எஸ்.எஸ்.லெனின்
‘கிராமத்து எளிய மக்களின் நிலத்தை அபகரிக்க முயலும் வில்லன், அதன் பொருட்டு அவர்களுக்கு சொல்லொண்ணா சிரமங்களைத் தருகிறான்’. தமிழ்த் திரையுலகில் தற்போது அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கும் ‘அசுரன்’ படத்தின் பின்புல சரடுகளில் ஒன்றான இதுவே, 75 ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான ‘நீச்சா நகர்’ என்ற படத்தின் கதையிலும் தொடங்கியது. புரட்சிகரமான கதையை கையண்ட ‘நீச்சா நகர்’ அப்போதைய கான் திரைப்பட விழாவின் உயர் விருதைப் பெற்ற முதல் இந்திய திரைப்படமாவும் பெருமை பெற்றது.
விடுதலை வேள்வி கொழுந்துவிட்டு எரிந்த காலத்தில், அதன் தாக்கம் அப்போதைய திரைப்படங்களிலும் வெளிப்பட்டது. பிரிட்டிஷ் அடக்குமுறை, கடும் தணிக்கையை மீறியும் திரைப்படங்கள் கோடிட்டுக் காட்டிய விடுதலை உணர்வை மக்கள் வெகுவாகக் கண்டுகொண்டனர். அவற்றின் பொருட்டு வரவேற்பைப் பெற்றத் திரைப்படங்கள் பெரும் வெற்றியும் பெற்றன. 1943-ல் அசோக்குமார் நடித்த ‘கிஸ்மத்’, வணிக ரீதியிலான அமோக வெற்றியை ருசி பார்த்த முதல் திரைப்படமானது. டிக்கெட் விலை அனாக்களில் இருந்த காலத்திலேயே அதன் வர்த்தகம் ஒரு கோடியை தொட்டது.
உசுப்பேற்றிய ஒற்றைப் பாடல்
இத்தனைக்கும் ‘கிஸ்மத்’ முழுமையான வெகுஜன திரைப்படம். அதன் கதையில் தேச விடுதலைக்கான களம் என்று தனியாக எதுவும் கிடையாது. ஆனபோதும் ஒற்றைப் பாடலின் வழியாக நாட்டு மக்கள் மத்தியிலான விடுதலை உணர்வை மீட்டெடுத்து, படத்தின் வெற்றியிலும் பாலிவுட்டின் மைல்கல்லாகவும் நிற்கிறது ‘கிஸ்மத்’. படம் தயாரானபோது நாட்டில் வெள்ளையனே வெளியேறு இயக்கம் சூடுபிடித்திருந்தது. ‘ஹிந்துஸ்தான் ஹமரா ஹை..’ என்ற பாடலில் ‘அந்நியனே வெளியேறு, இந்தியா எங்களுக்கே..’
என்பதான வரிகளில் பாடலாசிரியர் பிரதீப் விளையாண்டிருப்பார். தணிக்கையின் கண்களில் மண்ணைத் தூவுவதற்காக ஒரு இடத்தில் மட்டும், பிரிட்டிஷாரின் இரண்டாம் உலகப் போர் எதிரிகளான ஜெர்மன் , ஜப்பானை அந்நியராகச் சித்தரித்து இருப்பார்கள். மற்றபடி பாடல் முழுக்க விடுதலைப் போரில் வியாப்பித்திருந்த மக்களின் உணர்வை உசுப்பேற்றியது. திரையங்குகளில் ‘கிஸ்மத்’ திரைப்படம் மூன்றரை வருடங்களுக்கும் மேலாக ஓடியது. 32 ஆண்டுகள் கழித்து ‘ஷோலே’ திரைப்படம் வெளியாகும்வரை அதுவே பாலிவுட்டின் பெரும் சாதனையாக இருந்தது.
சிக்கந்தரில் தீரம் தந்த புருஷோத்தமன்
அலெக்சாண்டர் படையெடுப்பை மையமாகக் கொண்ட ‘சிக்கந்தர்’ (1941) திரைப்படத்தையும் அப்படித்தான் மக்கள் வரவேற்று வெற்றிப் படமாக்கினார்கள். பாரசீகத்தையும், காபூல் பள்ளத்தாக்கையும் வென்ற சூட்டில் ஜீலம் நதி வாயிலாக இந்தியாவுக்குள் நுழைகிறான் அலெக்சாண்டர். அங்கே தனது யானை படையாலும் தாயகத்தை விட்டுக்கொடுக்காத தீரத்தாலும் அலெக்சாண்டருக்கு சிம்ம சொப்பனமாகிறான் மன்னன் புருஷோத்தமன். அலெக்சாண்டராக பிரித்விராஜ் கபூரை கதாநாயகனாக்கி இயக்கியிருந்தார் சோரப் மோடி.
அவரே புருஷோத்தமனாகவும் தோன்றி நடித்தார். கோலாப்பூர் மகாராணியின் தயவால் ஆயிரக்கணக்கானப் போர் வீரர்கள், யானை, குதிரைப் படையணிகளை திரையில் காட்டி மிரட்டியது, அப்போதைய ஹாலிவுட் திரைப்படங்களுக்கு இணையாக பேசப்பட்டது. கூடவே மன்னன் புருஷோத்தமனின் வீரமும் வசனங்களும் மக்களின் விடுதலைப் போராட்ட உணர்வோடுப் பொருந்திப் போக, ‘சிக்கந்தர்’ மாபெரும் வெற்றிப் படமானது.
பெண்ணியம் பேசிய படங்கள்
தேச விடுதலையில் சமூக விடுதலை, பெண் விடுதலை உணர்வுகளும் சேர்ந்துகொண்டதில் அவற்றின் தாக்கம் திரைப்படங்களிலும் எதிரொலித்தன. மேட்டுக்குடி ஆணை காதலிக்கும் தாழ்த்தப்பட்ட பெண்ணின் போராட்டத்தை பேசிய ‘அச்சுத் கன்யா’ (1936) திரைப்படம் பெரும் சர்ச்சைகளுக்கு மத்தியில் வெற்றி பெற்றது. படத்தில் இணைந்து நடித்த அசோக்குமாரும், தேவிகாராணியும் வெற்றிகர ஜோடிகளானதுடன், அதுபோன்றச் சமூகத் திரைப்படங்கள் வெளியாகவும் அடியெடுத்துக் கொடுத்தது. இந்தத் திரைப்படத்தின் இசையமைப்பாளரான சரஸ்வதி தேவி, இந்திய சினிமாவின் முதல் பெண் இசையமைப்பாளர்களில் ஒருவர்.
‘அச்சுத் கன்யா’வின் வரிசையில் அடுத்த வருடமே, இயக்குநர் வி.சாந்தாராம், பெண் விடுதலையை மையமாக்கி ‘துனியா நா மானே’ திரைப்படத்தை வெளியிட்டார். விதவை மகள், வளர்ந்த மகன் வீட்டிலிருக்க, மகள் வயதுப் பெண்ணை மணம் முடிக்கும் வயதான ஆணுக்கு எதிராகவும் பெண்ணடிமையை எதிர்த்தும் கதாநாயகி வெகுண்டெழும் திரைப்படமாக அது உருவானது.
இதே தலைப்பில் நாராயண் ஹரி ஆப்தேவின் மராத்தி நாவலாக வெளியானபோதே சர்ச்சைகளை கூட்டிய கதையை, சாந்தாராம் திரைப்படமாக்கியபோது பெண்கள் திரையரங்குகளுக்கு திரண்டுவரத் தொடங்கினர். கதாநாயகி சாந்தா ஆப்தேவின் நடிப்பும் பல அடுக்குகளில் விரியும் ஆழமான கதையை சாந்தாராம் கையாண்ட விதமும் அப்போது பேசப்பட்டதுடன் படமும் வெற்றி பெற்றது.
இடது பக்கம் திரும்பிய சினிமா
சமூக விடுதலை பேசிய ‘நீச்சா நகர்’ திரைப்படம், இந்திய சினிமாவில் இடதுசாரித் தத்துவத்தை முன்வைத்த முதல் படங்களில் ஒன்று. ரஷ்ய எழுத்தாளர் மாக்சிம் கார்கியின் ‘தி லோயர் டெப்த்ஸ்’ நாடகம் ,ஜெர்மன் சலனத் திரைப்படமான ‘மெட்ரோபாலிஸ்’ ஆகியவற்றின் பாதிப்பில், இயக்குநர் சேத்தன் ஆனந்த், நீச்சா நகரை உருவாக்கினார்.
தேச விடுதலைப் போராட்டம் உச்சத்திலிருந்த காலத்தில், சமூக அமைப்பில் இருந்த ஏற்றத்தாழ்வை பேசியதில் மாற்று சினிமாக்களுக்கு முன்னத்தி ஏரானது இந்தப்படம். முதல் கான் திரைப்பட விழாவில் பங்கேற்றதுடன், அப்போதைய அதன் உயரிய ‘கிராண்ட் பிரிக்ஸ்’ விருதினை வேறு சில நாட்டுப் படங்களுடன் ‘நீச்சா நகர்’ பகிர்ந்து கொண்டது.
இந்த கிராண்ட் பிரிக்ஸ் விருதே பத்தாண்டுகளுக்குப் பின்னர் ‘தங்கப்பனை’ விருதாக மாற்றப்பட்டு கான் படவிழா மேடையை அலங்கரித்து வருகிறது. நாற்பதுகளில் நடைபோட்ட வெற்றிவிழா திரைப்படங்களே, அடுத்தப் பத்தாண்டுகள் பாலிவுட்டின் பொற்காலமாக மாறுவதற்கு அச்சாரமிட்டன. இந்திய சினிமாவின் பொற்காலத்தைத் தொடங்கி வைக்க, தமிழகத்தின் தங்கமகன் ஒருவர் பம்பாய்க்கு புறப்பட்டுப் போனார்.
| கோலோச்சும் கபூர் வம்சம் ‘சிக்கந்தர்’ வெற்றிப் படத்தில் நடித்த பிரித்வி ராஜ் கபூர் வாயிலாக இந்திய சினிமாவில் நடிகர்களின் குடும்ப வாரிசு அத்தியாயம் தொடங்கியது. மகன்கள் ராஜ் கபூர், ஷம்மி கபூர், சசி கபூர், பேரன்கள் ரந்தீர், ரிஷி, ராஜிவ் கபூர்கள் அதற்கடுத்த தலைமுறையின் ரன்பீர், கரிஷ்மா, கரீனா கபூர்கள் என கபூர் வம்சம் பாலிவுட்டில் நான்கு தலைமுறைகளாக கோலோச்சுகிறது. |
(வெல்வெட் வாழ்க்கை வளரும்)
தொடர்புக்கு: leninsuman4k@gmail.com