இந்து டாக்கீஸ்

பாம்பே வெல்வெட் - 6: காதல் கலைஞன் கபூர்!

செய்திப்பிரிவு

எஸ்.எஸ்.லெனின்

‘இதே போன்றதோர் அழகான மழைக்காலம். யாருமற்ற இரவின் வெளியில் நீண்டுகிடக்கும் சாலை. வலுத்தும் அலுத்ததுமாய் மழை விசிறிக் கொண்டிருக்கிறது. காதல் துணை தோள் உரச, கொந்தளிக்கும் உணர்வுகளை மழை கரைக்க இடம்கொடாது குடையை விரித்துக் கொள்கிறார்கள். இருவருக்கும் ஒரே குடை. வெளியே மழையும் உள்ளே பிரியமான பாடலின் ராகமும் சுருதி கூட்டுகின்றன.’

இப்படி ராஜ்கபூரும் நர்கீசும் திரையில் உருகும் காட்சியில், ரசிகர்கள் மனம் மலர்ந்து சிலிர்த்திருப்பார்கள். சுதந்திரத்துக்குப் பிந்தைய இந்திய சினிமாவின் எழுச்சியை எழுதும் மேற்கத்திய ஊடகங்களின் கட்டுரைகளில் எல்லாம் இந்த ‘ஸ்டில்’தான் இடம் பிடித்திருக்கிறது.

விழிப்பூட்டிய ‘அறை’

இந்தியாவின் முதல் பேசும் படமான ‘ஆலம் ஆரா’வில் நடித்த பிருத்விராஜின் தலைமகன் ராஜ்கபூர். மேடை நாடகம், சினிமா எனத் தந்தையின் ஒளிவட்டத்தை அருகிலிருந்து ரசித்த ராஜ்கபூருக்குப் பள்ளிப் பாடம் கசந்தது. 11-ம் வயதிலேயே படங்களில் தலைகாட்ட வாய்ப்புக் கிடைத்தாலும், படங்களை இயக்குவதே பால்யத்துக் கனவாக இருந்தது. அப்படியானவர்களின் முதல் படியான ‘கிளாப்’ அடிப்பதில் ராஜ்கபூரின் திரையுலகக் கனவும் தொடங்கியது. அன்றைக்குக் கனவின் தாக்கம் அதிகமோ என்னவோ, ‘கிளாப்’ கட்டையைத் தலைக்குக் கொடுத்தவராய்ப் படப்பிடிப்புத் தளத்திலேயே ராஜ்கபூர் கண்ணயர்ந்துவிட்டார். யார் மகன் என்றெல்லாம் இயக்குநர் கேதார் சர்மா பார்க்கவில்லை. ‘உனக்கெல்லாம் இயக்குநராக ஆசையா..?’ என்று கேட்டு கபூர் கன்னத்தில் அறைந்து வைத்தார். ‘அன்று மட்டுமல்ல; திரைவாழ்க்கையில் விழிப்போடிருக்க அந்த அறைதான் காரணம்’ என்று பின்னாளில் நினைவுகூர்ந்த ராஜ்கபூரின் வளர்ச்சி, அதற்கேற்ப அசுர வேகத்தில் நிகழ்ந்தது.

ஆரவார ‘ஆவாரா’

12 வருடங்கள் திரையுலகின் அத்தனை சூட்சுமங்களையும் கற்றுத் தேர்ந்த ராஜ்கபூர், ‘நீல் கமல்’ திரைப்படம் வாயிலாக பிரதான நடிகராக வெளிப்பட்டார். ஆனாலும், அவரது கனவு திரைக்குப் பின்னே இருந்ததால், 24 வயதிலேயே ‘ஆர்.கே ஃபிலிம்ஸ்’ எனத் தனது பெயரில் ஒரு திரைப்பட நிறுவனத்தைத் தொடங்கினார். தயாரித்து, இயக்கியதுடன் தானே நடித்து ‘ஆக்’(1948) என்ற திரைப்படத்தை வெளியிட்டார். படம் பெரிதாகப் போகவில்லை. இரண்டாவதான ‘பஸ்ராத்’ (1949) வெற்றிபெற்றதுடன் ராஜ்கபூருக்கு முதல் அடையாளத்தைத் தர, அடுத்து அவர் எடுத்த ‘ஆவாரா’ (1951) உலகுக்கு இந்திய சினிமாவின் அடையாளமானது. ஐம்பதுகளில் இந்திய சினிமாவின் பொற்காலம் தனது கணக்கை ‘ஆவாரா’வில் அழுத்தமாகப் பதிந்தது.
தனது ரஷ்ய விஜயம் முடித்த பிரதமர் நேரு, அப்போது மக்களவை உறுப்பினராக இருந்த பிருத்விராஜ் கபூரை அழைத்துப் பாராட்டினாராம். ரஷ்யப் பத்திரிகைகள் ‘ஆவாரா’ படம் குறித்தும் அதன் இளம் இயக்குநர் குறித்தும் பக்கம் பக்கமாகப் பாராட்டி இருந்ததை நேரு ஆச்சரியமாய் விசாரித்தாராம். பேட்டியொன்றில் ராஜ்கபூரே சொன்ன தகவல் இது. ரஷ்யா மட்டுமன்றி, மத்திய கிழக்கு நாடுகள், சீனாவிலும் ‘ஆவாரா’ வரவேற்பைப் பெறவே, அடுத்தடுத்த படங்களை அங்கு வெளியிடுவதுடன், விளம்பரத்துக்காகப் படக் குழுவினருடன் அயல்நாடுகளில் சுற்றுலா செல்வதையும் ராஜ்கபூர் தொடங்கிவைத்தார். அப்படியோர் ஆரவார வெற்றியை ‘ஆவாரா’ விதைத்தது.



சாதித்த சாப்ளின் சாயல்

போர்பந்தரில் பிறந்து, நாற்பதுகளில் இந்திய சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் ‘நூர் முகமது சார்லி’. சார்லி சாப்ளினின் இந்தியப் பதிப்பாகத் தன்னை முன்னிறுத்திய அவர் நடித்த படங்களுக்கு வரவேற்பும் இருந்தது. அப்போதைய உச்ச நட்சத்திரமான பிருத்விராஜ்கபூரைவிட அதிகமாக ஊதியம் வாங்கிய இவர், தேசப் பிரிவினைக்குப் பின்னர், பாகிஸ்தான் சென்றதில் அடையாளம் இழந்து போனார். மாறாக, பெஷாவரில் பிறந்து பிழைப்புக்காக பம்பாய் வந்து, பிரிவினையில் இங்கேயே தங்கிப்போன கபூர் குடும்ப வாரிசான ராஜ்கபூர், காலியான இந்திய சாப்ளின் இருக்கையை ஐம்பதுகளின் தொடக்கத்தில் ஆக்கிரமித்தார்.
சிரிப்பு ரகங்களில் சாப்ளினின் சாயல் அலாதியானது. உள்வேதனையை மறைப்பதற்கு வெளிப்பூச்சாகும் சாப்ளின் சிரிப்பை ராஜ்கபூர் கைக்கொண்டார். சிரிப்பு மட்டுமன்றி உடுப்பும் நடிப்புமாய் அனைத்திலும் சாப்ளினை நகலெடுத்தார். சாப்ளினின் ‘லிட்டில் டிராம்ப்’ கதாபாத்திரத்தைத் தழுவி சற்றே ‘ஆவாரா’விலும், அதன் பின்னரான ‘ 420’ படத்தில் முழுவதுமாகவும் கதாநாயகனை வடிவமைத்தார். இந்த சாப்ளின் சாயல் கதாநாயகர்களிடம் அப்போதைய ரசிகர்கள் தங்களின் பிரதியை அடையாளம் கண்டனர்.



கனம் சேர்த்த கதைகள்

காலனி ஆதிக்கத்திலிருந்து விடுபட்ட தேச மக்களிடையே சுபிட்சம் குறித்த ஏக்கம் அதிகமிருந்தது. நவீனம், வளர்ச்சி, வேலைவாய்ப்பு, சமத்துவம், சமூகநீதி கொண்ட கனவு நிலமாக கிராமப்புற மக்களை நகரங்கள் வசீகரித்தன. ஆனால், நிஜத்தில் கிராமத்தின் ஆன்மாவை இழந்த நரகமாகவே, நகரங்கள் சாமானியர்களை வதைத்தன. பிழைப்பு தேடிச் சென்ற பெருவாரி மக்களின் இந்த வாதைகளைப் பிரதிபலிக்கும்படியான திரைக்கதையை கே.ஏ.அப்பாஸ் வடிவமைத்தார். இவர்தான் தொடக்ககால ஆர்.கே பிலிம்சின் கதைகளை பட்டை தீட்டிய ஆஸ்தான பேனா! முன்னதாக ‘நீச்சா நகர்’ திரைப்படத்தின் கதையைச் செதுக்கி, அதன் ‘கான்’ திரைப்பட விழா விருதுக்குக் காரணமாக இருந்தார். அப்படிப்பட்ட அப்பாஸின், இடது சாரி சாய்வுடனான சிந்தனைகள் கபூர் படங்களில் கணிசமாகத் தூவப்பட்டிருக்கும். காதல், பாசம், இசை, பாடல் என ஈர்ப்புடைய பல அம்சங்கள் இருந்தபோதும் திரைக்கதையின் இந்த அடிநாதம் கபூர் கதைகளுக்குக் கனம் சேர்த்தன.

குடும்பப் படம்

‘ஆவாரா’ திரைப்படத்தை அப்போதைய பிரபல இயக்குநரான மகபூப்கான் இயக்குவதாக இருந்தது. கே.ஏ.அப்பாஸ் உடனுடனான அவரது கசப்பால், ராஜ்கபூரே இயக்க நேரிட்டது. மகபூப்கானின் நடிகர் தேர்வு வரிசையைக் கலைத்துப்போட்ட ராஜ்கபூர், படத்தில் தன் தந்தை வேடத்தில் பிருத்விராஜ் கபூரையே கொண்டு வந்தார். திரையில் நிஜ அப்பாவும் மகனும் வாதாடும் காட்சிகள் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தன. தந்தை மட்டுமன்றித் தாத்தாவில் தொடங்கி தம்பி சசிகபூர்வரை பலரும் திரைப்படத்தில் இடம்பிடித்தனர். அனைவரையும்விட அப்போது ராஜ்கபூரை நிஜத்திலும் நெருங்கியிருந்த நர்கிஸ் ஜோடியானார். ராஜ்கபூர் – நர்கிஸ் ஜோடியின் காதல் காட்சிகள், வசனங்கள், பாடல்கள் என அனைத்தும் சாகாவரம் பெற்றதும், இந்த ஜோடி தொடர்ந்து 16 படங்களில் டூயட் பாடியதும் தொடர்ந்தது.

கட்டழகின் காதலன்

இளமை ததும்பும் காதல் காட்சிகளை வடிவமைப்பதில் பாலிவுட்டின் முன்னோடியானார் ராஜ்கபூர். காதலுடன், கதாநாயகிகளின் அழகைப் படமாக்குவதிலும் கபூர் தனி முத்திரை பதித்தார். அதற்காக விமர்சனங்கள் பாய்ந்தாலும் அவர் அசரவில்லை. நர்கிஸ் தொடங்கி தெற்கிலிருந்து சென்ற வைஜெயந்திமாலா, பத்மினி ஆகியோரும் ராஜ்கபூரின் ரசனைக்குத் தப்பவில்லை. 22 வயதில் திருமணமாகி ஐந்து குழந்தைகளுக்குத் தந்தையான கபூர், தனது கதாநாயகிகளுடனான காதலை மறைக்கவும் இல்லை. தனது படங்களின் காதல் கதையைப் போலவே, சொந்த வாழ்விலும் சட்டம் சமூகம் என சகல விழுமியங்களையும் பொருட்படுத்தாது தனது இதயத்தையே கபூர் எப்போதும் பின்தொடர்ந்தார்.
பின்னாளில் அவர் அறிமுகம் செய்த டிம்பிள் கபாடியா, ஜீனத் அமன், மந்தாகினி ஆகியோரை உடல்சார்ந்து ராஜ்கபூர் சித்தரித்த விதம் கூடுதல் சர்ச்சைகளைச் சேர்த்தது. திட்டிக்கொண்டே திரைப்படங்களை மீண்டும் மீண்டும் ரசித்த விசித்திர ரசிகர்கள் ராஜ்கபூருக்கு வாய்த்தனர். நர்கிஸ் உடனான தனது காதல் உட்படத் தனது சொந்த வாழ்க்கையின் பெரும்பகுதியை ஒட்டி, ‘மேரா நாம் ஜோக்கர்’ என்ற 4 மணி நேரத்துக்கும் மேலாக நீளும் திரைப்படத்தை எடுத்தார். கபூரின் ஆறு ஆண்டு உழைப்பைக் கவர்ந்த அந்த திரைப்படத்துக்கு விருதுகள் வாய்த்தாலும், ரசிகர்களின் ஆதரவு கிடைக்காது போனது. அந்தக் கசப்பிலே அவர் கவர்ச்சியை அதிகம் கடை விரிக்கத் தொடங்கினார் என்றும் சொல்வார்கள்.

சாதித்த காதல் கலைஞன்

‘ஆவாரா’, ‘பூட் பாலிஷ்’ படங்கள் ‘கான்’ விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டதுடன், மூன்று முறை திரைப்படங்களுக்கான தேசிய விருதுகளும் கபூரைத் தேடி வந்தன. பத்ம பூஷன் விருது பெற்றிருந்த ராஜ்கபூர், திரையுலக வாழ்நாள் சாதனைக்கான விருது வாங்கும் விழாவில் சுருண்டு விழுந்து, ஒரு மாத காலம் மருத்துவமனையில் போராடி மறைந்தார். மருத்துவமனையில் இருந்தபோதும் இந்தியா – பாகிஸ்தானைக் காதலில் இணைக்கும் ‘ஹென்னா’ திரைப்படத்தின் கதையை விவாதித்து வந்தார்.

ஒரு பேட்டியில் தனது கல்லறை வாசகமென ‘காதலிக்க மட்டுமே விரும்பியவன்’ என்பதைச் சொல்லியிருந்தார். அந்தக் காதல் அவரது கதாநாயகிகளுக்கு அப்பால், அவர் படைத்த திரைப்படங்களிலே இருந்தது என்பதைக் காலம் கடந்து நிற்கும் ராஜ்கபூர் படங்கள் நிரூபிக்கின்றன.

தொடர்புக்கு: leninsuman4k@gmail.com

SCROLL FOR NEXT