இந்து டாக்கீஸ்

நகைச்சுவையை எதிர்பார்க்கக் கூடாது!- மிஷ்கின் நேர்காணல்

செய்திப்பிரிவு

கா.இசக்கிமுத்து

இயக்குநர் மிஷ்கின் அலுவலகம் ஒரு தொழிற்சாலையைப் போன்றது. இளைஞர்கள், யுவதிகள், மாற்றுப் பாலினத்தவர் என இருபதுக்கும் அதிகமான உதவி இயக்குநர்களுடன் அது துறுதுறுப்பாகப் பணியாற்றிக்கொண்டிருக்கும். தற்போது, விரைவில் தொடங்க இருக்கும் ‘துப்பறிவாளன் 2’ படத்தின் படப்பிடிப்புக்கான முன் தயாரிப்புப் பணிகளில் அது பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தது.

வெளியே மழை. மிஷ்கின் அறையின் உள்ளே புத்தகங்களுக்கு நடுவில் அமர்ந்துகொண்டு சூடான க்ரீன் டீயில் சில துளிகள் எலுமிச்சைச் சாற்றைக் கலந்தபடி,“சர்க்கரை போடாமல் சாப்பிடுவதுதான் சரி. ஆனால், எத்தனை கசப்பான கேள்வியையும் என்னிடம் கேட்கலாம்” என்று கூறி கோப்பையை நீட்டினார். அவர் படப்பிடிப்பை முழுவதுமாக முடித்துவிட்டு வந்திருக்கும் ‘சைக்கோ’ படம் குறித்து உரையாடியதிலிருந்து...

‘சைக்கோ’ எதன் பாதிப்பிலிருந்து உருவானது?

மனப்பிறழ்வின் உச்சம்தான் ‘சைக்கோ’. அதை நீண்ட வருடமாகவே எழுதணும் என நினைத்தேன். ஒரு சைக்கோ எப்படி உருவாகிறான் என்பது தொடர்பாக நிறைய படித்தேன். பெளத்தத்தில் உலகத்திலேயே முதல் சைக்கோபாத் என அங்குலிமாலா என்பவரைச் சொல்கிறார்கள். காட்டுக்குள் வரும் மனிதர்களைக் கொன்று அவர்களுடைய விரலை மாலையாகப் போட்டுக் கொள்வார். அதனால்தான் அவரது பெயர் அங்குலிமாலா. ஒரு தருணத்தில் புத்தர் காட்டுக்குள் போக முற்படுகிறார். அப்போது “ஊர் மக்கள் உள்ளே செல்லாதீர்கள்.

அங்குலிமாலா உள்ளே இருக்கிறார், கொன்றுவிடுவார்” என பயமுறுத்துகிறார்கள். “நீங்கள் சொல்லாமல் இருந்திருந்தால்கூடப் போயிருக்க மாட்டேன், நான் இறப்புடனே வாழ்கிறவன், இனிமேல் எப்படி உள்ளே போகாமல் இருக்க முடியும்” என்று உள்ளே சென்றுவிடுகிறார். இன்னொரு புறம் “நில்லுங்கள்... நான் வரவில்லை என்றால் எனக்குச் செய்ய வேண்டிய ஈமச்சடங்கைச் செய்துவிடுங்கள்” எனச் சொல்லிவிட்டுச் செல்கிறார்.

2 மணி நேரம் கழித்து புத்தர் வெளியே வருகிறார். அவர் பின்னால் அங்குலிமாலாவும் தலையைக் குனிந்துகொண்டு வருகிறார். பிற்காலத்தில் அவர் கூடவே இறந்தும் போய்விடுகிறார். காட்டுக்குள் என்ன நடந்தது என்பதை புத்தர் - அங்குலிமாலா இருவருமே சொல்லவில்லை. பல ஆண்டுகளாக இப்படி நடந்திருக்கலாம் என்று புனிதக் கண்ணோட்டத்துடன் பலரும் பலவற்றை எழுதினார்கள். இந்தப் படத்தில் எனது கண்ணோட்டமாக ஒன்றை எழுதி இருக்கேன். இங்கே காட்டுக்குப் பதிலாக நகரம்தான் களம்.

உங்களது ‘யுத்தம் செய்’ படத்தில் அறிமுகமாக இருந்த உதயநிதி இப்போது ‘சைக்கோ’வில் நடித்தது எப்படி?



கிருத்திகா உதயநிதி என்னிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்தவர். உதயநிதியை ஹீரோவாக அறிமுகப்படுத்த என்ன பண்ணலாம் என்று யோசித்து எழுதிய கதைதான் ‘யுத்தம் செய்’. பட்ஜெட் உள்ளிட்ட பிரச்சினைகளால் அப்போது அது நடக்கவில்லை. பல ஆண்டுகள் கழித்து இப்போது படம் பண்ணலாமா என்று கிருத்திகா கேட்டார். பண்ணலாம் என்று ‘சைக்கோ’ பண்ணியிருக்கேன். ‘யுத்தம் செய்’ மனப்பிறழ்வு கொண்ட மனிதர்கள் பற்றிய கதை. இதிலும் அப்படித்தான். கண் தெரியாத பெளத்தராக சிறப்பாக நடித்திருக்கிறார்.

அதிதி ராவ், நித்யா மேனன் என்று கூட்டணி புதிதாக இருக்கிறதே?



நடிப்பு, உடல்மொழி என அனைத்தையுமே மிக இலகுவாகக் கடந்துபோய் விடும் ஆச்சரியமான நடிகை அதிதி ராவ். நித்யா மேனன் என்னோட பெரிய நட்பு. ஒரு சகோதரி, தோழி மாதிரி ஆழமான நட்பு. பிரம் மாண்டமான நடிப்புத் திறன் கொண்டவர். இந்த உலகத்தில் நல்லவர்கள்தாம் நல்ல நடிகர்களாக இருக்கிறார்கள். ஒரு கதாபாத்திரத்தை உள்வாங்கி ரொம்பவே எளிதாக நடித்துவிட்டு போய்விடுகிறார். கிளிசரின் இல்லாமல் சில நிமிடங்கள் உட்கார்ந்துவிட்டு, இப்போது போகலாம் என்று சொன்னார். ஆக்‌ஷன் என்றவுடன் அழத் தொடங்கிவிடுவார். ரொம்பவே ஆச்சரியப்பட்டேன். அவரோடு நிறையப் படங்களில் பணியாற்றி இருக்க வேண்டும் ரொம்ப தாமதமாக சந்தித்துவிட்டேன்.

‘துப்பறிவாளன் 2’ படம் எப்படி இருக்கும்?

துப்பறிவாளன் கணியன் பூங்குன்றனுக்கு தமிழகத்தில் வழக்கு எதுவும் கிடைக்கவில்லை. ஒரேயொரு வழக்கு கிடைத்தது, அதை லண்டனில் தான் முடிக்க வேண்டிய சூழல். இந்தியாவில் பண்ணலாம் எனப் பார்த்தேன். முடியவில்லை. சாதாரண வழக்குக்காகப் போனான். ஆனால், நம் தேசத்துக்காகப் போக வேண்டியது மாதிரி ஆகிறது. விஷாலுக்குக் கதை ரொம்பவே பிடிச்சிருக்கு. விஷால், பிரசன்னா, ரகுமான், கெளதமி, நாசர் உள்ளிட்ட பலர் நடிக்கிறாங்க.



மிஷ்கின் இயக்கத்தில் முழுநீள நகைச்சுவை அல்லது காதல் படங்களை எதிர்பார்க்கலாமா?

எதிர்பார்க்கவே முடியாது. வருடத்துக்கு ஒரு படம் பண்றேன். அதுக்கு ரொம்ப உண்மையாக இருக்கணும் என நினைப்பேன். வேடிக்கையாக, நையாண்டி படங்கள் பண்ணுவதில் உடன்பாடில்லை. காதல் என்பது 18- 35 வயது வரை நடக்கும் ஒரு சிறு அனுபவம். அதுவே வாழ்க்கை கிடையாது. அதைப் பெரிதாகப் பேசி, பாடல்கள் சேர்த்து கிளர்ச்சி கொடுக்கலாம். அதெல்லாம் மீறிச் சொல்ல வேண்டிய, ஆழமாகத் தோண்டிய கிணறுகள் நிறைய இருக்கின்றன. காதல் என்பது ஆழமாகப் பலராலும் தோண்டப்பட்ட கிணறு.

SCROLL FOR NEXT