்’ படத்தைக் குறுகிய காலத்தில் எடுத்து முடித்தார் வாசன். ராதா, விஜயன் - விக்ரமன் என்ற இரட்டையர்கள் வேடம் ஏற்றார். பானுமதி கதாநாயகியாக நடித்த இந்தப் படத்தில் ஆர். நாகேந்திர ராவ் என்ற கன்னட நடிகர் வில்லனாக அறிமுகமானார்.
1940-ல் பி.யு. சின்னப்பா நடிப்பில் வெளியான ‘உத்தமபுத்திரன்’ திரைப்படம் ‘ மேன் இன் தி அயன் மாஸ்க்’ என்ற ஆங்கிலப் படத்தைத் தழுவி தமிழ் சினிமாவின் முதல் இரட்டை வேடப் படமாக வெளிவந்தது. ஆனால் ஆங்கிலப் படத்தில் பயன்படுத்தப்பட்ட கேமரா தந்திரங்களைத் தமிழில் துல்லியமாகக் கையாள முடியவில்லை. ஆனால் ‘அபூர்வ சகோதரர்கள்’ அந்தக் குறையைப் போக்கியது. ரசிகர்கள் இரட்டை வேடக் காட்சிகளை கண்டு வியந்தனர். விஜயனாகவும் விக்ரமனாகவும் வேறுபாடு காட்டிய ராதாவின் நடிப்பு உயர் தரமாக இருந்தது.
சமூக நடிப்பிலும் சாதனை
சந்திரலேகாவுக்கு இணையாக வசூலில் சாதனை படைத்த அபூர்வ சகோதரர்கள் படத்துக்குப் பிறகு பல சமூகக் கதைகளிலும் நடித்து சாதனை படைத்தார் ராதா. கம்பீரமான ராஜா வேஷங்களில் அசத்திய இவர் ‘சம்சாரம்’ என்ற படத்தில் சாமானிய மனிதனாக, நாடக பாணி நடிப்பின் தாக்கம் இல்லாமால் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களைக் கவர்ந்தார்.
ராஜேந்திர ராவ் இயக்கிய ‘அன்பே தெய்வம்’ என்ற படத்தில் நாயகனாக நடித்த ராதாவுக்கு இந்நாள் முதல்வர் ஜெயலலிதாவின் தயாரான சந்தியா ஜோடியாக நடித்தார். 50 படங்களில் நடித்திருக்கும் இவர் மீது அளப்பரிய பாசமும் அன்பும் வைத்திருந்தார் எம்.ஜி.ஆர். ஒருமுறை விழா ஒன்றில் எம்.கே. ராதாவின் காலில் விழுந்து வணங்கி ஆசிபெற்றார். மத்திய அஞ்சல் துறை ராதாவின் உருவப் படத்தை அஞ்சல் உறையில் வெளியிட்டு கவுரவம் செய்தது.
படங்கள் உதவி: ஞானம்