ஆர்.சி.ஜெ
பிறப்பிலேயே பார்வையின்மை, ஆட்டிசம் பாதிப்பு, மனவளர்ச்சியின்மை உள்ளிட்ட தன்மைகளுடன் பிறந்து வளர்ந்த சிறுவர் சிறுமியரின் உலகம் தனித்துவமானது. அவர்களது உலகிலும் அன்பு, பாசம், அழுகை, மகிழ்ச்சி என அத்தனை மனித உணர்ச்சிகளுக்கும் இடமிருக்கிறது.
தீபாவளித் திருநாளில் அழகான ஆடைகள் அணிந்து, பட்டாசு வெடிக்க வேண்டும் என்ற ஆசை, இவர்களைப் போன்ற சிறப்புக் குழந்தைகளுக்கும் உண்டு என்பதைத் தெரிந்துகொண்டார் பிரபல ஃபேஷன் டிசைனரான தர்ஷினி தேவராஜன். சிறப்புக் குழந்தைகள் பலருக்கு ஆடைகளை வடிவமைத்து தைத்தபின், அவற்றை அக்குழந்தைகளுக்கு தீபாவளிப் பரிசாக அணிவித்து சந்தோஷப்படுத்தி அழகு பார்த்திருக்கிறார்.
திருச்சியைச் சேர்ந்த தர்ஷினி தற்போது சென்னையில் வசிக்கிறார். சென்னை, தரமணியில் உள்ள நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபேஷன் டெக்னாலஜியில் பட்டப் படிப்பை முடித்தபின், தொலைக்காட்சி, விளம்பர உலகில் ஆடை வடிவமைப்பாளராகவும் ஸ்டைலிஸ்டாகவும் பணிபுரிந்து வருபவர்.
“மாடல்களுக்கும் தொலைக்காட்சித் திரையில் தோன்றுகிறவர்களுக்கும் பொருத்தமாக, எடுப்பான ஆடைகளை வடிவமைப்பதை ஈடுபாட்டுடன் செய்து வருகிறேன். செய்யும் தொழிலில் மனநிறைவு இருந்தாலும் சிறப்புக் குழந்தைகளைப் பார்க்கும்போதெல்லாம் மனதுக்குள் ஒரு ஏக்கம் இருந்துகொண்டே இருந்தது. இவர்களுக்கும் நவீன ஆடைகளை வடிவமைத்து, அவர்களை இன்னும் ஏன் அழகாகக் காண்பிக்கக் கூடாது என்று நினைத்தேன்.
அப்படி நினைத்ததும் எனது வருமானத்தின் ஒரு பகுதியைச் சேமித்து வைத்து, அதைச் செயல்படுத்தக் களம் இறங்கினேன். அப்படி நான் முதன்முதலில் தேர்ந்தெடுத்தது பார்வையற்ற சிறுவர் சிறுமியரை. சென்னையில் உள்ள கருணாமூர்த்தி வள்ளலார் டிரஸ்டின் பாதுகாப்பில் இருக்கும் பார்வையற்ற சிறுவர் சிறுமியர் பலருக்கு நவீன ஸ்டைலில் ஆடைகளை வடிவமைத்து அந்தக் குழந்தைகளுக்கு அணிவித்தபோது ரோஜாச் செடிகளைப் போல ஜொலித்தார்கள்.
அவர்களுக்குச் சிகை அலங்காரமும் எளிய ஒப்பனையும் செய்து, ஆடைகளை அணிவித்து, எனது மன திருப்திக்காக போட்டோ சூட் நடத்தினேன். ‘எங்கள் குழந்தைகள் இவ்வளவு அழகா!’ என்று இல்லத்தில் இருந்தவர்கள் வியந்தார்கள். ஒப்பனைக் கலைஞர், ஒளிப்படக் கலைஞர் என யாரும் பணம் வாங்கிக்கொள்ளவில்லை. உடனே நாங்கள் ஒரு டீமாக இணைந்துவிட்டோம்.
இந்தத் தீபாவளிக்கு ஸ்பாஸ்டிக் சொசைட்டியில் இருக்கும் டீன் சிறுவர் சிறுமியரில் சங்கத்தின் பொறுப்பாளர் அனுமதித்த பத்துப் பேரைத் தேர்ந்தெடுத்தேன். அவர்களில் பலர் பெண் பிள்ளைகள். அவர்களுக்காக ஆடைகளை வடிவமைத்துத் தைத்து வாங்கினேன். இந்த முறையும் ஒளிப்படக் கலைஞர் தீரன், தனது உதவியாளர்கள் கிரி, ஷெரிலுடன் எங்களுடன் இணைந்துகொண்டார்.
ஒப்பனைக் கலைஞரான ரம்யா, அந்தப் பத்து சிறார்களின் உயரத்துக்கும் முகத்தோற்றத்துக்கும் ஏற்ப, மிகப் பொறுமையாகச் சிகை அலங்காரமும் ஒப்பனையும் செய்து முடித்ததும் ஒளிப்படக் கலைஞர் தீரனின் பணி இன்னமும் சவாலாக அமைந்தது. அனைவரும் வளர்ந்த குழந்தைகள் என்றாலும் ஆட்டிசம் உலகில் சஞ்சரித்துக் கொண்டிருப்பவர்கள். அந்தக் குழந்தைகளுடன் பழகி மிகச் சிறந்த படங்களை எடுத்துக் கொடுத்தார்” எனும் தர்ஷினி, வரும் குழந்தைகள் தினத்துக்கு வேறோர் இல்லத்தில் உள்ள சிறப்புச் சிறார்களை நவீன ஆடைகளில் அலங்கரித்துப் பார்த்து அவர்களை மகிழ்விக்க அனுமதி கேட்டிருக்கிறோம்” என்கிறார்.
இந்தக் குழந்தைகளைப் படம்பிடித்திருக்கும் ஒளிப்படக் கலைஞர் தீரனிடம் பேசியபோது “குழந்தைகளைப் படமெடுப்பதுதான் ஓர் ஒளிப்படக் கலைஞருக்கு உண்மையான சவால். குழந்தைகளை அவர்களது போக்கில் விட்டுப் படம் பிடிக்க வேண்டும். அதற்கு அவர்களுடன் முதலில் நண்பன் ஆகிவிட வேண்டும். தர்ஷினி வழியாகச் சிறப்புக் குழந்தைகள் பலர் எனக்கு நண்பர்களாகக் கிடைத்தது அதிர்ஷ்டம் என்பேன்.
ஏனென்றால் அவர்கள் கடவுளின் குழந்தைகள். பண்டிகை, பிறந்தநாள் நேரத்தில் இதுபோன்ற சிறப்பு இல்லங்களுக்குச் சென்று பணம், இனிப்பு, உணவு வழங்குவோம். தர்ஷினி, தான் சார்ந்த துறையை ஒட்டியே தனது கருணை கலந்த கலையுணர்ச்சியைக் காட்ட வேண்டும் என்று மாற்றி யோசித்திருக்கிறார். சிறப்புக் குழந்தைகளைப் படமெடுக்க இனி அவர் எத்தனை இல்லங்களுக்கு அழைத்தாலும் செல்வேன்” என்கிறார். இந்தக் குழந்தைகள் மட்டுமல்ல; அவர்களைத் தனது சொந்தச் செலவில் இன்னும் அழகாக்கிப் பார்த்த தர்ஷினி, ஒப்பனைக் கலைஞர் ரம்யா, ஒளிப்படக் கலைஞர் தீரன் குழுவினரும் அழகோ அழகுதான்.
படங்கள்: தீரன்