யுகன்
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம், கேரள சமாஜம் இரண்டும் இணைந்து வழங்கும் தென்னிந்திய மக்கள் நாடக விழா, கேரள சமாஜம் அரங்கத்தில் காந்தி ஜெயந்தியான அக்டோபர் 2 தொடங்கி 6 வரை நடைபெறுகிறது.
இந்த விழாவில் இயல், இசை, நாடகம் எனும் முத்தமிழுக்கும் சிறப்பான பங்களிப்பைக் கலைஞர்கள் தங்களின் கலைகளின் வழியாக வழங்கினர். கிரிஷ் கர்னாட் அரங்கம், மனோரமா அரங்கம், ஞாநி அரங்கம் போன்றவற்றை முறையே நாசர், சச்சு, அகஸ்டோ ஆகியோர் தொடங்கிவைத்தனர்.
‘காலத்தில் உறைந்த நாடகத் கணங்கள்’ எனும் மோகன்தாஸ் வடகராவின் ஒளிப்படக் கண்காட்சியைக் கூத்துப் பட்டறையின் தலைவர் மு.நடேஷ் தொடங்கிவைத்தார். பிரளயனின் ‘வீராயி’, ஞா.கோபியின் ‘நான் சாவித்ரி பாயைப் படிக்கிறேன்’, எஸ்.வடிவேலுவின் நெறியாள்கையில் ந.முத்துசாமியின் ‘அப்பாவும் பிள்ளையும்’, ‘நாசர்’ ஓராள் நாடகம், பசவலிங்கையாவின் ‘காந்தியும் அம்பேத்கரும்’ என்ற கன்னட நாடகம், கி.பார்த்திபராஜாவின் ‘விசாரணை’, விடியல் குமரேசனின் ‘இனி’ போன்ற நாடகங்கள் அரங்கேறின.
இன்று (வெள்ளி) நடைபெறும் மூன்றாம் நாள் காலை நிகழ்வில், இரா.காளீஸ்வரன், கி.பார்த்திபராஜா, விடியல் குமரேசன் ஆகியோர் ஒருங்கிணைப்பில் ‘அரங்கு - எதிர்ப்புணர்வு – ஜனநாயகம்’ எனும் தலைப்பில் கருத்தரங்கம் நடைபெறவுள்ளது. மாலையில் ‘கோ’, கி.ராஜநாராயணனின் ‘கீர குழம்பு’, ஷ்ரத்தாவின் ‘ஔரங்கசீப்’ ஆகிய நாடகங்கள் நடைபெறவுள்ளன.
அக்.5 அன்று, பாரதிதாசனின் ‘இரணியன் அல்லது இணையற்ற வீரன்’, லயோலா கல்லூரி மாணவர்களின் ‘நீர் மாலை’, ‘டிஜிட்டல் திண்ணைகள்’, ‘மாலி’ மலையாள நாடகம், ‘நாற்காலி’ ஆகிய நாடகங்களும், பிரளயன் மற்றும் கலைராணி நிகழ்த்தும் ‘நிலம்’, ‘எழுந்திரி’ ஆகிய ஓராள் நாடகங்களோடு, எழுத்தாளரும் நடிகருமான வேல ராமமூர்த்தியின் கதை சொல்லல் நிகழ்வும் நடக்கவிருக்கின்றன.
விழாவின் இறுதி நாளில், இமையம் எழுதிய சிறுகதையின் நாடக வடிவமான ‘போலீஸ்’ பிரசன்னா ராமசாமியின் நெறியாள்கையோடு அரங்கேறுகிறது. ஹேமா, மலர்விழி, ஃபாமிதா ஆகியோரின் ஒருங்கிணைப்பில் பாடல்களுக்கான ஓர் அரங்கத்தையும் ஒழுங்கு செய்திருக்கின்றனர். மக்களவை உறுப்பினர்கள் தமிழச்சி தங்கபாண்டியன், சு.வெங்கடேசன், கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு, ஆதவன் தீட்சண்யா ஆகியோரின் வாழ்த்துரையோடு விழா நிறைவுற உள்ளது.