இந்து டாக்கீஸ்

பாலிவுட் வாசம்

கனி

ரன்பீர் அதிர்ஷ்டசாலி

கத்ரீனா கைஃபை கேர்ள்ஃப்ரெண்டாக அடைவதற்கு ரன்பீர் அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார் நடிகர் சைஃப் அலி கான்.

இதே மாதிரி, ரன்பீரும் -கேத்ரீனாவும் சிறந்த தம்பதியாக இருப்பார்கள் என்று கரீனாவும் முன்பே கருத்து தெரிவித்திருந்தார். ஆனால், ரன்பீரும் கத்ரீனாவும் இன்னும் தங்களுக்குக் காதல் இருக்கிறதா இல்லையா என்பதை அதிகாரபூர்வமாக வெளியிடவில்லை. ஆனால், இருவருக்கும் சமீபத்தில் ‘திருமணம் நிச்சயம்’ முடிந்துவிட்டதாகப் பரபரப்பாக பேசப்பட்டது.

சைஃப் அலி கானுடன் கத்ரீனா நடித்திருக்கும் ‘ஃபேண்டம்’ ஆகஸ்ட் 28- ம் தேதி வெளியாகவிருக்கிறது. இந்தப் படத்தின் ட்ரைலர் வெளியீட்டுக்கு வந்திருந்த கத்ரீனாவிடம் அவருடைய திருமணம் குறித்துக் கேள்வி கேட்கப்பட்டது. “இப்போதைக்குத் திருமணம் செய்துகொள்வது பற்றி எந்தத் திட்டமும் இல்லை. அதற்கு இன்னும் சிறிதுகாலம் ஆகும்” என்று சொல்லியிருக்கிறார் கத்ரீனா.

பாலிவுட்டின் புது கான்

கான், சல்மான் கான், ஆமிர் கான் என பாலிவுட்டின் ‘கான்’ நடிகர்களின் பட்டியலில் புதிதாக இன்னொரு கானும் இணைந்திருக்கிறார். அவர்தான் பாகிஸ்தானிய நடிகர் ஃபவாத் கான். பாலிவுட்டில் அறிமுகமான முதல் படத்திலேயே ஃபவாத் கான் பலருடைய இதயங்களிலும் இடம்பிடித்துவிட்டார். கடந்த ஆண்டு வெளியான ‘கூப்சூரத்’ படத்தில் இவர் சோனம் கபூருடன் இணைந்து நடித்திருந்தார்.

‘வோக்’ பத்திரிகை, பாலிவுட்டின் ‘மோஸ்ட் பியூட்டிஃபுல் மேன் ஆஃப் தி இயர் 2015’ விருதை சமீபத்தில் ஃபவாத் கானுக்கு வழங்கியிருக்கிறது. தற்போது ஃபவாத் கான் ‘கபூர் அண்ட் சன்ஸ்’ திரைப்படத்தில் ஆலியா பட், சித்தார்த் மல்ஹோத்ராவுடன் இணைந்து நடித்துக்கொண்டிருக்கிறார். இந்தத் திரைப்படம் அடுத்த ஆண்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படம் வெற்றிபெற்றால் பாலிவுட்டின் ‘கான்’ கிளப்பில் ஃபவாத் கானும் இணைந்துவிடுவார்.

SCROLL FOR NEXT