இந்து டாக்கீஸ்

தரைக்கு வந்த தாரகை 32: பூவாகி காயாகி...

செய்திப்பிரிவு

தஞ்சாவூர்க் கவிராயர்

வசன உச்சரிப்புக்குப் பெயர்போன சிவாஜியிடம் தனது தமிழ் உச்சரிப்புப் பற்றிக் கருத்துக் கேட்டார் பானுமதி அம்மையார். சிவாஜியோ மனத்தில் பட்டதை மறைக்காமல் கூறினார். அதை நினைவுகூர்ந்த பானுமதி அம்மையார், சட்டென்று தனது ஜாதகத்தைத் துருவப்போய் அதில் கிரக சஞ்சாரங்களைப் பார்த்து சஞ்சலப்பட்ட தருணத்தைப் பகிரத் தொடங்கினார்.

“ஏழரைச்சனி என் கணவரையும் விட்டுவைக்கவில்லை. திரைப்படத் தயாரிப்பிலும் ஸ்டுடியோ நிர்வாகத்திலும் ஆர்வம் குன்றிக்கொண்டே வந்தது. வீட்டில் ஓய்வெடுக்கவே மனம் நாடியது. நிலபுலன்களை நிர்வாகம் செய்வதில் ஈடுபாடு உண்டாயிற்று. பரணி ஸ்டுடியோவைக் குத்தகைக்கு விடுவதென்று முடிவு செய்தோம். ஜப்பான் போய்விட்டு வரலாமே என்று தோன்றிற்று. இப்படியெல்லாம் மனசை அலைக்கழிப்பது ஏழரைச்சனியின் வேலைதான்.

தென்னிந்திய சினிமா வர்த்தக சபையில் அங்கம் வகித்த ஏ.எல்.சீனிவாசனுக்கும் என் கணவருக்கும் நல்ல நட்பு இருந்தது. ஏ.எல்.எஸ். கவிஞர் கண்ணதாசனின் மூத்த சகோதரர். எங்கள் ஸ்டுடியோ அதிர்ஷ்டக்கார இடம் என்பதாகத் திரையுலகில் ஒரு நம்பிக்கை இருந்தது. ஏ.எல்.எஸ்ஸுக்கும் அப்படி ஒரு நம்பிக்கை இருந்தது. ஆகவே, பரணி ஸ்டுடியோவை அவரே குத்தகைக்கு எடுத்தார். அந்த வருஷமே அவர் பிலிம் சேம்பரின் தலைவராகவும் ஆனார். முதல் தடவையாக கே.எஸ். கோபாலகிருஷ்ணனுக்கு பரணி ஸ்டுடியோவில் படம் எடுக்கும் வாய்ப்பைக் கொடுத்தார்.

‘கற்பகம்’ திரைப்படம் அங்குதான் படமாக்கப்பட்டது. கே.ஆர்.விஜயா திரை உலகுக்கு அறிமுகமானது இந்தப் படத்தில்தான். அந்தப் படம் ஹிட் ஆனது. தொடர்ந்து பரணி ஸ்டுடியோவில் எடுக்கப்பட்ட பல படங்கள் ஹிட் ஆயின. தொடர்ந்து அவர் சில வெற்றிப் படங்களை எடுத்தார். மற்ற தயாரிப்பாளர்கள் பரணி ஸ்டுடியோவில் எடுத்த படங்களும் வெற்றிப் படங்களாகவே அமைந்தன.
என் மகன் பரணியின் எஸ்.எஸ்.எல்.சி தேர்வு நெருங்கிக் கொண்டிருந்தது. நாங்கள் இருவரும் ஜப்பான் போவதற்குப் பதிலாக என் கணவர் மட்டும் சுற்றிப் பார்த்துவிட்டு வந்தார். வரும்போது டோக்கியோவிலிருந்து எனக்கு ஒரு முத்து மோதிரம் வாங்கி வந்தார்.

எஸ்.எஸ்.வாசன் அழுதார்!

அவர் திரும்பிய கையோடு நாங்கள் ஒரு படம் எடுக்கத் திட்டமிட்டோம். வங்க மொழிக் கதை ஒன்றைப் படமாக எடுக்க ஆசைப்பட்டு கல்கத்தா சென்றார் என் கணவர். ‘படி தீதி’ என்ற வங்கப் படம் அப்போதுதான் வெளியாகியிருந்தது. சரத் சந்திரசட்டர்ஜியின் நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட அந்தப் படத்தில் உத்தம் குமார் நடித்திருந்தார். கதையும் அவர் நடிப்பும் என் கணவருக்கு நிறையவே பிடித்துப் போய்விட்டது.

படத்தின் உரிமையையும் ஒரு பிரிண்டையும் வாங்கிக்கொண்டு சென்னை வந்து சேர்ந்தார். உத்தம் குமாரின் நடிப்பைப் பார்த்துவிட்டு அவர் நடித்த ரோலில் நாகேஸ்வர ராவ் நடித்தால் நன்றாக இருக்கும் என்று பட்டது. அந்தப் படத்தை நாகேஸ்வர ராவை பலமுறை பார்க்கும்படி தூண்டினார் என் கணவர். ஏ.என்.ஆர். அந்தப் படத்தில் பெற்ற உற்சாகம் ‘பாதசாரி’யில் ஒப்பற்ற நடிப்பாக வெளிப்பட்டது.

அவரது ஜோடியாக செளகார் ஜானகி நடித்திருப்பார். எங்கள் நிறுவனத்தின் படத்தில் அவர் நடித்தது அதுவே முதல் முறை. அவர் ஏற்கும் கதாபாத்திரம் எதுவானாலும் அதில் அப்படியே ஜீவனைக் கொண்டுவந்து படம் பார்ப்பவர்களை நெகிழவைத்துவிடுவார். அபாரமான நடிகை அவர்!
‘பாதசாரி’ படத்தை நாங்கள் தெலுங்கிலும் தமிழிலும் எடுத்தோம். தமிழில் அந்தப் படத்தின் பெயர் ‘கானல்நீர்’. வலம்புரி சோமநாதன்தான் வசனகர்த்தா. ஜெமினி அதிபர் எஸ்.எஸ்.வாசன் அந்தப் படத்தைப் பார்த்துவிட்டுக் கண்ணீர் விட்டார். என் கணவரின் திறமை அப்படத்தில் அபாரமாகப் பிரகாசித்தது. படத்தின் ஒவ்வொரு அம்சமும் கலைச் சிகரத்தின் உச்சியைத் தொட்டது. ஜெமினி பிக்சர்ஸ் நிறுவனம் அப்படத்தை வெளியிட்டது.

‘அன்னை’யும் நானும்

தெலுங்குப் படக் கலைஞர்கள் தமிழ்ப்பட உலகில் கோலோச்சிய காலம் அது. ஏ.வி.எம். புரொடக் ஷன்ஸ் நிறுவனம் ‘மாயா மிருகா’ என்ற வங்கப் படத்தின் உரிமையை வாங்கித் தமிழில் ‘அன்னை’ என்ற பெயரில் எடுத்தனர். எனக்கு அந்தப் படத்தைப் போட்டுக்காட்டி அதில் என்னை நடிக்கும்படி கேட்டுக்கொண்டார்கள். அதில் செளகார்ஜானகி, எஸ்.வி.ரங்காராவ், ஹரபத் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்கள். சௌகார் ஜானகி ஏற்று நடித்த கதாபாத்திரம் நன்றாகவே இருந்தது. எனக்கு ஒதுக்கப்பட்ட கதாபாத்திரம் கொஞ்சம் அசட்டுத்தனமாகவும் வில்லிபோலவும் இருந்தது.

அந்தக் கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு நான் மிகவும் போராட வேண்டி இருந்தது. நானே ஓர் எழுத்தாளர் என்பதால் திரைக்கதையில் உள்ள குறைகள் என் கண்களில் பட்டன. அதையெல்லாம் சரிசெய்து கொஞ்சம் பாலிஷ் பண்ணி எழுத வேண்டி வந்தது. இதைத் தயாரிப்பாளரின் நல்லதுக்குத்தான் செய்கிறோம் என்று நினைத்துக்கொள்வேன். என் சொந்தப்படம் போலவே நினைத்து சில கலாபூர்வமான ஜோடனைகள் செய்தேன். படத்தை என்னால் முடிந்த அளவு அழகாக்கினேன் என்றுதான் சொல்லணும்.

ஈகோ இல்லாத இயக்குநர்கள்

இயக்குநர்கள் சிலர் இந்த விஷயத்தில் என்னோடு ஒத்துப்போவதில்லை. நான் சொல்லிக் கேட்க வேண்டுமா என்று ஈகோ வந்துவிடும். ஆனால், என் சுபாவத்தையும் கற்பனை ஓட்டத்தையும் புரிந்துகொண்டவர்கள் நான் செய்வதைப் பாராட்டவே செய்வார்கள். இப்படிப்பட்ட டைரக்டர்களாக நான் குறிப்பிட விரும்புவது. பி.என்.ரெட்டி, வி.மதுசூதனராவ், கிருஷ்ணன் - பஞ்சு, ஜி.ராமிநீடு ஆகியோரைத்தான்.

‘அன்னை’ படத்தில் நான் செய்த மாற்றங்களை கிருஷ்ணன் பஞ்சு இருவரும் மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டு பாராட்டவும் செய்தார்கள். அவர்களின் ஒத்துழைப்போடு திரைக்கதையில் பெரிதாகச் சில மாற்றங்களைச் செய்தேன். ஒரு புல்டோசர் போலக் கதைக்களத்தை மோதித்தள்ளி புரட்டிப்போட்டு வேறுமாதிரி மாற்றினேன். விசித்திரமான கதாபாத்திரத்தை நான் சித்தரிக்க வேண்டியிருந்தது.

தனக்குக் குழந்தை பிறக்காது என்று அந்தப் பெண்மணிக்குத் தெரியும். தங்கையின் மகனைத் தத்தெடுத்து வளர்க்கிறாள். குழந்தையின் மீது அவள் காட்டும் அபரிமிதமான பாசம் குழந்தையின் பெற்றோரை முள்ளாகக் குத்துகிறது. இந்தப் பெண்மணியோ என்றைக்கு அந்தப் பையன் தன்னை ‘நீ என் தாயில்லை’ என்று ஏற்க மறுத்துவிடுவானோ என்ற பயத்திலேயே வாழ்கிறாள். இந்தக் கதாபாத்திரத்தை நான் சித்தரித்த விதத்தால் படித்தவர் முதல் பாமரர் வரை அனைவரிடமும் எனக்குப் பாராட்டுக் கிடைத்தது. படம் 100 நாட்களுக்குமேல் ஓடியதை மறக்க முடியாது” என்று கண்களில் நிறைவை ஒளிரவிட்டு நிறுத்தினார் பானுமதி. ‘அன்னை படத்தில் நீங்கள் பாடிய ‘பூவாகி காயாகி’ பாடலைக் கேட்கணும் போல இருக்கு!’ என்றேன் நான்.

“அதுக்கென்ன பாடினால் போச்சு!” என்று சிரித்தபடியே பாடினார்.
‘பூவாகி காயாகி
கனிந்த மரம் ஒன்று
பூவாமல் காய்க்காமல்
கிடந்த மரம் ஒன்று
காய்க்காத மரத்தடியில்
தேனாறு பாயுதடா
கனிந்து விட்ட சின்னமரம்
கண்ணீரில் வாடுதடா...’

பானுமதி பாடிக்கொண்டிருந்தார்...
இத்தனை வருடங்களைக் கடந்தும் தாய்மையின் துடிப்பைத் தனது குரலில் உயிர்ப்புடன் தக்க வைத்திருந்த அவர் முன்னால், ஒற்றை ரசிகனாய் அமர்ந்து, கைதட்ட மறந்து, கண்கள் திரளக் கரைந்து கொண்டிருந்தேன் நான்.

(தாரகை ஒளிரும்)
தொடர்புக்கு:
thanjavurkavirayar@gmail.com
படங்கள் உதவி: ஞானம்

SCROLL FOR NEXT