முறுக்கேறிய இருவர்!
பாலிவுட்டில் இந்த ஆண்டு எதிர்பார்க்கப்படும் பிரம்மாண்ட பட்ஜெட் படங்களில் ஒன்று ‘வார்’. புகழ்பெற்ற யஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இப்படத்தின் ட்ரைலர் இணையத்தைக் கலக்கிக்கொண்டிருக்கிறது. கபூர் என்ற கதாபாத்திரத்தில் ஹிருத்திக் ரோஷனும் காலித் என்ற கதாபாத்திரத்தில் டைகர் ஷெராஃபும் எதிரும் புதிருமாக மோதும் குரு - சிஷ்யனாக நடித்திருக்கிறார்களாம்.
சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஏழு வெவ்வேறு நாடுகளில் விதவிதமான நிலப்பரப்புகளில் விரியும் இப்படம் ஒரு ஆக்ஷன் ட்ராமா வகை. தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளிலும் வெளியாகவிருக்கும் இது பாலிவுட் தயாரிப்பு என்பதால் குத்துப் பாடலும் காதலும் இல்லாமல் எப்படி? முன்னணிக் கதாநாயகியான வாணி கபூர்தான் மோதல்களுக்கு நடுவே வரும் குளிர்ச் சாரல்.
மீண்டும் த்ரிஷா
ஜீத்து ஜோசப் இயக்கத்தில், மோகன்லால் நடிப்பில் வெளியான 'த்ரிஷ்யம்' மலையாளப் படத்தின் வெற்றியும் தமிழ், தெலுங்கு, இந்தி என அதன் பயணமும் ரசிகர்களால் மறக்கமுடியாதவை. தற்போது ஆறு ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் ஜித்து – மோகன்லால் கூட்டணி இணைந்திருக்கிறது. அந்தப் படத்தில் அதிகாரபூர்வமாக இணைந்திருக்கிறார் த்ரிஷா. கடந்த ஆண்டு நிவின் பாலி நடிப்பில் வெளியான 'ஹே ஜூடு' என்ற மலையாளப் படத்தில் முதன்முதலாக மலையாளத்தில் நடித்த த்ரிஷா, மோகன்லாலுடன் முதல்முறையாக இணைந்து நடிக்கிறார்.
அண்ணனுக்காக..
சிரஞ்சீவி முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'சைரா நரசிம்மா ரெட்டி' தெலுங்குப் படத்தில் ‘ராஜபாண்டி’ என்ற துணைக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் விஜய்சேதுபதி. அதற்காக சிரஞ்சீவி நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்திருக்கிறார். “வரலாற்று நாயகன் நரசிம்மா ரெட்டியின் சுதந்திரப் போராட்டத்தை மையமாக வைத்து எடுத்திருக்கும் படம். பிஸியான நடிகரான விஜய் சேதுபதியின் தேதிகள் கிடைக்க ஒரு தயாரிப்பாளருக்கு ஒன்றிரண்டு வருடங்கள் ஆகும். அப்படி இருக்கும்போது நாங்கள் கேட்டவுடன், ‘சிரஞ்சிவீ சாரா, அவர் என் அண்ணன் மாதிரி’ என்று கூறி எனக்காக இந்தப் படத்தை ஒப்புக்கொண்டார்’ என்று நெகிழ்ச்சியுடன் கூறியிருக்கிறார்.