இந்து டாக்கீஸ்

தரைக்கு வந்த தாரகை 35: விடைபெறுகிறேன்..

செய்திப்பிரிவு

தஞ்சாவூர்க் கவிராயர்

பானுமதி எனும் பல்துறை வித்தகி முடிவுரை எழுதத் தொடங்கிவிட்டார். முடிவுரைக்கு வாசகன், அல்லது கதை கேட்பவன் மனம் அமைதியடைகிற முழுமை தேவை. அது அவரது கடைசி பகிர்தலின் ஒவ்வொரு வார்த்தையிலும் படர்ந்திருந்ததை ஒரு சக எழுத்துக்காரனாக அமைதியுடன் கேட்டு, வியந்து கொண்டிருந்தேன்.

விருதும் அரசியல் அழைப்பும்

“சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் நூற்றாண்டுக் கொண்டாட்டத்தினை ஒட்டி, அவரைப் பற்றிய ஆவணப்படம் ஒன்றை தூர்தர்ஷன் ஒளிபரப்பியது. அதில், எனக்கு அவர் பத்ம விருது வழங்கும் காட்சியும் இடம்பெற்றிருந்தது. அதைப் பார்த்ததும் அவரிடம் விருது பெற்ற தருணம் நினைவுக்கு வந்துவிட்டது. விருது வழங்கும் நிகழ்ச்சி முடிந்தவுடன் என்னையும் என் கணவரையும் குடியரசுத் தலைவர் மாளிகைக்கு அழைத்து விருந்தளித்தார். அப்போது, ‘என் கதைகளை விரும்பிிப் படிப்பதாகவும், நான் நடித்த படங்களை ரசித்துப் பார்ப்பதாகவும்’ தெரிவித்தார்.

அப்பேர்பட்ட அறிவாளி என் ரசிகராக இருப்பதை அவர் வாயால் சொல்லிக் கேட்டது நான் செய்த பாக்கியம். அன்று அவருக்கு, நானே வரைந்த ஒரு தைல ஓவியம், நீர் வண்ண ஓவியம் இரண்டையும் பரிசாாக அளித்தேன். அவற்றைப் பார்த்தவர், ‘உங்கள் திறமைக்கு முன்னால் பத்ம ரொம்ப சின்ன விருது’ என்றார். ‘ஒரு முழுநேர நடிகையாக இருந்துகொண்டு நடிப்பிலேயே முழுகி விடாமல் ராமகிருஷ்ணாவுக்கு நல்ல மனைவியாகக் குடும்பத்தையும் அழகாக நடத்திக்கொண்டு போகிறீர்கள் எனது பாராட்டுக்கள்’ என்றார்.

அடிக்கடி அவர் எனக்குக் கடிதங்கள் எழுதுவார். ‘நான் எழுதுவதையும், ஓவியம் தீட்டுவதையும் விட்டுவிடக் கூடாது’ என்று அக்கடிதங்களில் வலியுறுத்துவார். பின்னர் 1968-ல் ஆந்திராவின் ஓங்கோல் தொகுதியிலிருந்து மக்களவைத் தேர்தலுக்குப் போட்டியிடுமாறு எனக்குக் கடிதம் எழுதினார்.

அப்போது ஆந்திரப் பிரதேச முதலமைச்சராக இருந்த பிரம்மானந்த ரெட்டி, ராதாகிருஷ்ணனின் அபிப்பிராயத்தைத் தான் ஆதரிப்பதாக எனக்குக் கடிதம் எழுதினார்.
என் கணவரோ ‘அரசியல் வாழ்க்கையில் இன்று மாலை விழும். நாளை கல்விழும். ஆகவே இது என்னத்துக்கு?’ என்று சொல்லி விட்டார். ராதாகிருஷ்ணனுக்கு மிகவும் பணிவுடன் ஒரு கடிதம் எழுதிவிட்டோம். என் வாழ்க்கையெனும் ரதத்தைச் சீரோடும் சிறப்போடும் நேர்வழியில் பள்ளம் குழிகளில் விழுந்துவிடாமல் பத்திரமாகச் செலுத்திவரும் பெருமை ரதத்தின் சாரதியான என் கணவரையே சாரும்.

பாலிவுட்டுக்கு டாட்டா!

பாம்பே டாக்கீஸ் நிறுவனத்தார் பம்பாயில் ‘ஷம்ஷீர்’ படம் எடுத்தபோது நான் அசோக்குமாருடன் நடித்தேன். ‘சாம்சன் அண்டு டிலைலா’ என்ற இங்கிலீஷ் படத்தைத் தழுவி எடுக்கப்பட்ட படம். இப்படத்துக்கான பாடல்களை நான் பாடுவதா, லதா மங்கேஷ்கர் பாடுவதா என்று ஆலோசித்ததில் நான் பாடுவது நல்லது என்று முடிவாயிற்று. லதா வந்தார். நான் பாடுவதைக் கேட்டுப் பாராட்டினார். 1952-53-ல் எங்கள் திரைப்பட நிறுவனத்தால் ‘சண்டி ராணி’ படம் மூன்று மொழிகளில் எடுக்கப்பட்டது.

நான்தான் டைரக்டர். ‘ஷம்ஷீர் படத்தைத் தொடர்ந்து இந்திப் பட உலகிலிருந்து எனக்கு அழைப்புகள் வந்தன. இங்கே பரணி ஸ்டுடியோ கட்டும் வேலை நடந்துகொண்டிருந்தது. தமிழ், தெலுங்குப் படங்களிலும் நடிக்க வேண்டி வந்தது. ஆகவே, இந்திப்பட உலகுக்கு டாட்டா சொல்லிவிட்டேன். 1985-ல் இசைக் கல்லூரி முதல்வர் பதவி தேடி வந்தது. அதே ஆண்டு வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகம் எனக்கு டாக்டர் பட்டம் வழங்கிச் சிறப்பித்தது.

இசைக் கல்லூரி முதல்வர் நியமனத்தைத் தொடர்ந்து எம்.ஜி.ஆர். தனது வீட்டுக்கு அழைத்துப் பொன்னாடை போர்த்தினார்.
“அம்மா.. உங்க ரசிகை எம்.பி. ஆகிவிட்டார் தெரியுமோ?” என்றார்.
“யாரைச் சொல்றீங்க மிஸ்டர் எம்.ஜி.ஆர்.?”
“அதாம்மா! அம்மு! ஜெயலலிதா!”
“அடடே! ரொம்பச் சின்னப் பொண்ணாச்சே! எம்.பி. ஆக அரசியல் அனுபவம் நிறைய வேண்டுமே!’
“இரண்டு வருஷம் அம்மு அரசியலில் நல்லா பழகிட்டாங்க... அண்ணாவின் கொள்கைகளை அழகாகப் பேசுவாங்க” என்றார் எம்.ஜி.ஆர். சிரித்தபடி மறக்க முடியாத சம்பவம் இது.

என்னுயிர் பிரிந்தது

கோடி ராமகிருஷ்ணா எடுத்த ‘அத்தகாரு ஸ்வாகதம்’ படத்தில் நான் நடித்தபோது என் கணவரின் உடல்நிலை மோசமாகிக்கொண்டே வந்தது. ஆகவே, என் வெளி உலக வேலைகளைக் குறைத்துக்கொண்டு அவரைக் கவனிப்பதில் அக்கறை காட்டினேன். அந்தப் படத்தில் விதவைப் பெண்ணாக நடிக்க வேண்டி வந்தது. அப்போது என் மருமகள் அஸ்வினி என் காலில் விழுவதாக ஒரு காட்சி வரும். இக்காட்சியில் காலில் நான் போட்டிருந்த மெட்டி தெரியும். ஆகவே, நான் ‘கட் கட்’ என்று கத்தினேன்.

திருமணமான பெண்கள் அணிய வேண்டிய மெட்டி விதவையின் காலில் இருக்கலாமா மெட்டியைக் கழற்றி என் மேக்கப் பாக்ஸில் போட்டுவிட்டேன். அந்தப் படம் முடியும்வரை மெட்டியை நான் அணியவில்லை. அதன் பிறகு சில நாட்களிலேயே நிரந்தரமாக அதை அணியும் பாக்கியத்தை இறைவன் என்னிடமிருந்து பறித்துக்கொண்டுவிட்டார். என் கணவர் மறைந்துவிட்டார். என் மகனைப் பாரக்க நாங்கள் அமெரிக்கா சென்றபோது அங்கேயே காலமானார் என் கணவர்.

சென்னை திரும்பினேன். திரை உலக நண்பர்களும், என் ரசிகர்களும் என் துக்கத்தில் பங்கு கொண்டார்கள். அடிக்கடி மயங்கி விழுந்தேன். துன்பத் தீ என்னைச் சூழும்போதெல்லாம் எரிந்த சாம்பல் குவியலில் இருந்து எழுகிற ஃபீனிக்ஸ் பறவையாய் உயிரோடு மீள்வேன். ஆனால், என் உயிரே போனபிறகு வெறும் சாம்பல் பறவை நான். எரிந்த சிறகுகளுடன் அதனால் பறக்க முடியுமா? இனி அது எங்கு செல்லக் கூடும்?
என் வாழ்வெனும் ரதத்தின் சாரதி இறங்கி மறைந்துவிட்டார். நானும் இறங்கிவிட வேண்டியதுதான். இனியும் ஏன் இந்த இலக்கற்ற பயணம்?
‘எந்தப் புத்தகம் எழுதினாலும் அதற்கு முற்றும், சுபம் போட்டு முடித்துவிடலாம். ஆனால், சுயசரிதைக்கு மட்டும் முற்றும் போட முடியாது. அது அவன் கையில் இருக்கிறது.’ பானுமதி அம்மையாரின் குரல் தழுதழுத்தது.

நான் விடைபெறும் முன்பு சொன்னார். “ பேட்டி எடுக்கும் வேலை முடிந்துவிட்டதே என்று என்னைச் சந்திக்க வராமல் இருந்து விடாதீர்கள்!” என்றார். அதில் ஒரு பாசமிகு தாய்மையின் செல்ல அதட்டல் ஒளிந்திருந்தது. அதை உணர்ந்த கணத்தில் கலங்கும் என் கண்களைச் சிரமப்பட்டுக் கட்டுப்படுத்தினேன். “பொங்கும் கண்ணீரைத் தடுக்காதீர்கள்” என்றார். நான் வியந்தேன்!
ஒருநாள் பானுமதி அம்மையார் மறைந்துவிட்டார் என்ற செய்தி என்னைச் சேர்ந்தபோது, நான் சென்னையிலிருந்து வெகுதூரத்தில் இருந்தேன். என்னையும் அறியாமல் கண்கள் கலங்கிச் சிந்தின. ஆனால் அடுத்த சில நிமிடங்களில் மனம் ஆறுதலை உணர்ந்தது. மகத்தான கலைஞர்கள் நம் மனதிலிருந்து என்றைக்கும் மறைவதில்லை. மரணம் அவர்களிடம் தோற்றுவிடுகிறது.

(நிறைந்தது)
படங்கள் உதவி: ஞானம்
தொடர்புக்கு:
thanjavurkavirayar@gmail.com

SCROLL FOR NEXT