எஸ்.சுமன்
அமெரிக்காவில் கறுப்பினத்தோர் விடுதலைக்காகக் களமிறங்கிய பெண் போராளி ஒருவரின் வாழ்க்கையைக் கதையாகச் சொல்ல வருகிறது ‘ஹேரியத்’ திரைப்படம். 19-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அமெரிக்காவில் இனவெறி தலைவிரித்தாடியபோது, பிறந்தவர் ஹேரியத் டப்மேன். பால்ய வயதிலேயே அடிமைகளில் ஒருவராக அடைக்கப்பட்டுக் கொடுமைகளுக்கு ஆளானவர். அடிமை முறையின் பரிசாக உடலிலும், மனத்திலும் காயங்களை ஆயுள் முழுவதும் சுமந்தவர். ஓர் இரவில் துணிந்து அடிமைகளின் கூடாரத்திலிருந்து தப்பித்து ஓடுபவருக்கு, சக போராளிகளின் தொடர்பு கிடைத்தது.
ஆயுதமேந்தி திரும்பும் ஹேரியத் தன் குடும்பத்தினர், உறவினர், நண்பர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோரைப் படிப்படியாக அடிமைத் தளையிலிருந்து போராடி விடுவித்தார். தொடர்ந்து அடிமைத்தனத்துக்கு எதிராகத் திரளும் ரகசிய போராட்டத்துக்கான உளவுப் பணியிலும் உள்நாட்டுப் போர் மூண்டபோது போர் முனையிலும் நின்ற முதல் பெண்ணாகவும் பிரபலமானார்.
அமெரிக்காவில் அடிமை முறை முடிவுக்கு வந்த பிறகும் ஓர் அரசியல் செயற்பாட்டாளராகப் பெண்களின் ஓட்டுரிமைக்காகத் தனது வாழ்வின் கடைசிக் காலம்வரை போராடினார். இந்த ஹேரியத் டப்மேனின் தீரம் மிக்க வாழ்க்கையை முதன் முறையாக சினிமாவாக்கும் முயற்சியே ‘ஹேரியத்’ திரைப்படம்.
ஹேரியத் டப்மேன் வேடத்தில் பாடகியும், நடிகையுமான சிந்தியா எரிவோ நடிக்கிறார். லெஸ்லி ஓடம், ஜோ ஆல்வின் உள்ளிட்டோர் உடன் நடிக்க, கஸி லெம்மன்ஸ் திரைப்படத்தை இயக்கி உள்ளார். டொரண்டோ சர்வதேசத் திரைப்பட விழா உள்படப் பல விழாக்களைக் கண்ட ‘ஹேரியத்’ திரைப்படம் நவம்பர் 1 அன்று அமெரிக்கத் திரையரங்குகளில் வெளியாகிறது.
முன்னோட்டத்தைக் காண கைப்பேசியில் ஸ்கேன் செய்க: