இந்து டாக்கீஸ்

கூட்டாஞ்சோறு: குறி தவறாது!

செய்திப்பிரிவு

தாப்ஸியின் நடிப்பில் தீபாவளிக்கு வெளியாகவிருக்கும் ‘சாந்த் கி ஆங்க்’ படத்துக்காக பாலிவுட் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். இதில் அறுபது வயது பெண்ணாக ஸ்பெஷல் மேக்-அப் போட்டு நடித்திருக்கிறார் தாப்ஸி. சர்வதேசத் துப்பாக்கி சுடும் போட்டியில் சாதனை படைத்தவர் ‘ரிவால்வர் தாதி’ என்று புகழப்படும் உத்திர பிரதேசத்தைச் சேர்ந்த 65 வயது பிரகாஷி தோமர். அவரது வாழ்கை வரலாற்றுடன் கொஞ்சம் கற்பனை கலந்து உருவாகியிருக்கும் ‘சாந்த் கி ஆங்க்’ படத்துக்காக பிரகாஷியை நேரடியாகச் சந்தித்து, துப்பாக்கி பிடிக்க அவரிடம் கற்றுக்கொண்டு நடித்திருக்கிறாராம் தாப்ஸி.

மீண்டும் ரிலீஸ்!

நிவின் பாலியை முன்னணி மலையாளக் கதாநாயகன் ஆக்கிய படம் ‘பிரேமம்’. கடந்த 11-ம் தேதி நிவின் பாலியின் பிறந்தநாள். அதைப் பயன்படுத்திக்கொண்ட ஒரு விநியோகஸ்தர் கேரளத்தின் பாலக்காடு நகரத்தில் நான்கு திரையரங்குகளில் ‘பிரேமம்’ படத்தைத் திரையிட, அரங்கு நிறைந்த காட்சிகளாக ஐந்து நாட்களைக் கடந்து ஓடிக்கொண்டிருக்கிறது. இதைக் கண்டு நெகிழ்ந்துபோன நிவின் பாலி, “ரசிகர்கள் மத்தியில் ‘பிரேமம்’ மீதான பைத்தியம் தொடர்கிறது” என்று ட்வீட் செய்திருக்கிறார்.

திரும்பி வருகிறார்

முழுநேர அரசியலில் கவனம் செலுத்த இருப்பதால் திரைப்படங்களில் நடிக்கப்போவதில்லை என்று கடந்த தேர்தலுக்குமுன் அறிவித்தார் பவன் கல்யாண். பிரச்சாரத்துக்காக அவர் சென்ற இடங்களில் எல்லாம் திரண்ட மக்கள் கூட்டம் வாக்குகளாக மாறவில்லை.

ஆந்திரத் தேர்தலில் பெரும் தோல்வியைச் சந்தித்த பவன் கல்யாண் மீண்டும் நடிப்பின் பக்கம் திரும்பி வருகிறாராம். அவரை வைத்து 2012-ல் ‘காப்ளர் சிங்’ என்ற வெற்றியைக் கொடுத்த இயக்குநர் ஹரிஷ் சங்கரிடம் தனது அடுத்த படத்துக்கான கதையை எழுதும்படிக் கேட்டிருக்கிறாராம்.

SCROLL FOR NEXT