விஜய்சேதுபதி எதையுமே அர்த்தபூர்வமாகச் செய்வதில் வல்லவர். எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் அவர் நாயகனாக நடித்துவரும் ‘லாபம்’ படத்தின் படப்பிடிப்புக்காக விவசாயிகள் சங்கக் கட்டிடம் ஒன்று தேவைப்பட்டிருக்கிறது. அந்தக் கட்டிடத்தை படப்பிடிப்பு நடந்துவரும் கிராமத்தில் செட்டாகப் போடாமல் உண்மையான கட்டிடத்தையே தனது செலவில் கட்டச்சொல்லி விட்டாராம் விஜய் சேதுபதி. படப்பிடிப்பு முடிந்ததும் கட்டிடத்தை அந்த ஊர் மக்களுக்கே கொடுக்கச் சொல்லிவிட்டாராம். விஜய் சேதுபதி ஜோடியாக ஸ்ருதி ஹாசன் நடித்துவரும் இந்தப் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு வேகமாக நடந்துவருகிறது.
தமிழ்ப் படப் போட்டி!
தமிழக அரசுடன் இணைந்து, இண்டோ சினி அப்ரிசியேஷன் ஃபவுண்டேஷன் திரைப்படச் சங்கம் ஒருங்கிணைக்கும் 17-வது சென்னை சர்வதேசத் திரைப் படவிழா, வரும் டிசம்பர் 12 முதல் 19 வரை 8 நாட்கள் சென்னையில் நடக்க இருக்கிறது. இப்படவிழாவின் அதிகாரபூர்வ போஸ்டர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இந்நிலையில் இந்தப் படவிழாவின் ஒரு பகுதியாகத் தமிழ்ப் படங்களுக்கான பிரத்யேகப் போட்டி ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. அதில் கலந்துகொண்டு முதல் இரண்டு இடங்களை வெல்லும் படங்கள், நடுவர் குழு விருதுபெறும் ஒரு படம் ஆகிய மூன்று திரைப்படங்களுக்கு ஒட்டுமொத்தமாக ரூபாய் 6 லட்சம் ரொக்கப்பரிசு வழங்கப்பட இருக்கிறது.
போட்டிப் படங்களில் தனது துறைசார் பங்களிப்பைச் சிறப்பாக வெளிப்படுத்திய கலைஞர் ஒருவருக்கு ‘அமிதாப் பச்சன் யூத் ஐகான்’ விருதுடன் ரூபாய் ஒரு லட்சத்துக்கான ரொக்கப் பரிசும் வழங்கப்பட இருக்கிறது. கடந்த 2018 அக்டோபர் 16 முதல் 2019 அக்டோபர் 15 வரையிலான ஓராண்டுக் காலத்துக்குள் தணிக்கைச் சான்றிதழ் பெற்ற படங்களை மட்டுமே அதன் தயாரிப்பாளர்கள் போட்டிப் பிரிவுக்கு அனுப்ப முடியும். ஆங்கிலத்தில் சப்-டைட்டில் செய்யப்பட்ட படத்தின் டி.வி.டி பிரதியுடன் விண்ணப்பிக்க வேண்டும் கூடுதல் விவரங்களை www.icaf.in என்ற இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம்.
ஓங்கி அடிக்கும் கூட்டணி
இயக்குநர் ஹரி - சூர்யா கூட்டணி என்றாலே அதிரடி ஆக்ஷனுக்கும் பரபர திரைக்கதைக்கும் பஞ்சமிருக்காது. ‘சிங்கம்’ வரிசைப் படங்களில் கடைசி சிங்கம் தோல்வி அடைந்ததால் இந்தக் கூட்டணி மீண்டும் இணையாது என்றார்கள். ஆனால் சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்தக் கூட்டணியை மீண்டும் இணைக்க இருக்கிறது. இது சிங்கம் வரிசைப் படங்களின் தொடர்ச்சியோ நீட்சியோ அல்ல. இம்முறை காவல் அதிகாரி அல்லாத இயல்பான கதையொன்றை சூர்யாவுக்காக எழுதி முடித்துவிட்டாரம் இயக்குநர் ஹரி.
விளையாட்டுக்கும் கோரியோகிராபி!
தமிழ் சினிமாவில் சண்டை வடிவமைப்பு தவிர, கிட்டத்தட்ட எல்லாத் துறைகளிலும் பெண்கள் நுழைந்து சாதித்திருக்கிறார்கள். தற்போது அட்லி இயக்கத்தில், விஜய் நடித்திருக்கும் ‘பிகில்’ படத்தின் ‘கிரியேட்டிவ் தயாரிப்பாளர்’ ஆகப் பணிபுரிந்திருக்கிறார் அர்ச்சனா கல்பாத்தி. திரைப்படத் தயாரிப்பு, திரையரங்கத் தொழில் ஆகியவற்றில் கோலோச்சிவரும் ஏ.ஜி.எஸ் எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனக் குடும்பத்தின் வாரிசுகளில் ஒருவர். “ ‘பிகில்’ படம் ஒரு சாதாரணப் பொழுதுபோக்கு படம் அல்ல.
இது கால்பந்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு குடும்பப் படம். எப்படி ஸ்டண்ட் கோரியோகிராபி, டான்ஸ் கோரியோகிராபி எல்லாம் இருக்கிறதோ போல எந்த விளையாட்டைக் கதைக்களமாக வைத்துப் படமெடுத்தாலும் அதில் ‘மேச் கோரியோகிராபி’ என்ற ஒன்றைப் பயன்படுத்த வேண்டும். மேச் கோரியோகிராபி உள்ளிட்ட பல தொழில்நுட்ப விஷயங்களுக்கு பணிபுரிந்திருக்கும் பல ஹாலிவுட் டெக்னிஷியங்களை, இயக்குநர் மற்றும் படக்குழுவுடன் ஒருங்கிணைக்கும் வேலை முழுவதையும் ஸ்பாட்டில் இருந்து நான் செய்திருக்கிறேன். இது மிக பிரம்மாண்டமான அனுபவத்தை எனக்குக் கொடுத்திருக்கிறது. இனி தீபாவளிக்குப் படம் பேசும்” என்கிறார் அர்ச்சனா.
பிழை யாரிடம்?
முழுவதும் சிறுவர்களின் உலகத்தை மையப்படுத்தி உருவாகியிருக்கும் ‘பிழை’ திரைப்படம் வெளியீட்டுக்குத் தயாராகிவிட்டது. டர்னிங் பாயிண்ட் புரொடக்ஷன்ஸ் சார்பில் ஆர்.தாமோதரன் தயாரித்திருக்கும் இந்தப் படத்தை ராஜவேல் கிருஷ்ணா இயக்கியிருக்கிறார். ‘காக்கா முட்டை’ படப் புகழ் ரமேஷ், ‘அப்பா’ படப் புகழ் நாசத் ஆகியோருடன் இருபதுக்கும் அதிகமான சிறுவர் சிறுமியர் அறிமுகமாகிறார்கள்.
“கல்வியின் முக்கியத்துவம், கண்டிப்பின் அவசியம் ஆகியவற்றைச் சமரசம் இல்லாமல் கூறியிருக்கும் இந்தப் படத்தில், பொருளாதார ஏற்றத் தாழ்வுகளால் குழந்தைகள் - பெற்றோர் எதிர்கொள்ளும் மனப் போராட்டங்களையும் பிழை யாரிடம் என்பதையும் உண்மையுடன் அணுகியிருக்கும் உணர்வுப் பூர்வமான படம்” என்கிறார் இயக்குநர். குழந்தை நட்சத்திரங்களுடன் மைம் கோபி, ஜார்ஜ், சார்லி உள்ளிட்ட முன்னணி குணச்சித்திர நடிகர்களும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்களாம்.
‘எதிர் வினையாற்று’ம் மருத்துவர்!
“விளம்பர ஒளிப்படம் எடுப்பதைக் கலையென நம்பி அதையே தொழிலாகவும் வரித்துக்கொண்ட ஒரு போட்டோகிராபர். பணி முடிந்து ஒரு நள்ளிரவில் வீடு திரும்பிக்கொண்டிருந்த நேரத்தில் சாலை விபத்திலிருந்து ஒரு பெண்ணைப் காப்பாற்றுகிறான்.
அந்தப் பெண்ணுடன் சேர்ந்து அவள் கொண்டு வரும் சிக்கல்கள் அவரை எப்படி அலைக்கழிக்கின்ற என்பதும் தனது கலையைக் கொண்டே சிக்கலிலிருந்து அவனால் மீள முடிந்ததா என்பதும்தான் ‘எதிர் வினையாற்று’ படத்தின் கதை” என்கிறார் படத்தைத் தயாரித்து, இயக்கி, நாயகனாகவும் நடித்துவரும் அலெக்ஸ். இவருடன் இணைந்து படத்தை இயக்குவதுடன் கதை, திரைக்கதையிலும் பணியாற்றி வருகிறார் இளமைதாஸ்.
மருத்துவத்தில் முதுநிலைப் பட்டம் பெற்ற பெற்ற அலெக்ஸ் ஒரு அவசர சிகிச்சை மருத்துவ நிபுணர். அவசர சிகிச்சைப் பிரிவில் தான் சிகிச்சை அளித்த ஓர் ஒளிப்படக் கலைஞரின் வாழ்க்கைச் சம்பவங்களை ஒட்டியே இந்தக் கதையை அமைத்ததாகக் கூறுகிறார். அலெக்ஸ் ஜோடியாக நடிப்பவர் சனம் ஷெட்டி.