இந்து டாக்கீஸ்

பாம்பே வெல்வெட் 02: அதிரடி நாடியாவும் அழகு ராணியும்

செய்திப்பிரிவு

- எஸ்.எஸ்.லெனின்

‘முரட்டுக்காளை’ திரைப்படம் வெளியாகி ஒரு தலைமுறை கடந்துவிட்டது. அப்படத்தில், ஓடும் ரயிலின் கூரையில் ஜூடோ ராமுவுடன் ரஜினிகாந்த் மோதும் சண்டைக் காட்சி இன்றைக்கும் சினிமா ரசிகர்களால் அதிகம் சிலாகிக்கப்படுவது.

பாலிவுட்டில் இதே போன்ற ரயில் சண்டை ஒன்றினை மூன்று தலைமுறை கடந்த பின்னரும் மெச்சிக்கொள்கிறார்கள். ‘ஹன்டர்வாலி’ என்ற அந்த திரைப்படத்தில், ஓடும் ரயிலில் எதிரிகளைத் தாவிக் குதித்துப் பந்தாடியவர் ‘நாடியா’ என்ற நடிகை. படம் வெளியான ஆண்டு 1935.

கதாநாயகிக்குத் தட்டுப்பாடு

தனது ‘ராஜா ஹரிஸ்சந்திரா’வுக்காக நாயகியைத் தேடியலைந்தார் தாதாசாகேப் பால்கே. அக்காலத்தில் பாலியல் தொழிலில் புழங்கிய பெண்கள்வரை நடிக்க முடியாது எனக் கைவிரித்தனர். இந்தியாவின் முதல் முழுநீளத் திரைப்படம் இவ்வாறாக ஓர் ஆணைக் கதாநாயகியாகக் கொண்டே வெளியானது. ஆண்டுகள் கடந்து செல்ல, இந்தியப் பெண்கள் நடிக்கத் தயங்கிய இடங்களை ஆங்கிலோ-இந்திய, யூதப் பெண்கள் எடுத்துக்கொண்டனர்.

சலனத் திரைப்படக் காலத்தில் (Silent films) அவர்களின் மொழிப் பிரச்சினையும் பொருட்டில்லாது போனது. ஆளுக்கொரு இந்தியப் பெயருடன் வலம்வந்த அவர்களில் ரெனி ஸ்மித், சீதா தேவியானார்; சுலோச்சனாவாக வலம் வந்த ரூபி மையர்ஸ், பம்பாய் மாகாண கவர்னரைவிட அதிகமான ஊதியத்தை நடிப்புக்காகப் பெற்றதில் அப்போது பரபரப்பானார்.

எதற்கும் அஞ்சாத நாடியா

இவர்களில் ஒருவராக, ஒருங்கிணைந்த இந்தியாவின் பெஷாவரில் வளர்ந்தவர் மேரி ஆன் இவான்ஸ். இவர் அறிமுகமான ‘ஹன்டர்வாலி’ வெற்றி பெறவே, அப்படத்தில் அவர் ஏற்ற கதாபாத்திரத்தின் பெயரால் ‘நாடியா’வாகவே பின்னர் பிரபலமானார். ‘ஹன்டவர்வாலி’யில் பெண் ராபின்ஹூட்டாகத் தோன்றிய நாடியா ஆண்களை அடித்துத் துவம்சம் செய்யும் காட்சிகளைப் பார்த்ததும், அப்படத்தை வாங்க எவரும் முன்வரவில்லை. தயாரித்து இயக்கிய வாடியா சகோதரர்களே நேரடியாகப் படத்தை வெளியிட்டனர்.

கணிப்புகளைப் பொய்யாக்கி 25 வாரங்களுக்கு மேலாக ‘ஹன்டர்வாலி’ ஓடியதில், தொடர்ந்து ஆக்‌ஷன் அதிரடி திரைப்படங்களின் கதாநாயாகியானார் நாடியா. ‘எதற்கும் அஞ்சாத’ என்ற அடைமொழியுடன் பின்னர் புகழ்பெற்றார்.
வெளிநாட்டுப் பின்புலத்துடன் இந்திய சினிமாவில் அறிமுகமான நாடியா போன்ற நடிகைகள் இந்தியில் பேசி ரசிகர்களைக் கவர்ந்தனர்.

அதே காலகட்டத்தில், இந்தியாவில் பிறந்து சினிமாக்களில் ஆங்கிலத்தில் பேசி வசீகரித்த நடிகைகள் சிலரும் ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றிருந்தனர். அவர்களில் நாடியா பிறந்த அதே 1908-ல் பிறந்து வளர்ந்த தேவிகா ராணி, இந்திய வெள்ளித்திரையின் முதல் பெண் பிரபலமாக நினைவுகூரப்படுகிறார். அபிமான நடிகையாக மட்டுமின்றி வெற்றிகரமான திரைப்படத் தயாரிப்பாளர், ஸ்டுடியோ அதிபர் எனவும் தேவிகா ராணி வலம் வந்ததே அதற்குக் காரணம்.

அழகு ராணி தேவிகா

தேவிகா ராணி ஒருவகையில் கவிஞர் ரவீந்திராநாத் தாகூருக்குக் கொள்ளுப் பேத்தி. வசதியான குடும்பத்தில் பிறந்த தேவிகா ராணி, தனது பள்ளி, கல்லூரிப் படிப்புகளை லண்டனில் முடித்தார். அவற்றில் ஒன்றாக நடிப்புக் கலையையும் முறையாகப் பயின்ற தேவிகாராணிக்கு, பாரிஸ்டரும் திரைப்படத் தயாரிப்பாளருமான ஹிமான்சு ராய் உடனான சந்திப்பு நேரடியாக சினிமாவில் சங்கமிக்க உதவியது.

‘எ த்ரோ ஆஃப் டைஸ்’ படத்தில் கலை இயக்குநராக நுழைந்த தேவிகா ராணி, தன் குரு ஹிமான்சு ராயை மணந்த பிறகு, அவரின் ஜோடியாக ‘கர்மா’ என்ற ஆங்கிலத் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். ‘கர்மா’ லண்டனில் வெளியானபோது தேவிகாவின் நடிப்புடன் அவரது அழகு, ஆங்கில உச்சரிப்பையும் இங்கிலாந்துப் பத்திரிகைகள் புகழ்ந்து தள்ளின.

பாம்பே டாக்கீஸ் உதயம்

இந்தியா திரும்பியதும் கணவருடன் இணைந்து ‘பாம்பே டாக்கீஸ்’ என்ற நாட்டின் முதல் திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தை தேவிகா ராணி உருவாக்கினார். அது தயாரித்த பல்வேறு வெற்றிப் படங்களில் அவரே கதாநாயகியானார். ‘ஜீவன் நையா’ திரைப்படம் உருவானபோது மனைவி தேவிகா ராணிக்கு ஜோடி நடிகராக நடித்த நஜமுல் அசனின் நெருக்கத்தை ரசிக்காத ராய், அவரை நீக்கிவிட்டு அவசரமாகத் தனது அலுவலக உதவியாளராக இருந்த குமுத்லால் கங்குலி என்ற இளைஞரைக் கதாநாயகன் ஆக்கினார்.

அசோக்குமார் என்ற பெயரில் அறிமுகமான அந்த இளைஞர் பின்னாளில் தனக்கெனத் தனி முத்திரையை பாலிவுட்டில் பதித்தார். அசோக்குமாருடன் தேவிகாராணி இணைந்து நடித்த பல திரைப்படங்கள் வர்த்தக ரீதியாக வெற்றிபெற்றதுடன், விமர்சகர்கள் மத்தியிலும் பெயர் பெற்றன. மேட்டுக்குடி நாயகனைக் காதலிக்கும் தாழ்த்தப்பட்ட பெண்ணாக தேவிகாராணி நடித்த ‘அச்சுத் கன்யா’ (1936), அக்காலத்தில் பரபரப்பையும் வரவேற்பையும் ஒருசேர பெற்ற திரைப்படம்.

பிரத்யேக ‘பாக்ஸ்’

ஈரானியின் ‘ஆலம் ஆரா’ வாயிலாக இந்தியத் திரைப்படங்கள் பேசத் தொடங்கிய பிறகு, பேசும் திரைப்படங்கள் ‘டாக்கீஸ்’ என்றே அழைக்கப்பட்டன. இந்த டாக்கீஸ் படங்கள், தேவிகா ராணியின் ‘பாம்பே டாக்கீஸ்’ காலத்தில் இன்னொரு பரிமாணம் எடுத்தன. புராண இதிகாச, பக்திக் கதைகளே ‘டாக்கீஸ்’களின் மையமாக இருந்தன. அவற்றில் பெண்கள் நடிப்பது இயல்பானபோதும், படம் பார்க்க வரும் பார்வையாளர்களில் சாமானியப் பெண்களின் பங்கேற்பு மிகவும் குறைவாக இருந்தது.

இதற்காக டாக்கீஸ் திரையரங்குகள் தோறும் பெண்களுக்கான பிரத்யேக ‘பாக்ஸ்’ உருவானது. திரையிலும், திரைக்கு முன்பாகவும் பெண்களின் எண்ணிக்கை அதிகமான சூழலில், புராணக்கதைகளின் இடத்தைச் சமூகத்தைப் பிரதிபலிக்கும் திரைப்படங்கள் பிடிக்கத் தொடங்கின. அவற்றின் வெளிப்பாடுகளாகவே எதற்கும் அஞ்சாத அதிரடி நாடியா, அனைவரும் விரும்பும் அழகு தேவிகா ராணி ஆகிய இருவரின் படங்களும் தொடக்ககால பாலிவுட்டை அலங்கரித்தன. தாதாசாகேப் பால்கே பெயரிலான விருது நடைமுறைக்கு வந்தபோது அதைப் பெறும் முதல் சினிமா பிரபலமானார் தேவிகா ராணி. முன்னதாக பத்மஸ்ரீ விருதையும் தேவிகா பெற்றிருந்தார்.

சர்ச்சை முத்தம்

ஆங்கிலத்தில் தயாரான ‘கர்மா’ இந்தியாவில் ‘நாகன் கி ராகினி’யாக இந்தியில் வெளியானது. அதில் நாயகனும் நிஜ கணவருமான ஹிமான்சு ராய்க்கு தேவிகா நீண்ட முத்தம் ஒன்றை அளிப்பார். நான்கு நிமிடத்துக்கு நீளும் இந்த முத்தம் அக்காலத்தில் பலத்த சர்ச்சையை கிளப்பியது.

ரங்கூன்

தேவிகா ராணியைப் போன்றே நாடியாவும் தனது திரையுலக குருவையே திருமணம் செய்துகொண்டார். வாடியா சகோதரர்களில் ஒருவரான ஹோமி வாடியாவை மணந்த நாடியாவின் வாழ்க்கையைத் தழுவி, கங்கனா ரணவத் நடிக்க ‘ரங்கூன்’ என்ற திரைப்படம் இரு வருடங்களுக்கு முன்னர் வெளியானது. இதற்கு எதிராக வாடியா நிறுவனம் நீதிமன்றம் செல்லவே, ‘ரங்கூன்’ படக்குழு தங்கள் கதை முழுக்கவும் கற்பனை என அறிவித்தது.

தொடர்புக்கு: leninsuman4k@gmail.com

SCROLL FOR NEXT