இந்து டாக்கீஸ்

கூட்டாஞ்சோறு: அனுஷ்காவின் ‘சைலன்ஸ்’

செய்திப்பிரிவு

அதிகமும் ஆவிக்கதைகளில் அனுஷ்காவை ஆட்டிவைத்திருக்கிறது தெலுங்கு சினிமா. கடைசியாக அவர் நடித்திருந்த ‘பாகமதி’ தமிழிலும் மொழிமாற்றுப் படமாக வெளியானது. தற்போது வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் ‘சைரா நரசிம்மா ரெட்டி' படத்தில் சிறு வேடத்தில் தோன்றிய அனுஷ்கா, அடுத்து முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் 'சைலன்ஸ்'. ஹேம்நாத் மதுகார் இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தில் வசனமே கிடையாது. இதில் ஆண்டனி என்ற நட்சத்திர இசையமைப்பாளராக நடிக்கிறார் மாதவன். தமிழில் இதை ‘நிசப்தம்’ என்ற தலைப்பில் மொழிமாற்றம் செய்து வெளியிடுகிறார்களாம்.

சல்மானுக்கு ஒரு சவுத் வில்லன்

சல்மான் கானை பாலிவுட்டின் சூப்பர் வசூல் நாயகன் ஆக்கிய படம் பத்து ஆண்டுகளுக்குமுன் வெளியான ‘தபாங்’. அப்படத்தில் சல்மான் ஏற்ற யாருக்கும் அடங்காத சுல்புல் பாண்டே என்ற காவல் அதிகாரி கதாபாத்திரம் பாலிவுட் மாசாலாவை விரும்பும் ரசிகர்களை சொக்குப்பொடிபோல் கவர்ந்து கொண்டது. முதல் பாகத்தைப் போலவே இரண்டாவது பாகமும் வெற்றிபெற்ற நிலையில் அதன் மூன்றாம் பாகத்தை இயக்கிவருகிறார் பிரபுதேவா.

ஓர் அதிரடி மசாலா கதாநாயகன் வேடத்துக்கு ஈடுகொடுக்க வேண்டுமானால் தோற்றத்திலும் நடிப்பிலும் தெறிக்கவிடும் வில்லன் தேவை. அதை மூன்றாம் பாகத்தில் திறம்பட நிறைவுசெய்ய ‘நான் ஈ’ வில்லனாக தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான சுதீப்பை தேர்வுசெய்து அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். கன்னடம், தெலுங்கில் நாயகனாகக் கலக்கிவரும் சுதீப்புக்கு வில்லனாக நடிப்பதென்றால் வெல்லக்கட்டி விருப்பம்.

மோகன்லால் அடுத்து!

மலையாளத்தின் அதிரடி அரசியல் நாயகனாக நடித்து ‘லூஸிஃபர்’ படத்தின் மூலம் மோகன்லால் கொடுத்த வெற்றியின் அலை இன்னும் அடங்கியபாடில்லை. அப்படத்தின் இந்தி மறுஆக்க உரிமை ரூ.20 கோடிக்கு விற்பனையாகி இருக்கிறதாம்.

அந்தப் படத்தின் இரண்டு, மூன்றாம் பாகங்களையும் எடுக்கத் திட்டமிட்டிருக்கிறது படத்தை இயக்கிய நடிகர் பிரித்வி ராஜ் தலைமையிலான படக்குழு. இதற்கிடையில் கேரளத்தில் அதிகமும் பேசப்பட்ட ‘கூடத்தாய்’ கொலை வழக்கு திரைப்படமாக இருக்கிறது. அதில் புலன் விசாரணை அதிகாரியாக நடிக்கிறார் லால்.

SCROLL FOR NEXT