சுமன்
ஆழமான கதையின் மேல் எழுப்பப்படும் அழுத்தமானத் திரைக்கதையைக் கொண்ட திரைப்படங்களின் வரிசையில் வெளியாகவிருக்கிறது ‘மதர்லெஸ் ப்ரூக்ளின்’ திரைப்படம். இருபதாண்டுகளுக்கு முன்னர் ஜோனாதன் லெதாம் எழுதிய இதே பெயரிலான நாவலைத் தழுவியதாக ‘மதர்லெஸ் ப்ரூக்ளின்’ திரைப்படம் உருவாகி உள்ளது.
கதை 1950-களில் நடக்கிறது.
அமெரிக்காவின் ப்ரூக்ளின் நகரில் சிறிய அளவிலான துப்பறிவாளராக வலம் வருபவர் லயனல் எஸ்ராக். இவருக்கு நரம்புக் கோளாறு தொடர்பாக வித்தியாசமான குரல் தொனி இருக்கிறது. அங்க சேட்டைகள் கூடும் விசித்திரமான நரம்பு பாதிப்பும் உண்டு. ஆனால் வேறு எவருக்கும் வாய்க்காத நுண்ணிய சிடுக்குகளை விடுவிக்கும் மூளைத்திறனும் வரப்பிரசாதமாய் வாய்த்திருக்கிறது.
ஆருயிர் நண்பனும் வழிகாட்டியுமான ஃப்ராங்க் எதிர்பாரா தருணமொன்றில் கொல்லப்படுகிறார். அக்கொலையைத் தனிப்பட்ட காரணங்களுக்காக துப்பறிய கிளம்புகிறார் எஸ்ராக். அப்போது நட்பு, காதல், துரோகம், அதிகாரம் தொடர்பான ரகசியங்கள் பலவற்றை எஸ்ராக் எதிர்கொள்ள நேரிடுகிறது.
வித்தியாசமான உடல்நல பாதிப்பை பிரதிபலிக்கும் பிரதான வேடத்தை ஏற்று நடித்திருக்கிறார் எட்வர்ட் நார்டன். அத்துடன் படத்துக்கு திரைக்கதை அமைத்து, தயாரித்து இயக்கியும் உள்ளார். . இவரது நண்பராக ப்ரூஸ் வில்லிஸ் தோன்றுகிறார். செர்ரி ஜோன்ஸ், லெஸ்லி மான் உட்பட பலர் உடன் நடித்துள்ளனர். 50-களின் இசை, எட்வர்ட் நார்டனின் வித்தியாசமான நடிப்பு, பிரபலமான நாவலின் கதை ஆகியவற்றுடன் பல திரைவிழாக்கள் கண்டுவரும் ‘மதர்லெஸ்
ப்ரூக்ளின்’ திரைப்படம் நவம்பர் முதல் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.
முன்னோட்டத்தைக் காண: