‘ஹீரோ’வுக்கு டீஸர்!
விஷால் நடிப்பில் வெளிவந்த ‘இரும்புத்திரை’ படத்தை இயக்கியவர் பி.எஸ்.மித்ரன். அவரது இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துமுடித்திருக்கும் படம் ‘ஹீரோ’. இறுதிக்கட்ட வேலைகள் நடந்துவரும் இந்தப் படத்தில் அர்ஜுன், அபய் தியோல், இவானா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துவருகிறார்கள். இதில் சிவகார்த்திகேயனின் ஜோடியாக நடித்துவருபவர் கல்யாணி ப்ரியதர்ஷன். நேற்று வெளியான இந்தப் படத்தின் டீஸர் ட்ரைலரை சிவகார்த்திகேயனின் ரசிகர்கள், தங்களுக்கான ‘தீபாவளி ட்ரீட்’ என்று பதிவிட்டுக் கொண்டாடி வருகிறார்கள். யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கும் இப்படமே சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்து வெளிவரவிருக்கிறது.
பனிதாவின் துணிவும் பாராட்டும்
தெலுங்கில் வெளியாகி வெற்றிபெற்ற படம் ‘அர்ஜுன் ரெட்டி’. அதன் தமிழ் மறு ஆக்கமான ‘ஆதித்ய வர்மா’ படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகிறார் விக்ரமின் மகன் துருவ். அவருக்கு ஜோடியாக விளம்பர உலகிலிருந்து அறிமுகமாகிறார் பனிதா சந்து. மற்றொரு கதாநாயகியாக பிரியா ஆனந்த் நடித்திருந்தாலும் பனிதா, சர்ச்சைக்குரிய பல காட்சிகளில் துணிந்து நடித்திருக்கிறாராம். ‘விக்கி டோனர்’, ‘பிக்கு’ உள்ளிட்ட மாறுபட்ட படங்களின் இயக்குநரான சூஜித் சர்காரின் இயக்கத்தில், கடந்த ஆண்டு வெளியான ‘அக்டோபர்’ படத்தின் மூலம் பாலிவுட்டில் கதாநாயகியாக அறிமுகமாகியிருந்தார்.
லண்டனில் பிறந்து, வளர்ந்த பனிதா தற்போது இந்தியா பிராண்ட்களின் பிரபல விளம்பர மாடலாக வலம் வந்துகொண்டிருக்கிறார். ’அக்டோபர்’ இந்திப் படம் பார்த்த விக்ரம், மகனுக்கான அறிமுகக் கதாநாயகியாக பனிதாவைத் தேர்வு செய்திருக்கிறார். இதைப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நன்றியுடன் குறிப்பிட்டார் பனிதா. “துருவ் திரைப் பயணத்தின் தொடக்கத்தில் நான் இருப்பதற்காகப் பெருமைப்படுகிறேன். அவர் சிறந்த நடிகராக இருப்பதை அருகிருந்து பார்த்தேன்” என்று பாராட்டித் தள்ளியிருக்கிறார்.
சினிமா சிகிச்சை!
இந்தியத் தண்டனைச் சட்டத்தில் தற்கொலைக்குத் தூண்டுவதைக் குற்றம் என வரையறுக்கும் பிரிவு ‘இ.பி.கோ 306’. அதையே தலைப்பாக்கி, 21 நாட்களில் படத்தை எடுத்து முடித்திருக்கிறார் அறிமுக இயக்குநர் சாய். கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இயக்கியிருப்பதுடன் எதிர்மறைக் கதாபாத்திரத்திலும் அவரே நடித்திருக்கிறார். சீனு மோகன், தாரா பழனிவேல், ஸ்ரீவத்சன், கணேஷ், ரிஷி உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இந்தப் படம் பற்றிக் கேட்டபோது “அம்மா, அப்பாவுக்காக எம்.பி.பி.எஸ் படித்தேன்.
ஆனால் குறும்படங்கள் எடுத்த அனுபவம் என்னைச் சினிமாவுக்கு இழுத்துக்கொண்டு வந்துவிட்டது. முதலில் என்ன கதையை எடுக்கலாம் என்று யோசித்தபோது, கண் முன்னால் நான் கண்ட மருத்துவக் கல்வி வியாபாரத்தையும் அதில் ஒளிந்திருக்கும் அதிகார அரசியலையும் அம்பலப்படுத்தி, அதற்கு சினிமா வழியே சிகிச்சை கொடுக்க வேண்டும் என நினைத்தேன். ஒரு சாமானிய, ஏழை மாணவனின் மருத்துவக் கனவைப் பின்னணியாக வைத்து திரில்லர் கதையாக நகரும் எனது முதல் படம் மூலமே அது சாத்தியமாகியிருக்கிறது. ” என்கிறார் சாய்.
விக்ரமின் நாயகி
பிரஷாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நாயகனாக நடித்து கன்னடத்தில் மிகப் பெரிய வெற்றிபெற்ற படம் ‘கே.ஜி.எஃப்’. தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகி, இங்கேயும் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது. இரண்டு தேசிய விருதுகளையும் அள்ளியது. நாயகன் யாஷ் ஏற்ற கதாபாத்திரம் பேசப்பட்ட அளவுக்கு நாயகியாக நடித்திருந்த நிதி ஷெட்டியின் நடிப்பும் பேசப்பட்டது. தற்போது ‘கே.ஜி.எஃப்’ படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்துவரும் நிதி, நேரடித் தமிழ்ப் படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். அதுவும் சியான் விக்ரமின் 58-ம் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார். ‘டிமான்ட்டி காலனி’, ‘இமைக்கா நொடிகள்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து அஜய் ஞானமுத்து இயக்கவிருக்கும் இப்படத்துக்கு இசை, ஏ.ஆர்.ரஹ்மான். இதில் இந்திய கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார்.
இனி வில்லன் இல்லை!
‘தரமணி’ படத்தைத் தொடர்ந்து, அந்தப் படத்தின் நாயகன் வசந்த் ரவி, வடசென்னை கேங்ஸ்டராக நடித்திருக்கும் படம் ‘ராக்கி’. படப்பிடிப்பு முழுவதும் முடிந்து வெளியீட்டுக்குத் தயாராகிவிட்டது. இந்தப் படத்தின் முதல் பிரதி தயாரானதும் பாரதிராஜாவுக்குத் திரையிட்டுக் காட்டியிருக்கிறார்கள். படத்தைப் பார்த்த பாரதிராஜா, “மணிரத்னத்துகாக ‘ஆயுத எழுத்து’ படத்தில் வில்லனாக நடித்தேன். அதன்பிறகு கதைக்காகவும் எனது கதாபாத்திரத்துக்காகவும் இதில் வில்லனாக நடித்திருக்கிறேன். இனி ஒருபோதும் வில்லனாக நடிப்பதில்லை என்ற முடிவுக்கு வந்துவிட்டேன்” என்று கூறியிருக்கிறார். அவர் ஏற்ற கதாபாத்திரம், அவருக்கே கோபத்தையும் வெறுப்பையும் தரும் அளவுக்கு அதை உருவாக்கியிருக்கிறாராம் அறிமுக இயக்குநர் அருண் மாதேஸ்வரன்.