சந்திப்பு: கா. இசக்கிமுத்து
‘சுப்ரமணியபுரம்’ படம்தான் ஆரம்பம். பிறகு ஏற்றத்தாழ்வுகள் இருந்தாலும், சசிகுமாரின் ஓட்டம் குறையவே இல்லை. இப்போது ‘நாடோடிகள் 2’, ‘ராஜவம்சம்’, ‘பரமகுரு’, ‘நா நா’, ‘எம்ஜிஆர் மகன்’ என ஓய்வின்றி ஓடிக்கொண்டிருக்கிறார். அந்த ஓட்டத்துக்கு இடையே தனது டிரேட் மார்க் சிரிப்புடன் தலையைக் கோதிவிட்டுக்கொண்டே நடந்த யதார்த்த உரையாடல்...
மீண்டும் சமுத்திரக்கனியுடன் கூட்டணி. எப்படி உருவானது ‘நாடோடிகள் 2’?
இந்தக் கதையை ரொம்ப நாளாகவே பண்ணலாம் எனப் பேசிட்டு இருந்தோம். ‘கொடி வீரன்’ படத்துக்கு முன்பே பண்ணலாம் என நினைத்தோம். அசோக் மரணம், பட ரிலீஸ் போன்ற பிரச்சினைகளிலிருந்து வெளியேவர சகோதரர் சமுத்திரக்கனி படம் தேவைப்பட்டது. ஏனென்றால், படப்பிடிப்பில் நல்லா பார்த்துக்குவாங்க. அந்த விதத்தில் இந்தப் படம் ரொம்பவே உதவியது. முதலில் இதற்கு வேறொரு தலைப்புதான் இருந்தது. பரணி உள்ளிட்டவர்கள் ஒப்பந்தமானதும் ‘நாடோடிகள்’ மாதிரி பரபரப்பாக இருந்ததால் ‘நாடோடிகள் 2’ என வைத்தோம். முதல் பாகம் மாதிரியே இதன் திரைக்கதையும் வேகமாக இருக்கும்.
திருநங்கைகள் குறித்து படத்தில் என்ன சொல்லியிருக்கிறீர்கள்?
அவர்களை நம்மில் ஒருவராகப் பார்க்க வேண்டும் என்பதைத்தான் சொல்லியிருக்கோம். என் கூடவே வரும் நண்பர்களில் ஒருவராக திருநங்கை நமீதா நடித்திருக்கிறார். அவரை எப்படி நடத்தணும், எப்படி பார்த்துக் கொள்ளணும் என்ற விஷயம் கருத்துத் திணிப்பாக இல்லாமல் படத்தின் கதையோடு இருக்கும். அவர் மூலமாக அந்தச் சமூகம் படும் வேதனையைப் பதிவுசெய்துள்ளார் சமுத்திரக்கனி.
இரண்டாம் பாகம் என்றாலே, முதல் பாகத்தின் ஒப்பீடு இருக்கும். அதை எப்படி எதிர்கொண்டிருக்கிறீர்கள்?
இப்படம் முதல் பாகத்தின் தொடர்ச்சி கிடையாது. இது வேறு கதை. முதல் பாகத்தில் கிடைத்த அனுபவத்தை இப்படத்திலும் பார்க்கலாம். சமூகம் சார்ந்த விஷயங்களும் படத்தில் உள்ளன. ‘நாடோடிகள்’ படத்தில் இடைவேளையிலிருந்துதான் பரபரப்பு தொற்றிக்கொள்ளும். ஆனால், இப்படத்தில் படம் தொடங்கிய 20 நிமிடத்திலிருந்தே தொற்றிக்கொள்ளும்.
தொடர்ச்சியாக ஓய்வே இல்லாமல் ஓடிக்கொண்டிருக்கிறீர்களே...
அதற்கு என்னுடைய கடன் பிரச்சினைகள்தாம் காரணம். எனக்காகவோ என் குடும்பத்துக்காவோ ஓடவில்லை. நான் நடிப்பதால் கிடைக்கும் பணம் என் கைக்கே வராது. எங்கு கடன் வாங்கினேனோ அனைத்தையும் அடைத்துவிட்டு வருகிறேன். இப்போது என்னைச் சுற்றி எந்தப் பிரச்சினையும் இல்லை. இப்படி ஓடுவதால் மட்டுமே அனைவருமே சரியாகப் பணத்தைக் கொடுத்துவிடுகிறார் என்று நம்புகிறார்கள். எனக்குப் பணம் தேவைப்படவில்லை. என் குடும்பத்துக்குத் தேவையான பணம் இருக்கிறது. கொடுத்த வாக்குக்காக ஓடிக்கொண்டு இருக்கிறேன். இதுதான் உண்மை. அதையெல்லாம் இப்போது தாண்டி வந்துவிட்டேன்.
எப்போது மீண்டும் படம் இயக்கப் போகிறீர்கள்?
‘சுப்ரமணியபுரம்’ முடித்தவுடனே நிறைய பேர் படம் இயக்கக் கேட்டார்கள். ஆனால், எனக்கு இயக்கத் தோன்றவில்லை என ‘நாடோடிகள்’ படத்தில் நடித்தேன். ‘நாடோடிகள்’ முடித்தவுடன் நடிக்கக் கேட்டார்கள். இல்ல, நான் படம் இயக்கப் போறேன் என்று போய்விட்டேன். மனசுக்குப் பிடித்த மாதிரிதான் நான் வேலை செய்வேன். நான் ரொம்பவே சோம்பேறி. ஆனால், இப்போது என்னை இப்படி ஓட வைத்துள்ளார்கள். இந்த ஓட்டம் ஓடினால்தான் என்னால் வெளியே வர முடியும். முழுசா வெளியே வந்தால்தான் படம் இயக்க முடியும். 2020-ல் இயக்குநர் சசிகுமாரைப் பார்க்கலாம்.
அசோக் குமார் மரணத்திலிருந்து வெளியே வந்துவிட்டீர்களா?
எப்படி வெளியே வர முடியும்? அது ஆறாத ரணம். பெரிய இழப்பு. ஈடு செய்யவே முடியாது. ஆனால், கொஞ்சம் மறந்து வேலைக்காக ஓடிக்கொண்டு இருக்கேன். வெற்றி, தோல்வி, பண இழப்பைக் கடந்து வந்துவிடலாம். பணம் போனாலும் இப்போது திரும்ப வந்து கொடுத்துட்டு இருக்கேன். ஆனால், அசோக் குமாருடைய உயிர்? எவ்வளவு பணம் சம்பாதித்தாலும் அந்த உயிர் திரும்ப வராது. பல விருதுகள் வாங்கி எந்த உயரத்துக்குப் போனாலும், அசோக் குமாருடைய மரணத்தை ஈடு செய்யவே முடியாது.
மீண்டும் படம் தயாரிக்கும் திட்டம் உள்ளதா?
எந்தவொரு திட்டமும் இல்லை. ரஜினி உட்பட பலரும் அறிவுரை வழங்கினார்கள். ஆனால், நானே அந்த முடிவை எடுத்துவிட்டேன் எனச் சொன்னேன். நான் வெறுமனே நடிப்பதால்தான் என்னால் இவ்வளவு தூரம் போக முடிகிறது. அசோக் குமார் இல்லாமல் தயாரிப்பு கிடையாது. அவர்தான் என் நிறுவனத்தையே பார்த்துக் கொண்டார். அசோக்கும் இல்லை. பின்பு ஏன் தயாரிப்பு? தயாரிப்பைப் பற்றி யோசிக்கவே இல்லை.
தமிழ் சினிமாவில் பட வெளியீட்டின்போது பிரச்சினைகள் ஏற்படுவது வாடிக்கையாகிவிட்டதே?
இப்போது படப்பிடிப்பு எளிதாகிவிட்டது. பட ரிலீஸ்தான் கஷ்டம். முன்பெல்லாம் சில படங்களுக்குத்தான் பிரச்சினை வரும். இப்போது பெரிய நடிகர்களின் படங்களுக்குக்கூடப் பிரச்சினைதான். இதைச் சரி செய்ய வேண்டும். கடைசி நேரத்தில் வந்து கழுத்தைப் பிடிக்கிறார்கள். அது தவறு. படத்தில் பிரச்சினை என்றால், முன்பே சொல்லி, அதற்கான வேலையைப் பார்க்க வேண்டும்.
கடைசி நேரத்தில் வந்து பிரச்சினை பண்ணும்போது, அந்தப் படத்தை நம்பி வாங்கிய அனைவருக்குமே பிரச்சினையாகிவிடுகிறது. இப்போதெல்லாம் பட வெளியீடு என்றால் உயிர் போய் உயிர் வருகிறது. சின்ன கதாபாத்திரத்தில் நடித்தவர் பணம் தர வேண்டும் என்றாலும் படத்தை நிறுத்துகிறார்கள். படத்தை நிறுத்துவதைப் பலர் வேலையாகவே வைத்திருக்கிறார்கள்.
தமிழ், தெலுங்கு, மலையாளம் என சமுத்திரக்கனி வளர்ந்துவிட்டதை எப்படிப் பார்க்கிறீர்கள்?
ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. நம்ம கூட இருந்தவர் வளரும்போது அனைவருக்குமே சந்தோஷம் இருக்கும். முதலில் ‘சுப்ரமணியபுரம்’ படத்தில் நடிகராக அறிமுகப்படுத்தினேன். பிறகு அவரோட ‘நாடோடிகள்’ படத்தில் நான் நடித்தேன். ‘போராளி’ முடித்தவுடனே நான் - சமுத்திரக்கனி - எஸ்.ஆர்.கதிர் மூவருமே பேசினோம்.
நமக்குள்ளேயே படம் பண்ண வேண்டாம். வெளியே போய்ப் படம் பண்ணலாம் என்று முடிவு செய்தோம். அப்படித்தான் ஒவ்வொரு திசையில் பயணிக்கத் தொடங்கினோம். இதில் சமுத்திரக்கனி தமிழ், தெலுங்கு, மலையாளம் என வளர்ந்து நிற்பது சந்தோஷமாக இருக்கு. இதெல்லாம் அவருக்குப் பெருமையோ இல்லையோ தெரியவில்லை. எனக்குப் பெருமைதான்.