இந்து டாக்கீஸ்

டிஜிட்டல் மேடை: காலவெளியில் ஊடாடும் ‘அல்மா’

செய்திப்பிரிவு

சு.சுபாஷ்

அறிவியல் புனைவில் தனித்துவமான கதை, காட்சியாக்கத்துடன் வெளியாகி உள்ளது ‘அன்டன்’ (Undone) வலைத்தொடர். அமேசான் பிரைம் வீடியோ தனது ஒரிஜினல்ஸ் வரிசையின் முதல் அனிமேஷன் வலைத்தொடராக செப்டம்பர் மத்தியில் இத்தொடரை வெளியிட்டுள்ளது.

குழந்தைகளுக்கான பராமரிப்பு மையத்தில் பணியாற்றும் ‘அல்மா’ என்ற செவித்திறன் குறைபாடுடைய இளம்பெண், தனது அன்றாட வாழ்க்கை சலிப்புத் தட்டுவதாக அங்கலாய்ப்பதில் கதை தொடங்குகிறது. வேலை, உணவு, உறக்கம், உறவு, பயணம், மனிதர்கள் என அனைத்தும் எந்தவொரு சுவாரசியமும் இன்றி ஊர்வதாய் அன்றைய தினமும் அவள் அலுத்துக்கொள்கிறாள். சற்று நேரத்தில் நேரும் வாகன விபத்து அல்மாவின் வாழ்க்கையைத் தலைகீழாக்குகிறது.

மருத்துவமனையில் கண்விழிக்கும் அல்மாவின் கண்களுக்கு, பால்யத்தில் இழக்க நேரிட்ட தந்தை மீண்டும் தட்டுப்படத் தொடங்குகிறார். விபத்தில் உயிரிழந்ததாகக் கருதப்பட்ட அவர் அல்மாவிடம் ஒரு வேண்டுகோளை முன்வைக்கிறார். ‘தனக்கு நேர்ந்தது விபத்தல்ல, கொலை..’ என்றும் அதன் பின்னணியைக் கண்டறியுமாறும் அவர் வேண்டுகிறார். அப்பாவுக்கு அப்பால் தன்னைச் சுற்றியிருக்கும் வேறு சிலர் வாழ்வில் நடந்தது, நடக்கவிருப்பது எனப் பலவற்றை முன்கூட்டியே ஊகிக்க முடிவதால் அல்மா மேலும் அதிர்ச்சி கொள்கிறாள்.

தனக்கு நேர்வது மாயத்தோற்றமா அல்லது மனிதப் புலனுக்கு அப்பாற்பட்ட அரூப சக்தியின் அனுக்கிரகமா எனக் குழம்புகிறாள். அல்மாவின் குழப்பங்களை இயற்பியல் பேராசிரிய ரான அவளது தந்தை, தனது ஆராய்ச்சியின் அடிப்படையில் விளக்குகிறார். மேலும் அல்மா மூளையில் இயல்பாகவே அமைந்த சிறப்பம்சங்களைச் சொல்லி, ‘காலத்தையும், வெளியையும் உன்னால் கடக்க முடியும்’ என்று மகளுக்கு நம்பிக்கையூட்டுகிறார். தொடக்கத்தில் அரண்டு போகும் அல்மா, பின்னர் நிகழ்வெல் லையில் உறைந்திருக்கும் காலவெளியை அவ்வப்போது ஊடறுக்கத் தொடங்குகிறாள். ஒருவாறாகத் தந்தையின் மரணத்துக்குப் பின்னிருக்கும் மர்மத்தையும் அடையாளம் காண்கிறாள்.

திருமணத்துக்குத் தயாராகும் சகோதரி, கணவன் குறித்த மர்மத்தை உதாசீனப்படுத்தும் தாய், அல்மாவை அப்படியே ஏற்றுக்கொள்ளும் காதலன் ஆகியோருடன், அடிக்கடி மாயமாய் வந்து மறையும் தந்தையுமாக அல்மாவின் தற்போதைய உலகம் வேறு வடிவமெடுக்கிறது. அவள் வாழ்க்கையில் பழைய சலிப்புகள் அகன்றபோதும், புதிய புதிர்களின் ரசவாதம் தொடங்குகிறது.

மனோதத்துவ திரில்லர் கதைக் குள் ஊடாடும் சர்-ரியலிசத்துக்குத் தோதாக, வித்தியாசமான அனிமேஷன் நுணுக்கத்தை ‘அன்டன்’ வலைத்தொடரில் பாவித்திருக்கிறார்கள். வழக்கமான லைவ்-ஆக்‌ஷன் ஒளிப்பதிவில் ஆயில் பெயிண்டிங் பாவனை, முப்பரிமாண அனிமேஷன் எனப் பலதையும் கலந்து, காட்சிக்கான ஆழத்தை அணுகச் செய்கிறார்கள். உயிரோட்டமான ஒளிப்பதிவு – அனிமேஷன் என இரண்டுக்கும் இடையிலான ‘ரோடோஸ்கோப் வரைகலை’ உத்தி இந்த வலைத்தொடருக்கு சிறப்பாகக் கைகொடுத்திருக்கிறது.

சிக்கலான நான்–லீனியர் காட்சிகளை கதைக்குள் கொண்டுவரவும், மாறும் மாயத்தோற்றங்களின் சிடுக்குகளில் சிக்கி மீளவும் அவை உதவுகின்றன. தலா 20 சொச்ச நிமிடங்களுக்கு விரியும் எட்டு அத்தியாயங்கள் நெடுக, மெலிதான எள்ளல் கலந்த நகைச்சுவையை தூவியிருப்பது சுவாரசியமளிக்கிறது.

ஆண்டின் தொடக்கத்தில் வெளியான ஜேம்ஸ் கேமரூனின் ‘அலிடா: பேட்டில் ஏஞ்சல்’ திரைப்படத்தில் அலிடாவாக கவர்ந்த ‘ரோசா சலசார்’, இந்த வலைத்தொடரில் அல்மாவாக வருகிறார். சித்தார்த் தனஞ்செய், பாப் ஓடன்கிர்க் உள்ளிட்டோர் உடன் நடித்துள்ளனர். ரஃபேல் பாப்-வாக்ஸ்பெர்க் உருவாக்கிய தொடரை ஹிஸ்கோ ஹல்சிங் இயக்கி உள்ளார்.

SCROLL FOR NEXT